கூந்தலூர் முருகன் கோவில்
திருக்கூந்தலூர் முருகன் கோவில் அல்லது ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டில், கும்பகோணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கூந்தலூரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுள் (சிவன்) என்றாலும் இங்கு முருகனுக்குத் தனிச் சன்னதி திருக்கோவில் முன்புறம் அமைந்துள்ளதால் இது முருகன் தலமாக அழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
தல வரலாறு
தொகுபண்டை காலத்தில் நாவல் மர வனத்திடையே அமைந்த திருத்தலமாகியதால் ஆலய இறைவன் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்படுகிறார். மேலும் வனத்தில் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரணேசுவரர் என ஈசன் அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ’ஜம்பு’ என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப்பொருள்படும்.
மேலும், ஆலயத்தின் ஈசான்ய மூலையில் உள்ள தீர்த்தத்தில் சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால், ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
உரோமரிஷி சித்தர் வரலாறு
தொகுஉரோமரிஷி சித்தர், திருக்கூந்தலூர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து வரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெறவும், தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அளித்து வந்தார். ஒரு சமயம், சிவனாரின் திருவிளையாடல் காரணமாக, அவரின் தாடி வழியே பொன்னை வரவைக்கும் அவரின் சித்தி பலிதமாகவில்லை. உரோமரிஷி சித்தர் உடனே, தனது தாடியை நீக்கிவிட்டு, நீராட மறந்து ஈசனை வழிபட திருக்கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார். நீராடாமல், சிவனை தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த, சிவ சித்தரான உரோமரிஷி சித்தரை, ஆலய வாயிலில் முக்கண் முதல்வன் விநாயகனும் சுந்தர வேலவன் முருகனும் தடுத்தனர்.
உரோமரிஷி சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனும் தன் தரிசனத்தை ஆலயத்திற்கு வெளியே காட்டியருளியதாக மரபு வரலாறு உள்ளது.
பாடல்கள்
தொகு- திருப்புகழ்
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே. - திருப்புகழ்.
திருநாவுக்கரசர் பாடியுள்ள வைப்புத் தலங்களுள் இத்தலமும் ஒன்று (திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9))
திருவிழாக்கள்
தொகுசங்கட ஹர சதுர்த்தி விநாயகருக்கும், பிரதோசம் விரதம் சிவனுக்கும், கார்த்திகையும் சஷ்டியும் பங்குனி உத்திரமும் முருகப்பெருமானுக்கும் நடைபெறுகின்றன.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_koondalur.htm பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் இணையதளம் பரணிடப்பட்டது 2014-11-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009