அணி விளையாட்டு

(குழு விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அணி விளையாட்டு (அல்லது) குழு விளையாட்டு (Team sport) என ஒன்றிற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒருங்கிணைந்து ஒரு நோக்கத்தை நோக்கி (பொது வெற்றிக் குறிக்கோளுடன்) ஆடுகின்ற (ஒன்றாக வேலை செய்யும்) விளையாட்டுக்களை குறிப்பிடுகிறோம். ஒரு குழு விளையாட்டில் எந்த விளையாட்டாக இருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளை உள்ளடக்கும். சில அணி விளையாட்டுக்களில் இரு எதிரணிகளிடையே நேரடி மோதல் ஏற்படுகிறது. விளையாட்டைப் பொறுத்து அணியில் வீரர்களின் எண்ணிக்கை மாறுபடும். எடுத்துக்காட்டுகள் கூடைப்பந்து, கைப்பந்து, நீர் போலோ, மட்டைப்பந்து, பல்வேறு வடிவங்களில் உள்ள காற்பந்து மற்றும் ஹாக்கி.[1][2][3] பொதுவாக அணியினர் ஓர் பந்தையோ அல்லது அதுபோன்ற ஒன்றையோ நகர்த்திச் செல்வதில் விளையாட்டு விதிகளுக்கிணங்க ஒருங்கிணைப்புடன் செயலாற்றி வெற்றிப்புள்ளிகளைப் பெறுவதாயிருக்கும். எனினும் சில அணி விளையாட்டுகளில் இவ்வாறு பந்தொன்றை ஒருங்கிணைப்புடன் நகர்த்த வேண்டியிராது; எடுத்துக்காட்டாக, நீச்சல், துடுப்பு படகோட்டம், வள்ளங்களி போன்றவையும் அணி விளையாட்டுகளே. மேலும் சில அணி விளையாட்டுகளில், காட்டாக மலையேற்றம், எதிரணியோ வெற்றிப்புள்ளிகளோ இருக்காது. அதற்கு மாற்றாக ஏறுவதில் அல்லது நடப்பதில் உள்ள கடினத்தன்மை சாதனையின் அளவீடாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

துடுப்பாட்டம் பன்னாட்டளவில் ஓர் பிரபலமான அணி விளையாட்டு

ஒலிம்பிக் அணி விளையாட்டுகள்

தொகு

தற்போது வேனில் ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடப்படும் 33 விளையாட்டுகளில் ஆறு அணி விளையாட்டுகளாகும்[4]. ஏழாவது விளையாட்டாக ரக்பி கால்பந்து 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும். துடுப்பாட்டம் 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இடம் பெறுமா என்பது ஐசிசி மற்றும் அதன் உறுப்பினர்கள் எடுக்கும் முடிவையொட்டி உள்ளது.[5]

பனி வளைதடியாட்டம் மற்றும் கர்லிங் ஆகியன மட்டுமே குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டிகளில் இடம் பெறும் அணி விளையாட்டுகள் ஆகும்.

அனைத்து ஒலிம்பிக் அணி விளையாட்டுகளுமே ஆண்,பெண் இருபாலருக்குமான போட்டிகளை உள்ளடக்கியுள்ளன.

விளையாட்டு ஆண் பெண்
முதல் முறை மொத்த நிகழ்வுகள் முதல் முறை மொத்த நிகழ்வுகள்
கால்பந்து பாரிஸ் 1900 25 சிட்னி 2000 3
நீர் போலோ பாரிஸ் 1900 24 அட்லாண்டா 1996 4
வளைதடிப் பந்தாட்டம் இலண்டன் 1908 21 மாசுகோ 1980 8
கூடைப்பந்தாட்டம் பெர்லின் 1936 17 மொண்ட்ரியால் 1976 9
கைப்பந்தாட்டம் டோக்கியோ 1964 12 டோக்கியோ 1964 12
எறிபந்தாட்டம் பெர்லின் 1936 11 மொண்ட்ரியால் 1976 9
பனி வளைதடியாட்டம் சமோனி (Chamonix) 1924 21 நகனோ 1998 4
கர்லிங் சமோனி (Chamonix) 1924 5 நகனோ 1998 4

மேற்கோள்கள்

தொகு
  1. Filppu, Lucy. "The Benefits of Team Sports". http://www.education.com/magazine/article/Ed_Benefits_Team_Sports/. 
  2. Dyer, William; Dyer Jr., William; Dyer, Jeffrey (2007). Team Building: Proven Strategies for Improving Team Performance. San Francisco, Ca.: Jossey-Bass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7879-8893-7.
  3. Hanlon, Thomas (2009). The Sports Rules Book: Essential Rules, Terms, and Procedures for 54 Sports. Champaign, Il: Human Kinetics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88011-807-5.
  4. 33 sports
  5. Cricket edges closer to Olympic roster by AFP. Retrieved on 13 FEB 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணி_விளையாட்டு&oldid=3758565" இலிருந்து மீள்விக்கப்பட்டது