பங்குனி உத்தரம்
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு நோன்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர நாளாகும். தமிழ் மாதங்களில் பன்னிரண்டாம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் பன்னிரண்டாம் நட்சத்திரம் உத்தரம். எனவே பன்னிரண்டு கைகள் உடைய வேலவனுக்குச் சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்தரம் | |
---|---|
![]() | |
கடைப்பிடிப்போர் | இந்துத் தமிழர் |
வகை | இந்து |
முக்கியத்துவம் | சிவன்-பார்வதி, ராமர்-சீதை, முருகன்-தெய்வானை, இரங்கநாதர்-ஆண்டாள் ஆகியோரின் திருமண நாள். |
கொண்டாட்டங்கள் | தேர்த் திருவிழாக்கள், காவடி |
அனுசரிப்புகள் | வைணவ, சைவ ஆலயங்களில் பூசை 63 நாயன்மார்கள் திருவிழா |
நாள் | பங்குனி மாத உத்தரம் நட்சத்திரம் |
நிகழ்வு | ஆண்டிற்கு ஒரு நாள் |
மீனாட்சி கல்யாணம்
தொகுசிவனுக்கும், பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இந்நாளில் மணந்தார் என்பது ஐதீகம்.
இந்நாளில் சிவனுக்கும், பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்நாளில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் கடைபிடிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
சிறப்பு
தொகுஇந்நாளில் பார்வதியை சிவனும், ராமன் சீதையையும், முருகன் தெய்வானையையும் மணந்தனர். திருவரங்கநாதர், ஆண்டாள் முதலிய தெய்வத் திருமணங்கள் பலவும் பங்குனி உத்திர நாளன்று நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.[1][2][3]
பங்குனி உத்தரம்
தொகுபங்குனி உத்தரம் விழா அனைத்து அறுபடைவீடுகளிலும் நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும் தேரோட்டமும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
திண்டுக்கல், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி ஆற்று நீர் கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும். எனவே, நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரியாற்று நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்திரத் திருவிழா.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chambers, James (2015-07-01). Holiday Symbols & Customs, 5th Ed (in ஆங்கிலம்). Infobase Holdings, Inc. pp. 885–886. ISBN 978-0-7808-1365-6.
- ↑ Lalithasai (2012-05-21). "Significance of Panguni Uthiram" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/significance-of-panguni-uthiram/article3449280.ece.
- ↑ L 2193, Srikrishna (2022-03-12). "Panguni Uthiram festival begins in Palani" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/panguni-uthiram-festival-begins-in-palani/article65218387.ece.