கோட்டை கட்டுதல்
சதுரங்கத்தில், கோட்டை கட்டுதல் (castling) என்பது அரசனையும் அதே நிறக் கோட்டைகளுள் ஏதேனுமொன்றையும் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு சிறப்பு நகர்வு ஆகும்.[1] சதுரங்கத்தில் இரண்டு காய்களை ஒரே நேரத்தில் நகர்த்தக்கூடிய ஒரே நகர்வு இதுவே.[2] கோட்டை கட்டுதல் என்பது அரசனை முதலாவது வரிசையிலுள்ள கோட்டையை நோக்கி இரண்டு கட்டங்கள் நகர்த்தி, அக்கோட்டையை அரசன் கடந்து வந்த கட்டத்துக்குள் வைப்பதைக் குறிக்கும்.[3] அரசனும் தொடர்புபடுகின்ற கோட்டையும் போட்டி தொடங்கியதிலிருந்து நகர்த்தப்படாமலும் அரசனுக்கும் தொடர்புபடுகின்ற கோட்டைக்கும் இடைப்பட்ட கட்டங்கள் கைப்பற்றப்படாமலும் அந்நகர்வில் அரசன் முற்றுகையில் இல்லாதிருந்தாலும் அரசனை முற்றுகைக்காளாக்கக்கூடிய கட்டத்தைக் கடக்கவோ அடையவோ நேராவிட்டாலும் மட்டுமே கோட்டை கட்ட முடியும்.[4] கோட்டை கட்டுதலானது சதுரங்க விதிமுறைகளுள் அடங்குகின்றது.
ஐரோப்பியச் சதுரங்கத்தில் 14ஆம் நூற்றாண்டு அல்லது 15ஆம் நூற்றாண்டில் கோட்டை கட்டுதல் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கருதப்படுகின்றது. சதுரங்கத்தின் ஆசிய வகைகளில் கோட்டை கட்டுதல் காணப்படவில்லை.
குறியீடு
தொகுஇயற்கணிதக் குறியீட்டு முறையில், அரசனின் பக்கமாகக் கோட்டை கட்டுதலானது 0-0 என்பதன் மூலமும் அரசியின் பக்கமாகக் கோட்டை கட்டுதலானது 0-0-0 என்பதன் மூலமும் காட்டப்படும்.[5] அரசனின் பக்கமாகக் கோட்டை கட்டதலானது குறுங்கோட்டை கட்டுதலென்றும் அரசியின் பக்கமாகக் கோட்டை கட்டுதலானது நெடுங்கோட்டை கட்டுதலென்றும் அழைக்கப்படும். இவ்விரு கோட்டை கட்டும் முறைகளுக்குமிடையிலான வேறுபாடானது, கோட்டை இரண்டு கட்டங்களா மூன்று கட்டங்களா நகர்கின்றது என்பதேயாகும்.
கட்டுப்பாடுகள்
தொகுபின்வரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பொருந்தினால் மட்டுமே கோட்டை கட்டுதல் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது.
- இதற்கு முன்னர் அரசன் நகர்த்தப்படவில்லை.
- கோட்டை கட்டுதலில் பயன்படுத்தப்படும் கோட்டையானது இதற்கு முன்னர் நகர்த்தப்படவில்லை.
- அரசனுக்கும் தொடர்புபடுகின்ற கோட்டைக்கும் இடையே எந்தக் காய்களும் இல்லை.
- அரசன் இப்போது முற்றுகையின் கீழ் இல்லை.
- எதிரிக் காய்களின் தாக்குதலின் கீழுள்ள கட்டத்தை அரசன் கடந்து செல்லாது.[6]
- அரசன் செல்கின்ற கட்டம் அரசனை முற்றுகைக்காளாக்காது.
- அரசனும் தொடர்புபடுகின்ற கோட்டையும் ஒரே வரிசையில் உள்ளன.
கோட்டை கட்டுதலுக்குப் பின்வருங்கட்டுப்பாடுகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென எண்ணுவது தவறாகும்.
- கோட்டை கட்டுதலில் ஈடுபடும் கோட்டை எதிரிக் காயின் தாக்குதலின் கீழ் இருக்கக்கூடாது.
- அரசியின் பக்கம் கோட்டை கட்டும்போது, கோட்டைக்குக் கிடையாக அருகிலுள்ள கட்டம் எதிரிக் காயின் கீழ் இருக்கக்கூடாது.
போட்டித் தொடர் விதிகள்
தொகுபெரும்பாலான போட்டித் தொடர்களில் கைப்பிடிக்கப்படும் கடுமையான தொட்டதை நகர்த்தும் விதிகளின் கீழ், கோட்டை கட்டுதலானது அரசனின் நகர்வாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் இப்போதைய ஐக்கிய அமெரிக்கச் சதுரங்கப் பேரவையின் விதிகளின்படி, முதலில் கோட்டையைத் தொட்டாலுங்கூட எவ்வித ஒறுப்புமின்றிக் கோட்டை கட்ட முடியும். என்றாலுங்கூட, கோட்டை கட்டுவதற்கான சரியான வழி அரசனை முதலில் நகர்த்துவதே.
