கோத்தாரிக் கல்விக் குழு

கோத்தாரிக் கல்வி ஆணையம் (Kothari Education Commission) கல்வி வளர்ச்சியில், அளவையும் தரத்தையும் மேம்படுத்த இந்திய அரசுக்கு ஆலோசனைகள் அளித்திடும் நோக்கத்தோடு 1964ம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்டது. தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழக கல்வி வரை இந்தியக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் ஆராய்ந்து, அதற்கான உரிய தீர்வுகளை அரசுக்கு பரிந்துரைக்குமாறு இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.[1]

கோத்தாரிக் கல்விக் குழு தோற்றம்

தொகு

இந்திய பாராளுமன்றம் 14 ஜூலை 1964ல் கொண்டுவந்த தீர்மானத்தின் படி, அன்றைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த போராசிரியர். டி. எஸ். கோத்தாரி அவர்களின் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. எனவே இக்குழு கோத்தாரிக் கல்விக் குழு என அழைக்கப்படுகின்றது. 14 உறுப்பினர்கள், 1 செயலர், 1 இணைச் செயலர் மற்றும் 1 தலைவர் என மொத்தம் 17 உறுப்பினர்களைக் கொண்டது இக்குழு. குழுவின் தலைவர் பேராசிரியர். D.S. கோத்தாரி, பூனே நகரத்தில் அரசியல், பொருளாதாரக் கழகத்தின் நிதி, நிர்வாகம் மற்றும் திட்டமிடுதல் துறையின் தலைவராக விளங்கிய திரு. J.P. நாயக் செயலராகவும், J.F.மெக்டோகல் (J.F.McDougall) இணைச் செயலராகவும் நியமிக்கப்பட்டனர். பிரிட்டன், ஐக்கிய அமெரிக்க நாடு, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளின் கல்வியாளர்கள் தலா ஒருவர் வீதம் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 20 நிபுணர்களின் ஆலோசனைகளும் இக்குழுவுக்கு கிடைத்தது.[2]

குழு உறுப்பினர்கள்

தொகு
வ. எ உறுப்பினர் பெயர் மற்றும் குழுவில் பதவி பதவி
1 பேராசிரியர் டவுளத் சிங் கோத்தரி, தலைவர் தலைவர், பல்கலைக்கழக மானியக்குழு
2 ஏ. ஆர். தாவுத்,

உறுப்பினர்

முன்னாள் இயக்குநர், இடைநிலைக் கல்வி விரிவாக்கத் திட்டங்கள், புது தில்லி
3 எச். எல். லெவின், உறுப்பினர் இயக்குநர், கல்வியியல் நிறுவனம், இலண்டன் பல்கலைக்கழகம், இலண்டன்
4 ஆர். ஏ. கோபால்சுவாமி,

உறுப்பினர்

இயக்குநர், மனிதவள மேம்பாட்டு நிறுவனம், புது தில்லி
5 பேராசிரியர் சடோஷி ஐஹிரா, உறுப்பினர் அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி, வஷிடா பல்கலைக் கழகம், ஜப்பான்
6 டாக்டர். வி. எஸ். ஜா,

உறுப்பினர்

முன்னாள் இயக்குநர், காமன்வெல்த் நாடுகளின் கல்வி பிரிவு, இலண்டன்
7 பி. என். கிர்பால், உறுப்பினர் இந்திய அரசின் செயலர் மற்றும் கல்வி அலோசகர், இந்திய அரசுக் கல்வித் துறை, புது தில்லி
8 பேராசிரியர். எம். வி. மாத்தூர், உறுப்பினர் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகத் துறை பேராசிரியர், இராஜஸ்தான் பல்கலைக் கழகம், ஜெய்பூர்
9 பெஞ்சமின் பியாரி பால்,

உறுப்பினர்

இயக்குநர், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி
10 குமாரி. எஸ். பனந்திகர்,

