குப்ஜிகா
குப்ஜிகா, வக்கிரேசுவரி, வக்கிரை என்றெல்லாம் அறியப்படும் தேவதை, புறச்சித்தாந்த மந்திர மார்க்கத்தில் ஒன்றான குப்ஜிகநெறியின் முதன்மைத் தெய்வம் ஆவாள்.[1] ஆதிசக்தியின் முதன்மையான அம்சங்களுள் ஒன்றாக குப்ஜிகையைக் கண்டு வழிபடும் வழக்கம், பொ.பி 12ஆம் நூற்றாண்டில் வட இந்தியா முழுவதும் மிகப்பரவலாக இடம்பிடித்திருந்தது.[2] தாந்திரீக நெறியில் இரகசியமாக மேற்கொள்ளப்படும் குலமார்க்கச் சடங்குகளில் இத்தேவி போற்றப்பட்டு வந்திருக்கிறாள்.[3]
சொற்பிறப்பியல்
தொகுகுப்ஜிகம் என்றால் வடமொழியில் கூனல் முதுகு என்று பொருள். குப்ஜிகை தன் நாயகன் நவாத்மனுடன் கலவிகொள்ளும்போது, நாணமும் அச்சமும் மேலிடக் குனிந்துநின்றதால் இப்பெயர் அவளுக்குக் கிடைத்ததாக ஒரு தொன்மம் சொல்கின்றது. குப்ஜினி, குப்ஜி, குஜை முதலான பெயர்களும் அவளது குனிந்த நிலையைக் குறிப்பன. கஞ்சினி, வக்கிரை, வக்ரிகை முதலான பெயர்கள் அவள் வளைந்து நடப்பவள் என்பதைக் குறிப்பிடுகின்றன. சிஞ்சினி என்கின்ற இன்னொரு பெயர், அவள் புளிய மரத்துக்குரிய தேவதை என்பதைச் சொல்கின்றன. குலாலிகை என்பது அவள் குயவர் சமூகத்துக்குரியவள் என்பதைக் காட்டும்.[4]
மெய்யியல்
தொகுசாக்த மரபுகளில் முக்கியமான கிரமக் கிளைநெறியில் குப்ஜிகை வழிபடப்படுகின்றாள். அவளது வழிபாடு பற்றி, "பிசுமதம்" அல்லது "குப்ஜிகாமதம்" என்று அறியப்படும் தந்திர நூல் விரிவாகச் சொல்கின்றது. குப்ஜிகையைத் தனியாகவோ, அவள் நாயகன் பைரவனுடன் சேர்த்தோ வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது. மந்தானபைரவம், சத்சகஸ்ரம் முதலான நூல்களிலும் இத்தேவியின் வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மிகச்சக்தி வாய்ந்தவளாகவும், வேண்டுவார்க்கு அளவிலா நற்பலன்களை அருள்பவளாகவும் இனங்காணப்படும் இத்தேவியின் வழிபாடு, மறைந்துவிட்ட ஒன்றாகவே கருதப்பட்டுவந்தபோதும், கடந்த நூற்றாண்டிலேயே அதன் தொடர்ச்சித்தன்மை வெளிக்காட்டப்பட்டது.[5]
"சிஞ்சினிமத தந்திர" நூல் சொல்வதன்படி, கௌல நெறியானது, நான்கு திக்குகளுக்கும் நான்கு சீடர்கள் வழியே கற்பிக்கப்பட்டதாகவும், நவாத்மன் மற்றும் குப்ஜிகையை மையமாகக் கொண்ட பஸ்சிமநம்னய நெறி, மேற்குத் திசையில் வழங்கப்பட்டதாகவும் விவரிக்கின்றது. இதுபோல், கிழக்கே வழங்கப்பட்ட பூர்வாம்னய நெறி, குலேசுவரியை வழிபடும் திரிகநெறிக்கும், வடக்கே வழங்கப்பட்ட உத்தராம்னய நெறி, காலசங்கர்ஷணியை வழிபடும் காளிகுலத்துக்கும், தெற்கே வழங்கப்பட்ட தக்ஷிணாம்னய நெறி, காமேசுவரியை வழிபடும் ஸ்ரீகுலத்துக்கும் அடிப்படையாக அமைந்ததாக மேலும் சொல்லப்படுகின்றது. தெற்கே வழக்கிலிருக்கும் ஸ்ரீகுலமும் வங்கத்தில் வழக்கிலிருக்கும் காளிகுலமுமே இன்றைக்கும் நீடிக்கும் சாக்தப்பிரிவுகளாக விளங்குகின்றன. திரிகமும் குப்ஜிகநெறியும், இன்று காசுமீர சைவத்தின் கிளைகளாகவே அறியப்படுகின்றன.[6]
வழிபாடு
தொகுஇமயமலைப் பகுதிகளில் ஆரம்பித்த குப்ஜிகையின் வழிபாடு, நேபாளம், மற்றும் வட இந்தியாவின் குறிப்பிடத்தக்க பிரதேசங்களில் மிக்க ப்புகழ்பெற்றிருந்தது. நேவாரிகளின் இரகசியமான கௌல சடங்குகளில் ஒன்றில் இத்தேவி வழிபடப்படுவது, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உலகுக்குத் தெரியவந்தது.[7] நாத சைவத்தில் முக்கிய இடம் வகிக்கும் நவநாத சித்தர்களே குப்ஜிகை வழிபாட்டை ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகின்றது.[1] இந்தியாவிலும் நேபாளத்தின் தெராய் பகுதியிலும் இவ்வன்னையின் சிறிய ஆலயங்கள் காணப்படுகின்றன. வடநாட்டுக் குயவர் சமூகத்தின் குலதெய்வங்களில் ஒன்றாகவும், குப்ஜிகை திகழ்கிறாள்.[7]
உசாத்துணைகள்
தொகு- ↑ 1.0 1.1 Dyczkowski, M. S. (1989). The canon of the Saivagama and the Kubjika Tantras of the western Kaula tradition. Motilal Banarsidass Publications.
- ↑ Dyczkowski, M. S. (2001). The cult of the goddess Kubjika: a preliminary comparative textual and anthropological survey of a secret Newar goddess. Franz Steiner Verlag.
- ↑ White, D. G. (2001). Tantra in practice (Vol. 8). Motilal Banarsidass Publ.
- ↑ "Goddess Kubjika – A short overview". பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Heilijgers-Seelen, D. M., & Heilijgers-Seelen, D. (1994). The system of five cakras in Kubjikāmatatantra 14-16 (Vol. 9). Egbert Forsten Pub.
- ↑ "The Kulamarga". பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 7.0 7.1 "Kubjika". பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)