கோட்டை கட்டுதலை மேற்கொள்ளும்போது அனைத்து நகர்வுகளையும் ஒரே கையாலேயே மேற்கொள்ள வேண்டுமென்றும் அலுவல் முறை விதிகள் கூறுகின்றன. போட்டி முறையில் அமையாத ஆட்டங்களிலும் பொதுவான ஆட்டங்களிலும் இவ்விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்
தொகு- ஊரி ஆவெர்பக்குக்கும் செசில் பேர்டிக்கும் இடையிலான இவ்வாட்டத்தில் கறுப்பானது அரசியின் பக்கமாகக் கோட்டை கட்டியது. வெள்ளையின் தாக்குதலின் கீழுள்ள கட்டமொன்றைக் கறுப்புக் கோட்டைக் கடந்து சென்றதை அவதானித்த ஆவெர்பக்கு, கோட்டை கட்டுதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதானதன்று என எண்ணினார்.[7] ஆனால், இந்த விதியானது அரசனுக்கு மட்டுமே ஏற்புடையது எனப் பேர்டி மெய்ப்பித்தார். ஆவெர்பக்கு, அரசன் மட்டுமா? கோட்டை இல்லையா? எனப் பதிலளித்தார்.
- 1974இல் விக்டர் கோர்ச்னோய் அனத்தோலி கார்ப்பொவுக்கு எதிரான போட்டியில், கோட்டையானது தாக்குதலின் கீழ் இருந்தால் கோட்டை கட்டலாமா என நடுவரிடம் கேட்டார்.[8] நடுவர் ஆமெனப் பதிலளித்தார். இறுதியில் விக்டர் கோர்ச்னோயே வெற்றி பெற்றார்.
- 1973ஆம் ஆண்டு இடப்லினில் உல்வ்கேங்கு எயிடென்வெல்டுக்கும் நிக்கு கேரின்சுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் மூன்று கோட்டை கட்டுதல்கள் இடம்பெற்றன.[9] இப்போட்டியில் மூன்றாவது கோட்டை கட்டுதல் (வெள்ளையின் இரண்டாவது கோட்டை கட்டுதல்) விதிமுறைகளுக்கு முரணானது.
- திம் கிராப்பி செங்குத்துக் கோட்டை கட்டுதலைக் கொண்ட (e1இல் அரசனும் e8இல் நிலை உயர்த்தப்பட்ட கோட்டையும்) நகைச்சுவைச் சதுரங்கச் சிக்கல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இலாற்கர் ஆட்டம்
தொகு1912ஆம் ஆண்டு எட்வர்டு இலாற்கருக்கும் சார்ச்சு தோமசுக்கும் இலண்டனில் இடம்பெற்ற போட்டியில் 17.... Kg1 என்ற நகர்வை மேற்கோண்டது. வெள்ளையானது 18.0-0-0# என்ற நகர்வின் மூலம் கறுப்பை இறுதி முற்றுகைக்காளாக்கியிருக்கலாம். ஆயினும் 18.Kd2# என்ற நகர்வின் மூலமே கறுப்பானது இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டது.[10]
பிரின்சு எதிர் தே
தொகுஉலோதேவிச்கு பிரின்சுக்கும் இலாரன்சு தேக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியானது கோட்டை கட்டுதலுடன் பின்வருமாறு நிறைவுற்றது:-
31.... 0-0-0#[11]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ["கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22. கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)]
- ↑ "கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-29. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
- ↑ ["அலுவல் முறை ஐக்கிய அமெரிக்கச் சதுரங்கப் பேரவை விதிகள் (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-06-24. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22. அலுவல் முறை ஐக்கிய அமெரிக்கச் சதுரங்கப் பேரவை விதிகள் (ஆங்கில மொழியில்)]
- ↑ ["கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22. கோட்டை கட்டுதல் (ஆங்கில மொழியில்)]
- ↑ சதுரங்கத்தின் விதிகள்: கோட்டை கட்டுதல் அகேகே (ஆங்கில மொழியில்)
- ↑ இ. 1. 01ஏ. சதுரங்கத்தின் விதிகள் (ஆங்கில மொழியில்)
- ↑ ஊரி ஆவெர்பக்கு எதிர் செசில் சான் சேடன் பேர்டி (ஆங்கில மொழியில்)
- ↑ விக்டர் கோர்ச்னோய் எதிர் அனத்தோலி கார்ப்பொவு (ஆங்கில மொழியில்)
- ↑ நகர்வுகள் (ஆங்கில மொழியில்)
- ↑ எட்வர்டு இலாற்கர் எதிர் சார்ச்சு அலன் தோமசு (ஆங்கில மொழியில்)
- ↑ உலோதேவிச்கு பிரின்சு எதிர் இலாரன்சு தே (ஆங்கில மொழியில்)