மலையாளி (பழங்குடியினர்)

தமிழ்நாட்டு பழங்குடியினர்
(மலையாள கவுண்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலை வேளாளர், மலையாளக் கவுண்டர், மலையாளி என்பவர்கள் வட தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வாழுகின்ற மக்களாவர். இவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் கடம்பூர் மலை (ஈரோடு), சேர்வராயன் மலை (சேலம்), கொல்லி மலை (நாமக்கல்), பச்சை மலை (திருச்சி), கல்வராயன் மலை (தருமபுரி), ஏலகிரி மலை (திருப்பத்தூர்), சித்தேரி மலை (அரூர்) மற்றும் ஜவ்வாது மலை (திருப்பத்தூர்) ,(கல்வராயன் மலை)(திருவண்ணாமலை) போன்ற இடங்களில் காணப்படுகின்றனர். இவர்கள் "காராள வேளாளர்" எனவும் "கொங்கு வேளாளர்" எனவும் அழைக்கப்படுகின்றனர். மேலும், இவர்கள் மலைகளில் குடியேறியுள்ளதால், மலைகளை ஆள்பவர் என்னும் பொருளில் தங்களை "மலையாளி" என்றும் அழைத்து கொள்கின்றனர்.[1]

ஜவ்வாது மலை, சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த மலையாளி

இம்மகளின் பேசும் மொழி தமிழாகும். இம்மக்களின் எண்ணிக்கையானது 1962 க்கு முந்தைய பதிவின்படி ஆத்தூர் வட்டத்தில் 14,000, சேலம் வட்டத்தில் 10,000, ஊத்தங்கரை வட்டத்தில் 10,000, நாமக்கல் வட்டத்தில் 12,000 என்று இருந்துள்ளது. இம்மலை வாழ் மக்களில் ஒரு சிலர் மலைகளினின்றும் நீங்கி ஓமலூர், ஊத்தங்கரை முதலிய சமவெளி ஊர்களிலும் வாழ்கின்றனர்.[2]

வரலாறு

தொகு

இவர்கள் 15-ஆம் நூற்றாண்டில் அரசியல் மற்றும் போரின் காரணங்களால் தொண்டை மண்டலத்திலிருந்து (காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை) இடம்பெயர்ந்த வேளாளர் கூட்டம் ஆகும். (15-ஆம் நூற்றாண்டில் முகமதியரின் படையெடுப்பால் இடம்பெயர்ந்த இனம் என்று எட்வர் தர்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்).

இவர்கள் மலைகளில் குடியேறியபின், மலைகளை திருத்தி இன்றும் வேளாண் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களை காராளன் எனவும் அழைத்துக்கொள்கின்றனர். இவர்கள் தங்களை பெரிய அண்ணன் (பெரிய மலையாளி), நடு அண்ணன் (கொல்லி மலையாளி), சின்ன அண்ணன் (பச்சை மலையாளி) என்று மூன்று பிரிவுகளாக வாழ்கின்றனர்.[3] அதற்கு இவர்களிடத்தில் பரவலாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் என்ற மூன்று உடன் பிறந்தார்கள் ஒரு நாள் மூன்று வேட்டை நாய்களோடு வேட்டைக்குச் சென்றனராம். மூவரும் காட்டின் மூன்று பகுதிகளுக்குப் பிரிந்து சென்று வேட்டையாடினர். அப்பொழுது அடைமழை பிடித்து இரண்டு நாள் ஓயவில்லை. அவர்களாலும் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஆனால் அவர்களுடைய நாய்கள் மட்டும் வீடு சேர்ந்தன. கணவன்மார் இன்றித் தனியே நாய்கள்மட்டும் வீடு திரும்பியதைக் கண்ட மனைவியர், தங்கள் கணவன்மார் காட்டில் கொன்றுண்ணி விலங்குகளால் இறந்துபட்டதாகக் கருதி, அக்காலத்திய வழக்கத்தின்படி வீடுகளுக்குத் தீயிட்டு அந்நெருப்பில் தாங்களும் வீழ்ந்து மடிந்தனர். மூன்றாம் நாள் மழை விட்டு வீடு திரும்பிய மூன்று உடன்பிறப்புகளும், இல்லமும் மனைவியரும் வெந்து நீறானதைக் கண்டு வருந்தினர். சிலகாலம் கழித்து மூவரும் வேறு பெண்களை மணமுடித்துக் கொண்டனர். பெரியண்ணன் ஒரு கைக்கோள மாதை மணம் புரிந்து கொண்டு, கல்ராயன் மலையில் குடி புகுந்தான். நடுவண்ணன் ஒரு வேடர்குல மகளை மணந்து கொண்டு கொல்லி மலையில் வாழச் சென்றான். சின்னண்ணன் தேவேந்திரப் பள்ளர் குலத்தில் பெண்ணோடு, பச்சைமலையை வாழ்விடமாகக் கொண்டான். இம்மூவரின் வழிவந்தோரே பெரிய மலையாளிகள் என்றும், பச்சை மலையாளிகள் என்றும், கொல்லி மலையாளிகள் என்றும் மூன்று பிரிவினராக வாழ்கின்றனர் என ஒரு கதை நிலவுகிறது.[2]

