பச்சை மலையாளி

பச்சை மலையாளி எனப்படுவோர் மலையாள கவுண்டர் பழங்குடி வகுப்பில் காணப்படும் பெரிய அண்ணன் (பெரிய மலையாளி), நடு அண்ணன் (கொல்லி மலையாளி), சின்ன அண்ணன் (பச்சை மலையாளி) என்னும் மூன்று உட் பிரிவுகளில்[1] மூன்றாவது பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பச்சை மலையை மையமாக கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் மலையை சார்ந்து வாழ்வதால் மலைவாழ் மக்கள் எனவும் மலையாளி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

15-ஆம் நூற்றாண்டின் போது போரின் காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த வேளாளர்கள் என எட்கர் தர்ஸ்டன் "தென்னிந்தியாவின் குலங்களும் குடிகளும்" என்னும் ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். இவர்கள் தங்கள் பெயரோடு கவுண்டர் என இணைத்துக் கொள்வதோடு தங்களை ”காராளன்” (கார்+ஆளன் = கார்மேகத்தை ஆள்பவன்) எனவும் கூறிக்கொள்கின்றனர். இவர்கள் பரவலாக வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர்.

இவர்களுக்குள் நாவூரான், வாண்டையான், வேளாக்கவணன், காளித்திக்கவணன், பொன்னவரத்தான், காடயான், தீத்தி, ஒடுவக்கட்டையான் என இன்னும் பல குலங்கள் காணப்படுகிறது. ஒரே குலத்தினுள் இவர்கள் திருமணம் செய்துக்கொள்வதில்லை. ஆதியில் பெரிய மலையாளியோடும், கொல்லி மலையாளியோடும் மணவுறவு கொள்வதில்லையாயினும் தற்பொழுது மணவுறவு கொள்கிறார்கள். இவர்கள் காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் தெய்வத்தை முக்கிய கடவுளாக வழிபடுகின்றனர். மதூர் (சேரவராயன் மலை), வேப்படி (பச்சை மலை), பாலக்காடு (பச்சை மலை) கிராமத்துலுள்ள வரதராஜ பெருமாள் கோவில் இதில் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும். புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் இக்கடவுளுக்கு பெரிய விழா எடுக்கின்றனர். (வாண்டயார் என்னும் குலம் முக்குலத்தோரில் காணப்படும் மறவர் இனத்திலும் காணப்படுகிறது).

பல சிற்றூர்கள் சேர்ந்து ஒரு நாடு ஆகும். பச்சை மலை வன்னாடு (வெண்நாடு), தெம்பர நாடு (தென்புற நாடு), கோம்பை நாடு (அத்தி நாடு), என மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடும் பட்டக்காரர் கண்காணிப்பில் வருகிறது. ஒவ்வொரு நாடும் நாட்டார் கண்காணிப்பிலிருக்கும். இந்த நாட்டார் பட்டக்காரருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். இவருக்கு உதவியாக காரியக்காரர் என ஒருவர் காணப்படுகிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊர்க்கவுண்டர் காணப்படுகின்றார். இவர் நாட்டாருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். கங்காணி மற்றும் மூப்பன் என்னும் பதவியாளர்கள் ஊர்க்கவுண்டருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்.

முதல் இரு நாடுகளான வெண்ணாடும், தென்புற நாடும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளன. மூன்றாவது நாடான அத்தி நாடு, ஆத்தூர் வட்டத்திலுள்ள பச்சை மலையில் உள்ளது. பச்சை மலையாளிகள் இன்னும் ஆத்தூர் வட்டத்திற்கப்பால், தும்பல் பள்ளத்தாக்கிலும், வசிட்ட நதிப் பள்ளத்தாக்கின் உச்சியிலும், அரனூத்து மலையிலும், மஞ்சவாடிக் கணவாயிலும், சேர்வராயன் மலையின் மேற்கு அடிவாரத்திலுள்ள கஞ்சேரி, பாலமேடு என்னும் சிற்றூர்களிலும், தொப்பூர் ஆற்றுக்கரையிலுள்ள வேப்பாடியிலும் வாழ்கின்றனர்.

