குலாம் ரசூல் கல்வான்
குலாம் ரசூல் கல்வான் (Ghulam Rassul Galwan) இந்தியாவின் கிழக்கு லடாக் பிரதேசத்தில் 1878-இல் பிறந்த மலையேற்ற வீரர் ஆவார். இவர் காரகோரம், கே 2 மற்றும் பாமிர் மலைகளில் பயணிக்க ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கும், பிரித்தானிய இராணுவ அதிகாரிகளுக்கும், மலையேற்ற வீரர்களுக்கும் உதவிய சுற்றுலா வழிகாட்டியாவர்.
1887 ஆம் ஆண்டில், உலகின் இரண்டாவது மிக உயரமான கே 2 கொடுமுடியின் உயரத்தை அளப்பதற்கு ஆங்கிலேயப் புவியியலாளரான மேஜர் ஹென்றி காட்வின் ஆஸ்டினுடன்[1] குலாம் ரசூல் கால்வான் மலையேற்றப் பயணத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.
1892 ஆம் ஆண்டில், டன்மோர் சார்லஸ் முர்ரே[2] எனும் ஆங்கிலேய இராணுவ அதிகாரியுடன் ருசியாவுக்கு எதிராக பாமிர் மலைப்பகுதிகளில் மேற்கொண்ட உளவுப் பணிக்காக அவருடன், குலாம் ரசூல் கல்வான் பயணம் செய்தார்.
1890 மற்றும் 1896 ஆம் ஆண்டுகளில், குலாம் ரசூல் கல்வான் ஆங்கிலேய-திபெத்திய ஒப்பந்தத்தை உருவாக்கிய சர் பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்டுடன்[3] இமயமலை பகுதிகளில் நீண்ட பயணம் செய்தார், இது பிரித்தானிய இந்தியா அரசாங்கத்திற்கும் நடு ஆசியா, திபெத், சீனா மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளுக்கும் நீண்டகால வர்த்தக உறவுகளை மேம்படச் செய்தது. 1913 இல், அவர் இத்தாலிய விலங்கியல் நிபுணர் பிலிப்போ டி பிலிப்பியுடன் மலையேறறத்திற்கு சென்றார். குலாம் ரசூல் கால்வான் 1925-இல் தமது 47-வது அகவையில் மறைந்தார்.
மரபுரிமைப் பேறுகள்
தொகுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் குலாம் ரசூல் கல்வானின் நினைவைப் போற்றும் வகையில், கிழக்கு லடாக்-திபெத் இடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கும், ஒரு ஆற்றுக்கும் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் கல்வான் ஆறு பெயரிட்டனர்.[4]