குளிர்காலக் கோடு

(குளிர்கால அரண்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குளிர்காலக் கோடு (Winter Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இது குசுத்தாவ் கோடு (Gustav line) என்றும் அழைக்கப்பட்டது.

ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் மிகவும் பலமானது “குளிர்காலக் கோடு”. இதன் முன்னால் (தெற்கில்) கூடுதல் பாதுகாவலுக்காக பெர்னார்ட் கோடும் பின்னால் (வடக்கில்) பின்வாங்கும் படைகளின் பாதுகாப்புக்காக இட்லர் கோடும் அமைக்கப்பட்டிருந்தன. குளிர்காலக் கோட்டின் முதன்மை அரண்நிலைகள் இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் கரிகிலியானோ ஆறு திரேனியக் கடலில் சேரும் இடத்திலிருந்து கிழக்குக் கடற்கரையில் சாங்க்ரோ ஆறு ஏட்ரியாட்டிக் கடலில் இணையும் இடம் வரை நீண்டிருந்தது. இக்கோட்டின் மையப் பகுதி, வட-தெற்காக ரோம் நகருக்குச் செல்லும் 6வது நெடுஞ்சாலையை ஒட்டி கசீனோ நகரைச் சுற்றியிருந்த குன்றுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. கசீனோ நகர் அமைந்திருந்த லிரி பள்ளத்தாக்கு வழியாகவே ரோம் நகருக்கு செல்ல இயலுமென்பதால், இவ்விடத்தில் குளிர்காலக் கோட்டின் அரண்நிலைகள் வெகுவாக பலப்படுத்தப்பட்டிருந்தன. துப்பாக்கி குழிகள், கான்கிரீட் பதுங்கு நிலைகள், எந்திரத் துப்பாக்கி நிலைகள், கொத்தளங்கள் போன்றவை இக்கோட்டில் மிகுதியாக அமைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியின் புவியியல் அமைப்பும் பாதுகாவல் படையினருக்கு சாதகாக அமைந்திருந்தது.

குளிர்காலக் கோட்டினை ஊடுருவ நேச நாட்டுப் படைகள் நவம்பர் 1943 முதல் மே 1944 இறுதி வரை கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. லா டிஃபென்சா குன்று சண்டை, மோரோ ஆறு போர்த்தொடர், சான் பியேத்ரோ இன்ஃபைன் சண்டை, ஒர்ட்டோனா சண்டை, அன்சியோ சண்டை, சிசுட்டேர்னா சண்டை, மோண்டே கசீனோ சண்டை ஆகிய மோதல்கள் இக்காலகட்டத்தில் குளிர்காலக் கோட்டினை உடைக்க நிகழ்ந்தன. மே 1944 இறுதியில் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கபப்ட்டு பின்வாங்கின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்காலக்_கோடு&oldid=1361054" இலிருந்து மீள்விக்கப்பட்டது