கே. வெங்கடலட்சம்மா
கே.வெங்கடலட்சம்மா (K.Venkatalakshamma), ( மே 29, 1906 – ஜூலை 1, 2002) ஒரு புகழ்பெற்ற பாரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். இவர், பரதநாட்டியத்தின் மைசூர் நடன பாணியில் சிறந்தவராகவும், மைசூர் அரசசபை பாரம்பரியத்தின் கடைசி பிரதிநிதியாகவும் இருந்தார். 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1]
கே. வெங்கடலட்சம்மா | |
---|---|
பிறப்பு | கே. வெங்கடலட்சம்மா 29 மே 1906 காடூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1 சூலை 2002 காடூர், கருநாடகம், இந்தியா | (அகவை 98)
செயற்பாட்டுக் காலம் | 1918 முதல் 2000 வரை |
விருதுகள் | பத்ம பூசண்: 1992 சங்கீத நாடக அகாதமி விருது: 1964 |
சுயசரிதை
தொகுஆரம்ப கால வாழ்க்கை
தொகுவெங்கடலட்சம்மா, காடூரில் உள்ள தங்கலி தண்டாவில் (இப்போது வி.எல். நகர் என்று அழைக்கப்படுகிறது) ஒரு லம்பாடி குடும்பத்தில் 1906 மே 29, அன்று பிறந்தார். இவரது எட்டாவது வயதில் இவருடைய தாத்தா மற்றும் பாட்டி, மைசூர் அரசவையின் புகழ்பெற்ற நடனக் கலைஞரான 'நாட்டிய சரசுவதி' ஜதி தாயம்மாவிடம் பரதநாட்டியம் பயிற்சி பெற அழைத்துச் சென்றனர்.
வெங்கடலட்சம்மா குருகுல அமைப்பில் நடனக் கலையைக் கற்றுக் கொண்டு, தனது பன்னிரெண்டு வயதில் 'ரங்க பிரவேசம்' என்ற அரங்கேற்றம் செய்தார். முனைவர் பி.தேவேந்திரப்பா மற்றும் சி.ராமராவ் [2] ஆகியோரிடமிருந்து கருநாடக இசையின் அத்தியாவசிய கூறுகளை கற்றுக்கொண்டார். ஆஸ்தான வித்வான்கள் எனப்படும், தேவோட்டாமா ஜோயிசு, சாந்தா சாஸ்திரி மற்றும் கிரி பட்டா ஆகியோரிடமிருந்து சமசுகிருதத்தைக் கற்றுக்கொண்டார். மேலும் தனது குரு தாயம்மாவுடன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.
வெங்கடலட்சம்மா தனது குரு தாயம்மாவின் வீட்டிற்கு அதிகாலையில் சென்று தொடர்ச்சியான கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவார், அவற்றில் சில சிக்கலான அபிநய பயிற்சிகளுக்காக, கண் தசைகளுக்கு பயிற்சி அளிக்க கண் இமைகளில் நாணயங்கள் மற்றும் ஊசிகளை வைத்து தூக்குவது போன்றவையும் அடங்கும். இவர், நிகழ்ச்சி என்று வரும்போது, ஆகார்யாவில் கனமான அலங்காரம் அல்லது செயற்கை நகைகள் அணிவது இல்லை. இவர் வாழ்ந்த காலத்தில், 'ரங்கப்பிரவேசம்' இப்போது இருப்பது போல ஒரு சமூக நிகழ்வு அல்ல.
தொழில்
தொகு1939 ஆம் ஆண்டில் மகாராஜா நான்காம் கிருட்டிணராசேந்திர உடையாரால் "ஆஸ்தான விதுஷி" என்ற அரசவை நடனக் கலைஞராக வெங்கடலட்சம்மா நியமிக்கப்பட்டார். விரைவில் இவர் பரதநாட்டிய உலகில் தனக்கென்று ஒரு பெயரைப் பெற்றார். [3] பரதநாட்டியத்தின் மைசூர் பாணியை அதன் உச்சத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. இவர், கடைசியாக, மைசூரை ஆண்ட ஆட்சியாளர்களான, ஹெச்ஹெச் கிருட்டிணராஜ உடையார் மற்றும் ஹெச்ஹெச் ஜெயச்சாமராஜ உடையார் அரசவைகளில் 40 ஆண்டுகளாக 'ஆஸ்தான விதுஷி'யாக பணியாற்றினார்.
அரண்மனையில் 40 வருட சேவைக்குப் பிறகு, பிரபல அபிநய நிபுணரான வெங்கடலட்சம்மா தனது சொந்த நிறுவனமான பாரதிய நிருத்ய நிகேதனத்தைத் நிறுவினார்.
