தமிழ்ப் புத்தாண்டு

தமிழர்களின் பண்டிகை.

தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு
ஒரு புத்தாண்டுக் கோலம்
கடைபிடிப்போர்தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ் தமிழர்
வகைபண்டிகை,
முக்கியத்துவம்தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாட்டங்கள்பகிர்ந்து உண்ணுதல், பரிசில் வழங்கல், வேப்பம்பச்சடி உண்ணல், உறவுகளோடு அளவளாவுதல், மருத்துநீர் வைத்தல்
நாள்தமிழ் நாட்காட்டியில் சித்திரை முதல் நாள்
தொடர்புடையனவைசாக்கி, விசூ (கேரளா), பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, லாவோ புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய்லாந்துப் புத்தாண்டு

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேச இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில கிரெகொரிய நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

வரலாறு

தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.[1] ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.[2] சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு[3] காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி[4] முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.[5]

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.பி. 1310-ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.[6] மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், பொ.பி. 1622-ம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.[7]

மரபுகள்

 
தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.

புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.[8] புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.[9] வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.[10]

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.[11]

   
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.

தைப்புத்தாண்டு சர்ச்சை

தைப்புத்தாண்டு

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970 மற்றும் 1980களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும்.[12] உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்[13] தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது.[12] இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.[14] 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.[15]

தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும்[16], சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர்.[17] இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,[18] 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்[19] 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.[13]

வடமொழி அறுபது ஆண்டுகள்

சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது.[20] சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன.[21] எனினும், தமிழகத்தில், 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன.[22] இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்[23] பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.[1] இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.[24][25]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல்". உவங்கள் இணைய இதழ். Archived from the original on 2017-08-13. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகள்: வானியலும் ஜோதிடமும், தமிழ்பேப்பர் கட்டுரை". Archived from the original on 2017-04-19. பார்க்கப்பட்ட நாள் 2017-04-13.
  3. மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார். "நெடுநல்வாடை". பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2018. "திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து" வரி 160-161 {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "புட்பவிதி மின்னூல்". Archived from the original on 2017-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-04-13.
  5. பால. கௌதமன் (21 ஏப்ரல் 2013). "தொடராண்டா பிரச்சனை?". Vedic Science Research Centre. Archived from the original on 2018-07-08. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. எப்.எக்ஸ்.சி.நடராசா (1988). போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை. யாழ்ப்பாணம். pp. 75–76.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  7. Chelvatamby Maniccavasagar (4 2013). "Trincomalee -- timeless: Thiru Koneswaram Temple". dailynews.lk. http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp. 
  8. Paul Fieldhouse (2017). Food, Feasts, and Faith: An Encyclopedia of Food Culture in World Religions. ABC-CLIO. p. 548. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-412-4.
  9. Abbie Mercer (2007). Happy New Year. The Rosen Publishing Group. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4042-3808-4.
  10. Narayanan, Vasudha (1999). "Y51K and Still Counting: Some Hindu Views of Time". Journal of Hindu-Christian Studies (Butler University) 12 (1): 17–19. doi:10.7825/2164-6279.1205. 
  11. "Features | Online edition of Daily News – Lakehouse Newspapers". Dailynews.lk. 12 April 2008. Archived from the original on 14 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  12. 12.0 12.1 நா. கணேசன் (20 ஏப்ரல் 2012). "திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்". விடுதலை நாளிதழ். http://viduthalai.in/previousyear/other-news/97-essay/32443-2012-04-20-09-57-49.html. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. 13.0 13.1 பால.கௌதமன் (23 பெப்ரவரி 2013). "திரிபே வரலாறாக". தமிழ்ஹிந்து. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  14. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
  15. 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.
  16. "ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்?". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக்". உண்மை ஆன்லைன். 16-31, ஜனவரி 2012. Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  18. "தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "ஆண்டும் ஆள்வோரும்". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. வை.நடராசன் (15 யூலை 2014). "பண்டைத் தமிழர் - ஊராட்சி முறை". தமிழ் இலெமூரியா இதழ். 1968 இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலிருந்து. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  21. Journal of the Asiatic Society of Bombay. Vol 11. 1876. பக். 221 - 223. https://books.google.lk/books?id=YdfUACkyr68C. 
  22. மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு
  23. "Tamil calendar evokes interest" (PDF). The Hindu. 17 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  24. "Archived copy". Archived from the original on 4 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  25. "Archived copy". Archived from the original on 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_புத்தாண்டு&oldid=3774868" இலிருந்து மீள்விக்கப்பட்டது