குடிஅரசு இதழ் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 2-5-1925ஆம் நாள் தொடங்கி பெரியாரால் வெளியிடப்பட்ட ஒரு கொள்கை இதழாகும்.[1] தமிழ்ச் சமூக, அரசியல், மெய்யியல் வரலாற்றில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று. சுயமரியாதை, பகுத்தறிவு, இறைமறுப்பு, மொழி பற்றிய பல முக்கிய கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்தன.[1]

செப்டம்பர் 3, 1939 குடியரசு இதழின் முதல் பக்கத்தில் ”வீழ்க இந்தி” என்ற தலைப்பிட்ட தலையங்கம் காணப்படுகிறது

தொடக்கம்

தொகு

ஈ.வெ.ரா.வும் அவர் நண்பர் தங்கவேல்பிள்ளையும் 1922ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது தமது கருத்துகளை எடுத்துரைக்க ஓர் இதழ் தொடங்க வேண்டும் என நினைத்தனர். அதன் விளைவாக, 19-1-1923ஆம் நாள் 'ஜனநாயகம்' என்பது குடிஅரசு இதழை ஈ.வெ.ரா. பதிவுவிட்டார். ஆனால் இதன் முதல் இதழ் 2-5-1925ஆம் நாள் சனிக்கிழமை வெளிவந்தது.[2] இதன் முதற்படியை வெளியிட்டுத் தொடங்கி வைத்தவர் தமிழறிஞராகவும் திருப்பாதிரிப்புலியூர் திருமடத்தின் தலைவராகவும் விளங்கிய ’சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி’ எனும் ’ஞானியார் அடிகள் ஆவார்.[1]

நோக்கம்

தொகு

குடிஅரசு இதழின் நோக்கத்தை 2-5-1925 நாளிட்ட அதன் முதல் இதழில், "நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்ய வேண்டும். நாட்டு மக்களின் உடல்வளர்ச்சிக்காவும் அறிவுவளர்ச்சிக்காகவும் கலைவளர்ச்சிக்காவும் மொழிவளர்ச்சிக்காவும் இதன் மூலம் உழைத்துவருவோம். ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்துத் 'தேசம், தேசம்' என்று கூக்குரலிடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. மக்களுள் தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கிவளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்" என்று ஈ.வெ.ரா. வரையறுத்துக் கூறியுள்ளார்.[3]

ஆசிரியர்கள்

தொகு

குடிஅரசு இதழ் தொடங்கப்பட்டபொழுது ஆசிரியர்கள் என "ஈ.வெ.இராமசாமிநாயக்கர்", "வ. மு. தங்கப்பெருமாள்பிள்ளை" என அவரவர் சாதிப்பின்னொட்டோடு பெயரிடப்பட்டது. பின்னர், தங்கப்பெருமாள்பிள்ளைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 26-7-1925ஆம் நாளிட்ட இதழிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு, ஈ.வெ.இராமச்சாமிநாயக்கர் என்னும் பெயரே ஆசிரியரெனக் குறிக்கப்பட்டது. 25-12-1927ஆம் நாளிட்ட இதழிலிருந்து ஆசிரியர் பெயர் சாதிப்பெயர் நீக்கப்பட்டு ஈ.வெ.இராமசாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

வெளியீட்டாளர்கள்

தொகு
 1. ஈ.வெ.இரா. நாகம்மையார்[2]

அச்சிட்டோர்

தொகு

துணையாசிரியர்கள்

தொகு

இவ்விதழில் துணியாசிரியராகப் பணியாற்றிய மணவை ரெ. திருமலைசாமை 1-9-1926ஆம் நாள் விலகினார்.[4] இவருக்குப்பின் திரிசிரபுரம் ஆ. நடராசன் என்பவர் துணையாசிரியராகப் பணியாற்றினார்.[5]