1965 ஆம் ஆண்டில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நடனத் துறை நிறுவப்பட்டபோது, வெங்கடலட்சம்மா அதன் முதல் பேராசிரியரானார். 1974இல் ஒன்பது ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவரது பேத்தி சகுந்தலம்மா அதில் பேராசிரியராக பணியாற்றினார். வெங்கடலட்சம்மா இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். நடன ஆசிரியராகவும், பெங்களூரில் உள்ள பரதநாட்டியத்தின் நுபுரா பள்ளி உட்பட பல்வேறு நிறுவனங்களில் முதல்வராகவும் பணியாற்றினார்.
மைசூர் பாணி
தொகுபரதநாட்டியத்தின் மைசூர் பாணி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் கிருட்டிணராஜா உடையாரின் கீழ் அதன் அடையாளம் காணக்கூடிய வடிவத்தை ஏற்கத் தொடங்கியது, ஆனால் புகழ்பெற்ற தஞ்சை சகோதரர்களில் ஒருவரான சின்னையாவை மைசூர் அரசவைக்கு அழைத்த ஒன்பதாம் சாமராச உடையாரின் ஆட்சியின் போது செழிக்கத் தொடங்கியது. ஏற்கனவே இருந்த நடன வடிவங்களால் சின்னையாவின் செல்வாக்கு விரைவில் ஊக்கமளித்ததுடன், பரதநாட்டியத்தின் ஒரு பாணியை அதன் சொந்த தெளிவான நேர்த்தியில் வடிவமைத்தது.
மைசூர் அரசவையில் தாள களியாட்டம் செய்யப்படவில்லை என்று வெங்கடலட்சம்மாவின் மாணவி லலிதா சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இசையமைப்பின் பாடல் அழகு, பொருத்தமான முகபாவங்கள் மற்றும் கை சைகைகள் கொண்ட மெல்லிசை இசை முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் அபிநய வகைகளில் வளமான திறமை உருவாக்கப்பட்டது. இது மைசூர் பாணியை மற்ற வகை பரதநாட்டியங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. நிருத்தா என்பது பயிற்சி மற்றும் நுட்பத்தின் மூலம் ஒருவர் பெறும் திறமை ஆகும். அபிநயம் என்பது ஒரு நடனக் கலைஞரின் தனிப்பட்ட பார்வைகள் மற்றும் அவற்றின் இயல்பான திறனின் விளைவாகும். இது மிகவும் தனித்துவமானது. ஆகையால், ஒருவர் அபிநயத்தில் ஒரு நபருக்கு வழிகாட்ட முடியும், ஆனால் ஒருவர் அதை ஒருபோதும் முழுமையாக கற்பிக்க முடியாது. [4]
வெங்கடலட்சம்மா கன்னட எழுத்தாளரும் அரசியல்வாதியுமான பி.டி.லலித நாயக்கின் பேத்தி ஆவார். [5]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகு- சங்கீத நாடக அகாதமி விருது (1964 இல் கர்நாடகாவிலிருந்து அதன் முதல் விருது பெற்றவர்)
- சங்கீத் நிருத்யா அகாதமி விருது (1976)
- மைசூர் பல்கலைக்கழகத்தில் (1977) பட்டம் பெற்றவர்.
- கன்னட ராஜ்யோத்சவ விருது (1988)
- பெங்களூர் கயானா சமாஜாவைச் சேர்ந்த சங்கீத கலாரத்னா (1989)
- பத்ம பூசண் விருது (1992)
- நாட்டிய ராணி சாந்தலா மாநில விருது (கர்நாடகாவில் ஒரு நடனக் கலைஞருக்கான மிக உயர்ந்த விருது: 1995)
- ஹம்பி பல்கலைக்கழகத்தின் நாடோஜா விருது (2001) [6]
குறிப்புகள்
தொகு- ↑ India.gov list of Padma Bhushan awardees
- ↑ Nidamboor, Rajgopal. "A Zealous Servant Of Her Art". Wordoscope. Archived from the original on 2022-03-31. பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
- ↑ "Dancer Venkatalakshamma dead". TNN. Times of India. 3 July 2002. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Dancer-Venkatalakshamma-dead/articleshow/14899698.cms.
- ↑ Tomas, Lora (18 April 2014). "Beyond the Body". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/beyond-the-body/article5923314.ece.
- ↑ ನಾಯಕ್ [Naik], ಬಿ.ಟಿ. ಲಲಿತಾ [B.T. Lalitha]. ಬಂಜಾರ ಹೆಜ್ಜೆಗುರುತುಗಳು [Banjara Hejjegurutugalu]. Bangalore: ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯ ಪತ್ರಾಗಾರ ಇಲಾಖೆ [Karnataka Rajya Patragara Ilakhe]. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908438-1-2.
- ↑ Keshava, Dasappa. "My mentor Dr. K Venkatalakshamma". Narthaki.com. Narthaki Online. பார்க்கப்பட்ட நாள் 7 June 2015.