குறிஞ்சிச் செடி

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தாவரம்.
குறிஞ்சி
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Lamiales
குடும்பம்: முண்மூலிகைக் குடும்பம்
பேரினம்: Strobilanthes
இனம்: S. kunthiana
இருசொற் பெயரீடு
Strobilanthes kunthiana
(Nees) T. Anderson
குறிஞ்சிச் செடிகள்

குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.[1]

குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்தக் குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள்வரையில் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பைக் காட்டும்.

நீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை. தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகிய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடிச் சிகரத்தின் “நாற்புறமும் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது "இரவிகுளம் தேசியபூங்கா'. அந்த இடம் இந்த ஊதாக்குறிஞ்சிச்செடிகள் செழித்து வளருவதற்கு ஏற்றப் பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது. என்றாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகத்தென்னிந்திய மலைப்பகுதிகளில் இந்த எழில்மிகு ஊதாக்குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி மெல்லமெல்லக் குறைந்துவிட்டது.

கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கு ஏற்றத் தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.

1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது.

மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்தக் குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது. இதன் அறிவியல் பெயர்:. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகளவில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் கேரளாவில் எரவிக்குளம் தேசிய பூங்காவில் கூடுதலாகப் பூக்கும்.

தமிழின் முதல் இலக்கண நூல் எனக் கருதப்படும் தொல்காப்பியத்தில், ஏழு திணைகளான கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில், மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.

நீலமலையில் குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.

வகைகள் தொகு

 
நீலக்குறிஞ்சி

குறிஞ்சிப்பூவில் ஏராளமான வகைகள் உண்டு. ஒரு சில மலர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை, பதினேழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 36 ஆண்டிற்கு ஒரு தடவை பூக்கும் மலர் வகைகளும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இரு வகையான குறிஞ்சிகள் உள்ளன. கொடைக்கானல், மூணார் பகுதிகளில் வளரும் குறிஞ்சியின் அறிவியல் பெயர் ‘ஸட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ்’ (strobilanthes kunthianus). நீலகிரிப் பகுதியில் காணப்படுவது ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் நீலகிரியன்சிஸ்’ (Strobilanthes nilgiriensis) என்ற வகையாகும்.[2]

கடல்மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் வளரும் குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும். மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன.

இரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடிய இம்மலர் நீல நிறமுடையது. இச்செடி தமிழக மலைப்பகுதிகளில் செழித்து வளர்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் வகையில் தொடங்கி சுமார் 32 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களைத் தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன. அவை கொண்டு வரும் பெருமளவு தேனை, தோடர் பழங்குடியினர் சேகரிக்கின்றனர்.

தகவமைப்பு தொகு

உயிர் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மலரில் கிடைக்கும் இயற்கையான தேன் மிகவும் இனிமையானது ஆகும். ஆதலால் இம்மலர்களை தேடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பைக் கொண்டிருக்கின்றன. குறிஞ்சிச் செடியானது ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, மடிந்துவிடுகின்றன. அதன்பிறகு விதைகளிலிருந்து மீண்டும் புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய நாட்காட்டி அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன.[3]

தேன் தொகு

ஒரு ஆய்வின்படி ஒரு குறிஞ்சித் தாவரத்தில் சராசரியாக 82 மஞ்சரிகளும் ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும், அதாவது, ஒரு தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேன் உள்ளது. அதன்படி ஒரு தாவரத்திலிருந்து 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன் உருவாக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே, குறிஞ்சி ஒருமித்துப் பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

இது தொடர்பாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் குறிப்புகளின்படி, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாக இருந்ததாக அறியப்படுகிறது 1922ஆம் ஆண்டு குறிஞ்சிப் பூத்தல் காணப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 28 தேன் கூடுகள் ஒரே ஒரு யூகலிப்டஸ் மரத்தில் காணப்பட்டதாகவும் அதற்கு அருகில் இருந்த பாறையில் 28 தேன் கூடுகள் காணப்பட்டதாகவும் ராபின்சன் குறிப்புகள் கூறுகின்றன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. சி.மகேந்திரன் (20 செப்டம்பர் 2017). "குறிஞ்சி மலர்: ஆபத்தில் இருக்கும் அபூர்வம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. சு. தியடோர் பாஸ்கரன் (1 செப்டம்பர் 2018). "குறிஞ்சி மலரும் வரையாடுகளும்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "குறிஞ்சி மலர் ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது, டிங்கு?". கேளவி பதில். இந்து தமிழ். 18 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2018.
  4. பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி (11 ஆகத்து 2018). "மலரே, குறிஞ்சி மலரே..." கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Strobilanthes kunthiana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிச்_செடி&oldid=3872096" இலிருந்து மீள்விக்கப்பட்டது