இதிலிருந்து சிறிது மாறுபட்ட வேறு கதையும் நிலவுகிறது அதன்படி ஒரு சில தலைமுறைக்கு முன்னால் வடக்கிலிருந்து ஒரே குடும்பதை சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகளும், ஒரு தங்கையும் வந்தனர். இவர்கள் நாமக்கலில் அருகிலுள்ள காளப்பநாயக்கன்பட்டியில் (சிலர் தம்மம்பட்டி என்றும் கூறுகின்றனர்) தங்கிருந்தபொழுது உணவை தேடி மூத்த அண்ணன் சென்றார். அவர் திரும்பி வராததால் இரண்டவது அண்ணனும் சென்றார், அவரும் வராததால் மூன்றாவது அண்ணனும் தங்கையை தனியாக விட்டு சென்றார். அப்பொழுது நாயக்க இனத்தை சேர்ந்த ஒருவர் தனியாக இருந்த அவர்களின் தங்கையை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். மூன்று பேரும் திரும்பி வருகையில் தங்கையை காணவில்லையாததால் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு புறமாக தங்கையை தேடி சென்றார்கள். ஆனால் தங்கை கிடைக்கவில்லை. இதில் பெரிய அண்ணன் சேரவராயன் மலையிலும், நடு அண்ணன் கொல்லி மலையிலும், சின்ன அண்ணன் பச்சை மலையிலும் தங்கிவிட்டார்கள்" என்று கல்வராயன் மலையிலுள்ள ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், சிறுமலை கிராமத்தில் வசிக்கும் துரைசாமி கவுண்டர்- இராமாயி அம்மாள் தம்பதியர் (சின்ன அண்ணன் இனம்) கூறுகிறார்கள்.

இவர்களின் கூற்றுப்படி பார்த்தால், போரின் போது தொண்டை மண்டலத்திலிருந்து ஒரே ஒரு குடும்பம் மட்டும் இடம்பெயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மூன்று பிரிவாக பிரிந்திருக்கலாம், மூன்று பிரிவிற்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகளும் தலைமை தாங்கிருக்கலாம் அல்லது மூவருடய பங்காளிகளும் அவரவருடய இடத்தில் மிகுதியாக இருந்திருக்கலாம், அவர்களுடன் தங்க்கியிருந்த சிறுபான்மையிரும் தங்களை அப்பிரிவாகவே அழைத்திருக்கலாம்.

இவர்களிடயே கூறப்படும் இக்கதை இடதிற்கேற்ப பலவாறு கூறப்பட்டாலும், மூன்று அண்ணன் தம்பிகளும் அவர்கள் இடம்பெயர்ந்த மலைகளும் அனைவரிடமும் பரவலாக கூறப்படுகிறது. இதிலிருந்து, தலைமுறை தலைமுறையாக கூறப்படுகிற இச்செய்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது என்பது புலனாகிறது.