உறுப்பினர்

துறைத் தலைவர், கல்வி, கர்நாடக பல்கலைக் கழகம், தார்வார்
11 பேராசிரியர் ரோஜர் ரெவெலி, உறுப்பினர் இயக்குநர், மக்கட்தொகை படிப்புகள் மையம், ஆர்வர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், ஐ.அ.நா
12 டாக்டர். கே. ஜி. சையதின்,

உறுப்பினர்

இந்திய அரசின் முன்னால் கல்வி அலோசகர்
13 டாக்டர். பீ. சென்,

உறுப்பினர்

துணை வேந்தர், ஜடவுபூர் பல்கலைக் கழகம், கொல்கத்தா
14 பேராசிரியர். எஸ். ஏ. ஷொமோவ்ஸ்கி, உறுப்பினர் இயக்குநர், வேதியியல் துறை பேராசிரியர், மாஸ்கோ பல்கலைக்கழகம், மாஸ்கோ
15 எம். ஜென் தாம்ஸன்,

தலைவர்

கல்வி ஆய்வாளர், பிரான்ஸ் மற்றும் முன்னாள் துணை இயக்குநர், யுனெஸ்கோ, பாரிஸ்
16 ஜெ.பி. நாயக், உறுப்பினர்-

செயலர்

துறைத் தலைவர், கல்வித் திட்டங்கள், நிர்வாகம் மற்றும் நிதி, கோகுலே அரசியல் மற்றும் பொருளாதாரக் கல்வி நிறுவனம், பூனா
17 ஜெ. எஃப். மெக்டோகெல்,

இணைச் செயலர்

துணை இயக்குநர், பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை, யுனெஸ்கோ, பாரிஸ்

குழுவின் அறிக்கை

தொகு

இக்குழு தனது ஆய்வுகளை தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2, 1964 அன்று தொடங்கியது. குழு சுமார் நூறு நாட்களுக்கும் மேல் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு பயணம் செய்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி தகவல்களை திரட்டினர். மேலும், சமூகத்தின் பலதரப்பட்ட சுமார் 9000 மக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர். சுமார் 2400க்கும் மேற்பட்ட எழுத்துப்பூர்வமான ஆவணங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. இரண்டாண்டு கால கடின உழைப்புக்கு பின் 29 ஜூலை 1966ல் 700 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் அறிக்கை 29 ஆகஸ்டு 1966ல் பாராளுமன்றத்தின் அவையில் வைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை என்றாலும், இதன் பல்வேறு பரிந்துரைகள் சிறப்பானதாக கருதப்பட்டு போற்றப்படுகிறது. இவ்வறிக்கையின் தலைப்பு கல்வியும் நாட்டின் முன்னேற்றமும் ஆகும்.

அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள்

தொகு
  • 10+2+3 கல்விமுறை
  • 14 வயது வரை கட்டாயக் கல்வி
  • ஆசிரியர் கல்வி மற்றும் மதிப்பூதியம்
  • மொழிகள் கற்றலில் தாய்மொழியுடன் கூடிய மும்மொழிக் கொள்கை
  • சமமான கல்வி வாய்ப்பு
  • சமூகத் தொண்டுடன் பணி அனுபவம்
  • பகுதிநேரக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி
  • இடைநிலைக் கல்வியை தொழிற்சார்புடையதாக்குதல்
  • பெண்களுக்கான இடைநிலைக் கல்வி
  • அறிவியல் அடிப்படையிலும், வகுப்பறைச் செயல்முறையிலும் சீர்திருத்தம்[3]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian Education Commission 1964-66". PB Works. 2015. பார்க்கப்பட்ட நாள் 20 June 2015.
  2. "Task Force on Agriculture Education" (PDF). National Council of Educational Research and Training. 1970. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.
  3. "Main Recommendations of "Education Commission" (Kothari Commission) (1964-1966)". Edugyan. பார்க்கப்பட்ட நாள் 18 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தாரிக்_கல்விக்_குழு&oldid=4165763" இலிருந்து மீள்விக்கப்பட்டது