கொல்லி மலையாளி

கொல்லி மலையாளி எனப்படுவோர் மலையாள கவுண்டர் பழங்குடி வகுப்பில் காணப்படும் பெரிய அண்ணன் (பெரிய மலையாளி), நடு அண்ணன் (கொல்லி மலையாளி), சின்ன அண்ணன் (பச்சை மலையாளி) என்னும் மூன்று உட் பிரிவுகளில்[1] இரண்டாவது பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். இன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லி மலையை மையமாக கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் மலையை சார்ந்து வாழ்வதால் மலைவாழ் மக்கள் எனவும் மலையாளி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

வாழுமிடங்கள் தொகு

கொல்லி மலையாளிகள் நாமக்கல், ஆத்தூர் வட்டங்களிலுள்ள கொல்லி மலையிலும், போத மலையிலும், போத மலைக்கும் ஜெருகுமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கிலும், பால மலையிலும், பருகூர் மலையிலும், காளி மலையிலும் வாழ்கின்றனர். கொல்லி மலையில் இவர்கள் நான்கு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களில் முதல் இரண்டு பிரிவினரான முந்நாட்டு மலையாளிகளும், நானாட்டு மலையாளிகளும் முறையே நாமக்கல் வட்டத்தில் உள்ள சேலூர், வேலப்பூர் என்ற இடங்களில் பெரும்பாலும் வாழ்கின்றனர். மற்ற இரண்டு பிரிவினரான அஞ்சூர் (ஐந்து ஊர்) மலையாளிகளும், மூனூர் (மூன்று ஊர்) மலையாளிகளும் ஆத்தூர் வட்டத்திலே வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில், திருப்புலி, எடப்புலி, பிறகரை, சித்தூர் நாடுகளில் 7000 (1962 க்குகு முந்தைய கணக்கு) பேர் வாழ்கின்றனர். மூனூர் மலையாளிகள் குண்டுனி, அலத்தூர், பலாப்பாடி நாடுகளில் 1500 (1962 க்குகு முந்தைய கணக்கு) பேர் வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில் நாட்டைச் சேர்ந்த ‘பெரிய பட்டக்காரனின்’ ஆணைக்கு அடங்கியவர்கள். இப் பட்டக்காரன் பதவி ஒரே குடியில் தலைமுறையாக வருவது. ஆனால் அரசன் என்று அவன் அழைக்கப்படுவதில்லை. அரசனுக்குரிய அங்கங்களும் அவனுக்குக் கிடையாது.[2]

பழக்கவழக்கங்கள் தொகு

பல சிற்றூர்கள் சேர்ந்து ஒரு நாடு ஆகும். ஒவ்வொரு ஐந்து ஊர்களும் சேர்ந்து ‘ஊர்க் கவுண்டன்’ என்ற ஒருவனைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு ஊரிலும் வாழும்படியான ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு காரியக்காரன் உண்டு. இவனும் தேர்ந்தெடுக்கப்படுபவனே. ஏதாவது ஒரு ஊரில் சாதிச் சண்டை ஏற்பட்டால், ஊர்க் கவுண்டன் சண்டை ஏற்பட்ட ஊரிலுள்ள எல்லாக் காரியக்காரரையும் அழைத்துப் பேசித் தீர்த்து வைப்பது வழக்கம். அவ்வழக்கில் சம்பந்தப்பட்டோர் மேல் வழக் (Appeal) காட விரும்பினுல், பயில் நாட்டுப் பட்டக்காரனிடம் செல்ல வேண்டும். அப்பட்டக்காரன் அவ் வழக்குச் சம்பந்தப்பட்ட ஊரைச் சேர்ந்த ஊர்க் கவுண்டனையும், பயில் நாட்டு ஊர்க் கவுண்டனையும் கூட்டிவைத்துப் பேசித் தீர்ப்பது வழக்கம். எல்லாக் காரியக்காரர்களும், இவ்வழக்கு மன்றத்துக்கு வர வேண்டுமென்பதில்லை. ஆனால் குறைந்தது மூன்று பேராவது இருந்தால்தான் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்.[2]

மூனூர் மலையாளிகளிடையே வழக்கு ஏற்பட்டால், அவ்விடத்தைச் சேர்ந்த ஊர்க் கவுண்டன் வழக்கின் தன்மையை வேலப்பூரிலிருக்கும் நானாட்டு அரசருக்குத் தெரிவிப்பது வழக்கம். அவ்வரசர் வழங்கும் தீர்ப்பே முடிவானதாகும். போதமலையிலும் அதற்கடுத்தாற்போலுள்ள பள்ளத்தாக்கிலும் வாழும்படியான கொல்லி மலையாளிகள் கீழூரிலிருக்கும் ‘நாட்டான்’ என்ற தலைவனின் ஆணைக்குட்பட்டவர்கள். பவானி வட்டத்திலிருக்கும் கொல்லி மலையாளிகளும் இவன் ஆணைக்குட்பட்டவர்களே. ஆனால் இவனுடைய தீர்ப்பில் திருப்தியடையாதவர்கள் பயில் நாட்டுப் பெரிய பட்டக்காரனிடம் நீதி கேட்டுச் செல்வதுண்டு. வேலப்பூர் அரசன் இளைஞனாக இருந்தால், அவன் தாயாகிய இராணி மந்திரியின் துணைகொண்டு ஆட்சி செலுத்துவதுண்டு.[2]

பெரிய மலையாளிகளும் பச்சை மலையாளிகளும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்தை அனுமதிக்கின்றனர். ஆனால் கொல்லி மலையாளிகள் இதை அறவே வெறுக்கின்றனர். பச்சை குத்திக் கொண்ட யாரையும் தங்கள் வீட்டிற்குள் இவர்கள் நுழைய விடுவதில்லை.[2]

குறிப்புகள் தொகு

  1. தமிழியல் கட்டுரைகள் நூல், 1995, ந. சஞ்சீவி, வெளியீடு; சென்னை பல்கலைக்கழகம், பக்கம் 1
  2. 2.0 2.1 2.2 2.3 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லி_மலையாளி&oldid=3319132" இலிருந்து மீள்விக்கப்பட்டது