மோண்ட்டி கசீனோ சண்டை

(மோண்டே கசீனோ சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மோண்டி கசீனோ சண்டை (Battle of Monte Cassino) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு சண்டைத் தொடர். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினை ஊடுருவி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றனர்.

மோண்டி கசீனோ சண்டை
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி
Battle of Monte Cassino
சண்டைக்குப் பின் கசீனோ நகரின் இடிபாடுகள்
நாள் ஜனவரி 17– மே 18, 1944
இடம் மோண்டே கசீனோ, இத்தாலி
41°29′24″N 13°48′50″E / 41.49000°N 13.81389°E / 41.49000; 13.81389
நேச நாட்டு வெற்றி;[1][2]
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 சுதந்திர பிரான்ஸ்
 போலந்து
 கனடா
 இந்தியா
 நியூசிலாந்து
இத்தாலியின் நேச நாட்டு கூட்டுப் படைகள்
 ஜெர்மனி
இத்தாலிய சமூக அரசு[3]
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஹரால்ட் அலெக்சாந்தர்
ஐக்கிய அமெரிக்கா மார்க் கிளார்க்
ஐக்கிய இராச்சியம் ஆலிவர் லீசு
நாட்சி ஜெர்மனி ஆல்பெர்ட் கெஸ்சல்ரிங்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிக் வோன் வெய்டின்க்கோஃப்
நாட்சி ஜெர்மனி ஃபிரிடோலின் வோன் செங்கர்
பலம்
அமெரிக்க 5வது ஆர்மி
பிரித்தானிய 8வது ஆர்மி
1,900 டாங்குகள்
4,000 வானூர்திகள்[4]
ஜெர்மானிய 10வது ஆர்மி
இழப்புகள்
55,000[5] ~20,000[5]
மோண்ட்டி கசீனோ சண்டை is located in இத்தாலி
மோண்ட்டி கசீனோ சண்டை
Location within Italy

செப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் விரைவில் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. மத்திய இத்தாலியில் அமைந்திருந்த ரோம் நகரைப் பாதுகாக்க ஜெர்மானியர்கள் அதற்கு தெற்கே பல அரண்கோடுகளை அமைத்திருந்தனர். அவற்றுள் மிகப் பலமானது குளிர்காலக் கோடு. பிற அரண்கோடுகளை ஊடுருவிய நேச நாட்டுப் படைகள் டிசம்பர் 1943ல் குளிர்காலக் கோட்டினை அடைந்து தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆனால் பிற அரண்கோடுகளைப் போல இதை எளிதில் ஊடுருவ அவர்களால் இயலவில்லை. தொடர்ச்சியாக பல மாதங்கள் இதற்கான சண்டைகள் நடைபெற்றன.

குளிர்காலக் கோட்டின் கிழக்குப் பகுதியில் கரடுமுரடனான நிலவியல் அமைப்பாலும், கடும் குளிர்காலத் தட்பவெட்ப நிலையாலும் நேச நாட்டுத் தாக்குதலில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே மேற்குப் பகுதியில் குளிர்காலக் கோட்டினை ஊடுருவும் கட்டாயம் நேச நாட்டுப் படைகளுக்கு உருவானது. மேற்குப் பகுதியில் ரேப்பிடோ, லிரி, கரிகிலியானோ பள்ளத்தாக்குகளும் பல குன்றுகளும் மலை முகடுகளும் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் கசீனோ குன்று (மோண்டி கசீனோ) முக்கியமானது. ரோம் நகருக்குச் செல்லும் 6வது நெடுஞ்சாலை லிரி பள்ளத்தாக்கின் வழியாகச் சென்றது. அப்பள்ளத்தாக்கின் வாயிலில் அதனைப் பாதுக்காக்க வசதியாக கசீனோ குன்று அமைந்திருந்தது. ஜெர்மானியர்கள் அக்குன்றைச் சுற்றி பலமான அரண்நிலைகளை உருவாக்கியிருந்தனர். ரோம் நகரை நோக்கி விரைவாக முன்னேற அது ஒன்றே வழியென்ற நிலை உருவானதால், கசீனோ குன்றைத் தாக்கி அவ்விடத்தில் குளிர்காலக் கோட்டினை ஊடுருவ நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர்.

