கூனி தர்வாசா

கூனி தர்வாசா (இந்தி:खूनी दरवाज़ा, உருது خونی دروازہ) என்பது, தில்லி நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளதும், பழைய தில்லியின் வாயில்களில் எஞ்சியுள்ள 13 வாயில்களில் ஒன்றும் ஆகும். கூனி தர்வாசா என்னும் பெயர் இரத்த வாயில் என்னும் பொருள் கொண்டது. இதே பொருள்பட லால் தர்வாசா (சிவப்பு வாயில்') எனவும் இது அழைக்கப்படுவதுண்டு.

கூனி தர்வாசா
கூனி தர்வாசா
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிமுகலாயர்-ஆப்கான்
நகரம்தில்லி
நாடுஇந்தியா

அமைவிடம் தொகு

தற்காலக் கட்டிடங்கள் இதைச் சுற்றி எழுவதற்கு முன், இவ்வாயில் ஒரு திறந்த வெளியில் அமைந்திருந்தது. இன்று இது பகதூர் சா ஜாஃபர் சாலையில், பெரோசு சா கோட்லா துடுப்பாட்டத் திடலுக்கு முன்பாகக் காணப்படுகிறது. கூனி தர்வாசாவுக்கு கிழக்கில் மேற்குறிப்பிட்ட துடுப்பாட்டத் திடலும், மேற்கில், மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் முதன்மை வாயிலும் உள்ளன. தில்லி நுழைவாயிலிலிருந்து இதன் தூரம் சுமார் அரை கிலோமீட்டர் ஆகும்.

வரலாற்றுப் பின்னணி தொகு

இந்திய விடுதலைக்கான முதற்போர் என்று அறியப்படும் இந்தியக் கிளர்ச்சி 1857 தோல்வியடைந்த பின்னர், முகலாயப் பேரரசரான பகதூர் சா சஃபாரின் இரண்டு ஆண் மக்களும், ஒரு பேரனும் உள்ளிட்ட முகலாய வம்சத்தின் மூன்று இளவரசர்கள் இவ்வாசலருகே வைத்து, 1857 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2 ஆம் தேதி பிரித்தானியத் தளபதி வில்லியம் ஒட்சனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந் நிகழ்வே இவ்வாசல் "இரத்த வாசல்" என்று பெயர்பெறக் காரணமாயிற்று. உமாயூனின் சமாதியில் ஒழிந்திருந்த பகதூர் சா சஃபாரையும் மூன்று இளவரசர்களையும் சூழ்ந்து கொண்டபோது அவர்கள் சரணடைந்தனர். செங்கோட்டைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இந் நுழைவாயிலருகே இளவரசர்களை இறங்குமாறு செய்த ஒட்சன், அவர்கள் உடைகளைக் களைந்த பின்னர் அருகில் வைத்துச் சுட்டுக் கொன்றான். அவர்கள் உடல்களை எடுத்துச் சென்ற பிரித்தானியர் அவர்கள் உடல்களை அந்நிலையிலேயே காட்சிக்கு வைத்தனர்.

கதைகள் தொகு

கிளர்ச்சியின் போது, கூனி தர்வாசா ஒரு வளைவு வழியாக (archway) இருந்ததேயன்றி, ஒரு நுழைவாயிலாக இருக்கவில்லை. சிலர் இதனைப் பழைய தில்லியின் காபுல் நுழைவாயிலுடன் குழம்பிக்கொள்வதுண்டு. இதனுடைய பெயரைக் குறித்துப் பல கதைகள் உள்ளன. எனினும், இவற்றுக்குப் போதிய சான்றுகள் கிடையா. சில கதைகள் இங்கு நிகழ்ததாகச் சொல்லும் நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் காபுல் நுழைவாயிலில் இடம்பெற்றிருக்கக்கூடும். இவ்வாறான சில கதைகளின்படி:

  • பேரரசர் செகாங்கீர் பேரரசர் அக்பரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தபோது, பதவிக்கு வந்தபோது, அக்பரின் அவையிலிருந்த ஒன்பது இஅரத்தினங்கள் என்று அழைக்கப்படுவோரில் சிலர் எதிர்த்தனர். இதனால் செகாங்கீர், அவர்களுள் ஒருவரான அப்துல் ரகிம் கான்-இ-கானா என்பவரது இரண்டு மக்களைக் கொன்று அவர்களது உடல்களை இவ்விடத்திலேயே அழுக விட்டானாம்[1].
  • ஔரங்கசீப் பதவிப் போட்டியில் தனது அண்னனான தாரா சிக்கோவைக் கொன்று அவனது தலையை இந் நுழைவாயிலில் காட்சிக்கு வைத்தானாம்[2].

1739 ஆம் ஆண்டிலும், பாரசீகத்தின் நாதிர் சா வினால் தில்லி சூறையாடப்பட்டபோது, இவ்விடத்தில் இரத்தம் சிந்தப்பட்டதாம். எனினும் இதுவும் சரியல்ல என்கின்றனர். இந் நிகழ்வு சாந்தனி சவுக்கின் தரீபா பகுதியில் உள்ல இன்னொரு நுழைவாயிலில் இடம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

சில கதைகள் முகலாயர் காலத்திலேயே இந் நுழைவாயில் இப் பெயராலேயே அழைக்கப்பட்டது என்கின்றன. ஆனால் இதற்கான பதிவுச் சான்றுகள் எதுவும் கிடைத்தில.


விடுதலைக்குப் பின் தொகு

1947 ஆம் ஆண்டுக் கலவரங்களின்போது, இந்த நுழைவாயில் அருகே மேலும் இரத்தம் சிந்தியது. புராணா கிலாவில் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமுக்குச் செல்லும் வழியில் பலர் இவ்விடத்தில் கொல்லப்பட்டனர்.

கூனி தர்வாசா இன்று தொல்லியல் பகுதியின் பொறுப்பில், ஒரு காக்கப்பட்ட நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது.

படக்காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Hindu online". http://www.hinduonnet.com/thehindu/mp/2002/12/02/stories/2002120200470200.htm. பார்த்த நாள்: December 3, 2006. 
  2. "India Heritage". http://www.indiaheritage.org/history/history_of_europeans.htm. பார்த்த நாள்: December 3, 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூனி_தர்வாசா&oldid=3594544" இருந்து மீள்விக்கப்பட்டது