பண்பாடு

தொகு

மேலும் இம்மக்கள் உழவு தொழிலை நம்பி வாழ்வதிலிருந்தும், காலம்காலமாக தங்கள் பெயரோடு கவுண்டர் என்ற புனைபெயரை சேர்த்துகொள்வதிலிருந்தும், தொண்டைமண்டலத்திலுள்ள கடவுளான வரதராச பெருமாளயும்(திருமால்), அண்ணமலையாரயும்(சிவன்) தங்கள் குலதெய்வமாக வணங்குவதிலிருந்தும், இவர்கள் அரசியலில் காணப்படும் பதவிகளான பட்டகாரன், நாட்டார், காரியகாரர், ஊர் கவுண்டர், கங்காணி பொன்ற பதவிகளும் தொண்டை மண்டல வேளாளரில் காணப்படுவதிலிருந்தும் இவர்கள் தொண்டை மண்டலதிலிருந்து இடம்பெயர்ந்த "வேளாளர்" இனம் என்பது தெளிவாகிறது.

குலம் மற்றும் தெய்வம்

தொகு

"குலம்" என்பது ஒருவர் தன்னை இன்னோர் வழி வந்தோர் என கூறிகொள்ளவும், உறவு முறைகளை அறிந்துகொள்வதற்கும் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்குலத்தை வைத்துதான் இன்னவன் நமக்கு திருமண உறவு அல்லது பங்காளி உறவு என்பதை தீர்மானிப்பார்கள். ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.

இவர்களிடமும் பலவகையான குலங்கள் காணப்பட்டாலும், பெரும்பாலும் திருமாலையும், சிவனையும் வழிபடுகின்றனர். இவர்களில் பரவலாக பட்டை (சிவனின் அடையாளம்) போடுபவர்கள் நாமம் (திருமாலின் அடையாளம்) போடுபவர்களிடம் மண உறவு வைத்துகொள்கிறார்கள். முதலில் இவர்கள் தம்மூவர்க்குள் திருமண உறவு வைத்துகொள்ளாமல் இருந்தாலும் தற்பொழுது மண உறவு கொள்கிறார்கள்.இவர்களின் குலங்களில் சில,

குலங்கள்

தொகு

துரை வீடு என்பதில் (அரையன் வீடு மற்றும் கல்ரியன் வீடு) இரு பிரிவு உள்ளது. இதில் அரையன் வீடு சார்ந்த நபர்கள் துரை பட்டத்தை கொண்டிருப்பர். நாட்டாண் வீடு (நாட்டார் பதவியை வகிப்பவர்கள்), மேலும் பண்ண வீடு, கொளப்பாண்டி , மங்களம் வீடு, கொக்கிரி வீடு, கருமலையான் வீடு, ஆடியன் வீடு, பள்ளையன் வீடு, மொழையான் வீடு, குரும்பன் வீடு, நல்லியாகவனன், நாவூரான், அரசடியான், எடப்பாடியான், பொன்னவரத்தான், சேரடியான், தாலத்தான், கெத்தகன், பன்னிகுடியான், பிலாகாட்டான், தும்புடயான், வாசாண், பூச்சுக்கண்ணான், கோமாளி, சோழன், வாண்டையான், வேளக்கவணன், காளித்திகவணன், காடயான், தீத்தி, புதூரான், கோமியான், மோலூரான், குப்பத்தான், பெரியண்ணன்.

குலதெய்வம்

தொகு

கரிய ராமர், வரதராச பெருமாள், சேரடி பெருமாள், வாந்தாரை பெருமாள், வேப்படி பெருமாள், சின்ன திருப்பதி, அண்ணாமலயார், அரபலீசுவரர், மொழலை ஈசுவரன், துரௌபதி அம்மன், துர்க்கை அம்மன், காளியம்மன், வட மலையான் ஆகிய தெய்வங்கள் இவர்களின் குல தெய்வங்களில் சில ஆகும். மாரியம்மன் (மழைதெய்வம்) இவர்களுக்கு பொதுவான கடவுள் ஆகும்.

இச்சமூகத்தினர் அனைவரும் மாசி மாதத்தில் வீட்டுச்சாமி என்ற பெயரில் பெரியாண்ட்டிச்சி அம்மனுக்கு ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவற்றை பலியிட்டு முப்பூசை நடத்துகின்றனர். புரட்டாசி மாதம் திருமாலுக்கு விழா கொண்டாடுகின்றனர். அம்மாதத்தில் திருமாலை வழிபடுபவர்கள் பலியிடுவதயும், அசைவ உணவையும் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். மாரியம்மனுக்கு பங்குனி மாதத்தில் விழா நடத்துகின்றனர்.

