தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.[1][2][3]

இராசிச் சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.

தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை

தொகு

பண்டைய தமிழகத்தில் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும் மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்பட்டது.

சூரிய மாதம்

தொகு

சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு சூரிய மாதம் ஆகும்.

சந்திர மாதம்

தொகு

ஒரு சூரிய மாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேச இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் சித்திரை நட்சத்திரம் வரும் என்பதால் சூரிய மாதமான மேட மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும்.

தற்காலத்தில் தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. சூரிய மாதங்களின் பெயர்களும், அந்தந்த சூரிய மாதங்களுக்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.[சான்று தேவை]

வரிசை எண் தமிழ் சூரிய மாதம் (இராசி) தமிழ் சந்திர மாதம் கேரள நாட்காட்டியில் மாதப்பெயர் அடையாளம்
1 மேடம் (புது வருடம்) சித்திரை மேடம் வருடை (ஒரு வகை ஆடு)
2 இடபம் வைகாசி இடவம் காளை அல்லது ஆண் மாடு
3 மிதுனம் ஆனி மிதுனம் இரட்டைகள்
4 கடகம் ஆடி கர்கடகம் நண்டு
5 சிம்மம் ஆவணி சிங்கம் (புது வருடம்) சிங்கம்
6 கன்னி புரட்டாசி கன்னி கன்னிப்பெண்
7 துலாம் ஐப்பசி துலாம் இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம்
8 விருச்சிகம் கார்த்திகை விருட்சிகம் தேள்
9 தனுசு மார்கழி தனு வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை
10 மகரம் தை மகரம் முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினம்
11 கும்பம் மாசி கும்பம் ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர்
12 மீனம் பங்குனி மீனம் இரு மீன்கள்

மாதப் பிறப்பு

தொகு

சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அத்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.

மாதங்களின் கால அளவு

தொகு

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

- தமிழ்ப் பெயர்(சூரிய மாதப்பெயர்) வழங்கு பெயர்(சந்திர மாதப்பெயர்) இராசி நாள் நாடி விநாடி தற்பரை வசதிக்காக
1 மேழம் சித்திரை மேடம் 30 55 32 00 31
2 விடை வைகாசி இடபம் 31 24 12 00 31
3 ஆடவை ஆனி மிதுனம் 31 36 38 00 32
4 கடகம் ஆடி கர்க்கடகம் 31 28 12 00 31
5 மடங்கல் ஆவணி சிங்கம் 31 02 10 00 31
6 கன்னி புரட்டாசி கன்னி 30 27 22 00 31
7 துலை ஐப்பசி துலாம் 29 54 07 00 29/30
8 நளி கார்த்திகை விருச்சிகம் 29 30 24 00 29/30
9 சிலை மார்கழி தனு 29 20 53 00 29
10 சுறவம் தை மகரம் 29 27 16 00 29/30
11 கும்பம் மாசி கும்பம் 29 48 24 00 29/30
12 மீனம் பங்குனி மீனம் 30 20 21 15 31
- மொத்தம் - - 365 15 31 15 -

பெயர்க் காரணம்

தொகு

சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக் காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.

சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. S.K. Chatterjee, Indian Calendric System, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India, 1998
  2. Sewell, Robert and Dikshit, Sankara B.: The Indian Calendar – with tables for the conversion of Hindu and Muhammadan into a.d. dates, and vice versa. Motilal Banarsidass Publ., Delhi, India (1995). Originally published in 1896
  3. Indian Epigraphy, D.C. Sircar, TamilNet, Tamil New Year, 13 April 2008

வெளி இணைப்புகள்

தொகு


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மாதங்கள்&oldid=4099370" இலிருந்து மீள்விக்கப்பட்டது