படைப்பாளர்கள்

தொகு

குடிஅரசு இதழில் பின்வருவோரை உள்ளிட்ட பலரும் தம் படைப்புகளை வெளியிட்டனர்:

 1. கைவல்லிய சாமி
 2. சந்திரசேகரப் பாவலர்
 3. ஈழத்துச் சிவானந்த அடிகள்
 4. சாமி. சிதம்பரனார்
 5. பண்டித முத்துச்சாமி
 6. கே. எம். பாலசுப்பிரமணியம்
 7. மா. சிங்காரவேலர்
 8. மயிலை சீனி. வேங்கடசாமி
 9. கோவை அய்யாமுத்து
 10. ஜனக சங்கர கண்ணப்பர்
 11. சா. குருசாமி
 12. ப. ஜீவானந்தம்
 13. பாரதிதாசன்
 14. எம். ஆர். மத்திரன்

இதழின் பகுதிகள்

தொகு

குடிஅரசின் இதழில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றன:[2]

 1. தலையங்கம் எனும் ஆசிரியவுரை
 2. பல்துறைக் கட்டுரைகள்
 3. அரசியல், சமுதாயம், இலக்கியம், பண்பாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளின் செய்திகள்
 4. பெட்டிச்செய்திகள்
 5. பிற இதழ்கள் பற்றிய திறனாய்வுகள்
 6. ஆசிரியர்க்கு மடல்கள்
 7. சுயமரியாதை இயக்கக் குறிக்கோள் மொழிகள்
 8. கவிதைகள்
 9. விளம்பரம்

எழுத்துச்சீரமைப்பு

தொகு

ணா, னா, றா, ணை, னை லை, ளை ஆகிய சீர்திருத்த எழுத்துவடிவங்களை 20-1-1935ஆம் நாளிட்ட இதழிலிருந்து பயன்படுத்தப்பட்டது.[2] அதேபோல ஐ என்பதை அய் எனவும் ஔ என்பதை அவ் எனவும் 27-12-1947ஆம் நாளிட்ட இதழிலிருந்து பயன்படுத்தப்பட்டது.[2]

வழக்கு

தொகு

1933 திசம்பரில் குடிஅரசு இதழில் ஈ.வெ.இரா.வால் எழுதப்பட்ட, "இன்றைய ஆட்சிமுறை என் ஒழிய வேண்டும்?' என்னும் ஆசிரியவுரைக்காக அவருக்கு ஒன்பது மாதச் சிறைத்தண்டனையும் 300 ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டன. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக இதழின் வெளியீட்டாளர் கண்ணம்மாவிற்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 300 ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டன. தண்டத்தொகையைக் கட்டாவிட்டால் மேலுமொரு மாதச் சிறைத்தண்டனையும் என தீர்ப்பளிக்க்பட்டது. மேலும் குடிஅரசு இதழுக்கும் அச்சகத்திற்கும் பிணையத் தொகையும் கட்டுமாறு அரசால் உத்தரவிடப்பட்டது. இதன் விளையாக குடிஅரசு இதழ் 19-11-1933ஆம் நாளிட்ட இதழோடு சிறிதுகாலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.[2]

மீண்டும் வெளியீடு

தொகு

மீண்டும் 13-1-1935ஆம் நாளிட்ட இதழின் வழியாக குடிஅரசு மீணடும் வெளிவரத்தொடங்கியது.

சான்றடைவு

தொகு
 1. 1.0 1.1 1.2 நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 131-132
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 இறையன் அ; இதழாளர் பெரியார்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை; முதற்பதிப்பு, 2005
 3. கிருட்டினமூர்த்தி சா, முனைவர்; அணிந்துரை, இதழாளர் பெரியார்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை; முதற்பதிப்பு, 2005; பக்.iv
 4. குடிஅரசு, 29-8-1926, பக்.கக
 5. குடிஅரசு; 1929-12-15; பக்.11
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடி_அரசு&oldid=3516179" இலிருந்து மீள்விக்கப்பட்டது