குருதி நீர்மம்

குருதி நீர்மம் (இலங்கை வழக்கு - குருதித் திரவவிழையம்) (Blood plasma) என்பது குருதி உயிரணுக்கள் (blood cells) தொங்கி நிற்கும் குருதியின் வெளிர் மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மக் கூறாகும். மொத்த குருதிக் கன அளவின் 55% இந்த நீர்மக் கூறாகும். மிகுதி குருதி உயிரணுக்கள் ஆகும். உடலில் உள்ள உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் நீர்மக் கூறில் (Extracelllar fluid), குருதிக் கலன்களின் (blood vessels) உள்ளே காணப்படும் நீர்மமாகும் (Intravascular fluid).
குருதி நீர்மத்தில் 93% நீராகவும், மிகுதி புரதம், குளுக்கோசு, குருதி உறைதல் காரணியான நாரீனி (புரதம்) (Fibrinogen), தனிமங்கள், இயக்குநீர்கள், காபனீரொக்சைட்டு என்பன கரைந்த நிலையில் காணப்படும். இந்த குருதி நீர்மமே கழிவுகளைக் கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. முழுமையான குருதியை, ஒரு குருதி உறைதலைத் தடுக்கும் பதார்த்தத்துடன் சேர்த்து, அதனை ஒரு சோதனைக் குழாயில் எடுத்து, மைய விலக்கி வேகச் சுழற்சிக்கு (Centrifugation) உட்படுத்தும்போது, குருதிக் கலங்கள் அடியில் சென்று படிய, மேலே இருக்கும் குருதி நீர்மம் பிரித்தெடுக்கப்படலாம்[1] குருதி நீர்மத்தின் அடர்த்தி கிட்டத்தட்ட 1.025 kg/l.[2]. குருதி நீர்மத்திலிருந்து நாரீனி புரதம் அகற்றப்பட்ட பின்னர், அதாவது குருதி உறைதல் நடந்த பின்னர், பெறப்படும் திரவமே குருதித் தெளியம் எனப்படும். முழுமையான குருதி பெறப்பட்டு, 60 நிமிடங்கள் வைக்கப்படும்போது, குருதி உறைதல் நடைபெறும். பின்னர் மைய விலக்கி வேகச் சுழற்சிக்கு (Centrifugation) உட்படுத்தும்போது, குருதி உயிரணுக்கள் அகற்றப்பட்டு, குருதித் தெளியம் பெறப்படும்.

இரத்ததானம் மூலம் பெறப்பட்ட குருதி நீர்மம்

மேற்கோள்கள்

தொகு
  1. Maton, Anthea (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-981176-1. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. The Physics Factbook - Density of Blood
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_நீர்மம்&oldid=3812533" இலிருந்து மீள்விக்கப்பட்டது