ஜனவரி 17, 1944 அன்று கசீனோ குன்று மீதான தாக்குதல் ஆரம்பமானது. ஜெனரல் மார்க் கிளார்க் தலைமையிலான அமெரிக்க 5வது ஆர்மி இத்தாக்குதலில் ஈடுபட்டது. இதில் அமெரிக்கப் படைப்பிரிவுகளைத் தவிர பிரித்தானிய, விடுதலை பிரெஞ்சு, கனடிய போலிய, இந்திய, நியூசிலாந்திய மற்றும் இத்தாலிய நேச நாட்டு ஆதரவுப் படைப்பிரிவுகளும் இடம் பெற்றிருந்தன. ஜனவரி 17-மே 18 காலகட்டத்தில் கசீனோவைக் கைப்பற்ற நான்கு பெரும் சண்டைகள் நடைபெற்றன. முதல் சண்டை ஜனவரி 17ல் தொடங்கி பெப்ரவரி 11 வரை நடைபெற்றது. பாதுகாவல் படைகளுக்கு சாதகமான புவியியல் அமைப்பு, பலமான ஜெர்மானிய அரண்நிலைகள் ஆகிய காரணங்களால் பெரும் இழப்புகளுடன் நேச நாட்டுத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. பெப்ரவரி 12-18 தேதிகளில் நேச நாட்டுப் படைகள் நிகழ்த்திய இரண்டாவது தாக்குதலும் தோல்வியடைந்தது. இத்தாக்குதலின் போது கசீனோ குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த கத்தோலிக்க மடம் நேச நாட்டு குண்டுவீசி வானூர்திகளால் தகர்க்கப்பட்டது. மூன்றாவது தாக்குதல் மார்ச் 15ம் தேதி தொடங்கியது. கடுமையான மழைபொழிவாலும், பலப்படுத்தப்பட்ட ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகளாலும் இத்தாக்குதலும் மார்ச் 23ம் தேதி கைவிடப்பட்டது. அடுத்த ஒன்றரை மாத காலம் கசீனோ போர் முனையில் மந்த நிலை நிலவியது. இத்தாலியப் போர்முனைக்கான நேச நாட்டுத் தலைமை தளபதி ஹரால்ட் அலெக்சாந்தர் அடுத்த தாக்குதலே இறுதித் தாக்குதலாக இருக்க வேண்டுமென திட்டமிட்டார். இதற்காக 20 டிவிசன்கள் கொண்ட பெரும்படையினை ஒன்று திரட்டி 20 மைல் அகலமுள்ள போர்முனையில் ஒரே நேரத்தில் தாக்கினார். மே 11ம் தேதி தொடங்கிய நாலாவது தாக்குதலை ஜெர்மானியர்களால் சமாளிக்க முடியவில்லை. நேச நாட்டுப் படைபலத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினர். மே 18ம் தேதி கசீனோ குன்றும் மடமும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன.

ஐந்து மாத சண்டைக்குப் பின் நேச நாட்டுப் படைகள் வெற்றி பெற்றாலும், அதனால் பெரிய பயன் எதுவும் விளையவில்லை. தொடர் சண்டைகளால் அவற்றுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதுடன் ஜெர்மானியப் படைகளை அழிக்கவும் தவறிவிட்டன. பெரும்பான்மையான ஜெர்மானியப் படைப்பிரிவுகள் வெற்றிகரமாகப் பின்வாங்கி அடுத்த அரண்கோடான டிராசிமீன் கோட்டினை அடைந்து விட்டன. மோண்டி கசீனோவில் நேச நாட்டு வெற்றி பிர்ரிய வெற்றியாகவே அமைந்தது.

குறிப்புகள்

தொகு
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
  1. Parker, Matthew (2005). Monte Cassino: The Hardest Fought Battle of World War II. Anchor Books. pp. 347. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400033751.
  2. Crwys-Williams, Jennifer (1992). A country at war, 1939-1945: the mood of a nation. Ashanti Publications. p. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781874800491.
  3. Villoresi, Luca. "Barbarigo Teschi e memorie" (in Italian). La Repubblica, Culture section (3 June 1994): 35. http://ricerca.repubblica.it/repubblica/archivio/repubblica/1994/06/03/barbarigo-teschi-memorie.html. பார்த்த நாள்: 24 April 2009. 
  4. Farrington, K, (1995), Battle for Victory. Bookmart Ltd, p. 45
  5. 5.0 5.1 Axelrod, Alan (2008). Real History Of World War II: A New Look at the Past. New York: Sterling Publishing Co Inc. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402740909.

நூல்கள்

தொகு

ஆங்கிலம்

தொகு

பிரெஞ்சு

தொகு

இடாய்ச்சு

தொகு

இத்தாலியம்

தொகு

போலியம்

தொகு

பெலாருசியன்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோண்ட்டி_கசீனோ_சண்டை&oldid=3849251" இலிருந்து மீள்விக்கப்பட்டது