தொழில்

தொகு

இம்மக்கள், மலையில் குடியேறியப்பின் உணவுக்காக வேளாண் தொழிலோடு வேட்டை தொழிலும் செய்துள்ளனர் என்பது இவர்களின் திருமண சடங்கின்போது கூறப்படும் "வேடன் பொண்டாட்டி இனி காராளன்(உழவன்) பொண்டாட்டி" என்பதிலிருந்து தெரிகிறது.

நிலப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் போல் உழவு தொழிலையே நம்பி வாழ்கின்றனர். மலை பகுதியில் உள்ள மக்கள் தினை, சாமை, கம்பு, சோளம், வரகு மற்றும் நெல், மிளகு, சீரகம் மற்றும் கடுகு போன்ற பயிர்களை பயிரிடுகின்றனர்.குறிப்பாக சேர்வராயன் மலையிலும்,கொல்லி மலையிலும் காப்பி,தேக்கு மற்றும் சவுக்கை தோட்டங்களை வைத்துள்ளனர்.கொல்லி மலையில் பல வகையான நோய்களை குணப்படுத்தும் மூலிகைகள் கொண்டு மருத்துவம் பார்க்கின்றனர்.

கல்வி

தொகு

இம்மக்களின் கல்வி தரம் சரிவர காணப்படாததால் தமிழக அரசு இவர்களுக்கு பழங்குடி இனத்துக்கு இணையான சலுகைகளை வழங்கியுள்ளது. ஆதலால் இம்மக்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் கண்டு அரசின் அனைத்து துறையிலும் காணப்படுகின்றனர்.

அரசியல்

தொகு

இம்மக்கள் தங்களுடய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கும்,ஒழுக்கமுறைகளை கடைப்பிடிப்பதற்கும் ஏனைய இனங்களில் காணப்படுவதைப்போல தங்களுக்குள்ளாகவே அரசியலை வகுத்துக்கொண்டுள்ளனர். அவை பின்வருமாறு,

1.பட்டக்காரன் 2.நாட்டார் 3.காரியகாரர் 4.ஊர் கவுண்டர் 5.கங்காணி 6.மூப்பன்

பட்டக்காரன்

தொகு

மூன்று அண்ணன் இனத்திலும் ஒவ்வொரு இனத்திற்கும் பொதுவாக பட்டக்காரன் காணப்படுகிறார். இவரே அவ்வினத்தின் மூத்த அதிகாரி ஆவார்.

நாட்டார்

தொகு

இவர் பட்டகாரருக்கு அடுத்தப்படியாக உள்ள அதிகாரி ஆவார். பல குறிப்பிட்ட கிராமங்களை அல்லது ஊர்களை உள்ளடக்கிய "நாடு"பகுதியை கண்காணிக்கும் பொறுப்பு இவருடயது ஆகும்.இவர் பட்டகாரரால் பட்டங்கட்டப்பட்ட பின்னால்தான் நாட்டார் என அழைக்கப்படுகிறார். இந்த பட்டங்கட்டுதல் எனப்படுவது ஒரு பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டு, அவர்களின் முன்னால் நாட்டாருக்கு பட்டங்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின் அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்படுகிறது.

காரியக்காரர்

தொகு

இவர் நாட்டாருடய உதவியாளர் ஆவார்.நாட்டார் இடும் உத்தரவை ஊர் கவுண்டனிடம் கொண்டு செல்வதே இவரின் பணியாகும்.

ஊர் கவுண்டர்

தொகு

இவர் நாட்டாரால் தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு ஊரிலும் தனித்தனியாக ஊர்கவுண்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வூரை கண்காணிக்கும் பொறுப்பை பெறுகிறார். நாட்டார் இடும் உத்தரவை ஊரில் அமலாக்குவதே இவரின் வேலை ஆகும்.

கங்காணி

தொகு

இவர் ஊர்கவுண்டரின் உதவியாளர் ஆவார்.

மூப்பன்

தொகு

இவர் கங்காணிக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Koṅku Vēḷāḷar kula varalār̲". 2023-03-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
  2. 2.0 2.1 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
  3. தமிழியல் கட்டுரைகள் நூல், 1995, ந. சஞ்சீவி, வெளியீடு; சென்னை பல்கலைக்கழகம், பக்கம் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளி_(பழங்குடியினர்)&oldid=4101740" இலிருந்து மீள்விக்கப்பட்டது