சாதி நிர்வாகத்திற்காக இவர்கள் பலதுணை நாடுகளாகவும் கரை அல்லது தமுக்குகளாகவும் பிரிந்து வாழ்கின்றனர். எடுத்துக்காட்டாகப் பச்சை மலையிலுள்ள நல்லியக் கவுண்டன் நாடு, காளத்திக் கவுண்டன் நாடு, பச்சை மலைக்கு மேற்கிலுள்ள மண்மலை நாடு, பைத்தூர் நாடு என்பன குறிப்பிடத்தக்கவை. தும்பல் பள்ளத்தாக்கில் உள்ள மாமஞ்சியிலும், அரனூத்து மலையிலுள்ள ஆலடிப்பட்டியிலும், பேளூருக்கு வடக்கில் வசிட்ட நதிப் பள்ளத்தாக்கில் உள்ள கீரிப்பட்டியிலும், கரமண்டையிலும், சேர்வராயன் மலைச் சரிவுகளிலுள்ள ஊர்களிலும், மஞ்சவாடிக் கணவாய்க்கு வடக்கிலுள்ள தொம்பக்கள்ளனூர், பட்டுக்குணம் பட்டி என்ற ஊர்களிலும் நாட்டான் என்பவனைத் தங்கள் தலைவனாய்ப் பச்சை மலையாளிகள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு துணை நாடும் பல பட்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பட்டியும், அவ்வூர்க் கவுண்டனின் ஆணைக்குட்பட்டிருக்கும். அவ்வூர்க் கவுண்டனுக்கு மூப்பன் என்று பெயர். அவனுக்குத் துணையாகக் கங்காணி என்ற தலைவனும் உண்டு. ஒவ்வொரு துணை நாட்டிற்கும் ஒரு தலைவனுண்டு. அவனை நாட்டான் என்று அழைப்பர். அவனுக்கு நாட்டுக் கவுண்டன், குட்டிக் கவுண்டன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒவ்வொரு நாட்டானுக்கும் துணையாகப் பல காரியக் காரர்களுண்டு. அவர்களைப் பணியில் அமர்த்தும் அதிகாரம் நாட்டானுடையது. இந் நாட்டான் ஏழு சின்னதுரைகளடங்கிய அவையின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இந்த அவையின் தலைவனுக வீற்றிருப் பவன் பெரியதுரை. இவனை ராஜா என்றும் சில சமயங்களில் குறிப்பிடுவதுண்டு. இவன் வாழ்விடம் பச்சை மலையிலுள்ள சேதகம். இத் துரைமார்களுக்குப் பல பேரமைச்சர்களுண்டு. ஆனல் அவ்வமைச்சர்களின் அதிகாரம் மிகவும் குறைவுதான். இவ்வமைச்சர்கள் பச்சை மலையிலுள்ள பக்கலத்திலும், பைத்தூரிலும், கீரிப்பட்டியிலும் வாழ்கிறார்கள். பைத்தூர் அமைச்சன் பன்னிரண்டு கரை மக்களாலும், கீரிப்பட்டி அமைச்சன் ஆறு கரை மக்களாலும் ஏற்றுப் போற்றப்படுவான். பைத்தூர் அமைச்சன் பக்கலம் அமைச்சனைத் தன் ஆணைக்கடங்கியவகைக் கருதுவதுண்டு.[2]

குறிப்புகள் தொகு

  1. தமிழியல் கட்டுரைகள் நூல், 1995, ந. சஞ்சீவி, வெளியீடு; சென்னை பல்கலைக்கழகம், பக்கம் 1
  2. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_மலையாளி&oldid=3062112" இலிருந்து மீள்விக்கப்பட்டது