கோபி கிருட்டிணா (நடனக் கலைஞர்)

இந்திய நடனக் கலைஞர்

கோபி கிருட்டிணா (Gopi Krishna) (22 ஆகத்து 1935 – 18 பிப்ரவரி 1994) இவர் ஓர் இந்திய நடனக் கலைஞரும், நடிகரும், நடன இயக்குனருமாவார்.

கோபி கிருட்டிணா
பிறப்பு(1935-08-22)22 ஆகத்து 1935
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
இறப்பு18 பெப்ரவரி 1994(1994-02-18) (அகவை 58)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடனக் கலைஞர், நடிகர், நடன இயக்குனர்
பட்டம்நடராஜ், நிருத்திய சாம்ராட்

வாழ்க்கையும் தொழிலும்

தொகு

கோபி கிருட்டிணா 1935 ஆகத்து 22 அன்று கொல்கத்தாவில் ஒரு கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா பண்டிட் சுக்தேவ் மகாராஜ் கதக்கின் ஆசிரியராகவும், இவரது அத்தை சித்தாரா தேவி ஒரு கதக் நடனக் கலைஞராகவும் இருந்தார். இவருக்கு 11 வயதாக இருந்தபோது, தனது தாத்தாவின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். சம்பு மகாராஜிடமிருந்தும் கற்றுக்கொண்டார். கதக்கைத் தவிர, இவர் மகாலிங்கம் பிள்ளை மற்றும் கோவிந்த் ராஜ் பிள்ளை ஆகியோரிடமிருந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். நாள்பட்ட ஈழை நோயால் அவதிப்பட்ட போதிலும், இவர் தனது நடன திறனை தொடர்ந்து விரிவுபடுத்தினார். [1] 15 வயதில் நடந்த அனைத்து வங்க இசை மாநாட்டிலும் "நடராஜ்" (நடனக் கலைஞர்களின் அரசன்) என்ற பட்டத்தைப் பெற்றார். [2]

1952 ஆம் ஆண்டில், 17 வயதில், இந்தித் திரைப்பட வரலாற்றில் மிக இளைய நடன இயக்குனர்களில் ஒருவரானார். சகி என்றத் திரைப்படத்தில் நடிகை மதுபாலாவுக்கு நடன பயிற்சியாளாராக நியமிக்கப்பட்டார். [1] 1955ஆம் ஆண்டில், இவர் தனது முதல் படமான ஜனக் ஜனக் பாயல் பஜேவில் தோன்றினார். இந்த படத்தில் ஐர் கீர்தர் என்ற திறமையான இளம் நடனக் கலைஞராக நடித்திருந்தார். படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும், பாரம்பரிய நடனத்தில் மக்கள் ஆர்வத்தை புதுப்பிக்க உதவியது. [2] கிரஹஸ்தி (1963), தஸ்தான், மெஹபூபா, உம்ராவ் ஜான், நாச்சே மயூரி (1986) மற்றும் தி பெர்பெக்ட் மர்டர் போன்ற பல படங்களிலும் இவர் நடனமாடியுள்ளார். [3]

பாலிவுட் திரைப்படமான சமானா என்பதில் ரிஷி கபூர் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோருடன் ஒரு நடன ஆசிரியர் வேடத்திலும் நடித்தார். புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான மகாபாரதத்திலும் இவர் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

1960கள் மற்றும் 70களில், இவர் இந்தியாவின் எல்லைப்பகுதி பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சுனில் தத்தின் அஜந்தா கலை கலாச்சார குழுவுடன் சென்று நமது எல்லையில் இராணுவ வீரர்களை மகிழ்வித்தார். பின்னர் நடேசுவர் பவன் நடன அகாடமியையும் நடேசுவர் நிருத்ய கலா மந்திர் நிறுவனத்தையும் நிறுவினார்.

விருதுகளும் சாதனைகளும்

தொகு

1975ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.

இவர், 9 மணி 20 நிமிடங்களில் மிக நீண்ட தொடர்ச்சியான கதக் நடனம் ஆடி உலக சாதனையும் படைத்துள்ளார். [4] 1985

பாணி

தொகு

இவர் கதக்கின் பெனாரஸ் கரானா பாணியின் நிபுணராக இருந்தார். [2] கதகளி மற்றும் பரதநாட்டியத்தின் பல கூறுகளை இவர் தனது நடனத்தில் இணைத்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் கதக் நடனக் கலைஞர் சாவித்திரி என்பவரை 1964 இல் மணந்தார். 1980 இல் பிறந்த இவரது மகள் சம்பா சோந்தாலியா ஒரு நடன இயக்குனராகவும் நடனக் கலைஞராகவும் இருக்கிறார். ஜலக் திக்லா ஜாவின் 5 மற்றும் 7 வது பருவங்களில் வெற்றியாளராக இடம்பிடித்தார். அதில் சம்பா முறையே நடிகர் குர்மீத் சவுத்ரி மற்றும் ஆஷிஷ் சர்மாவுடன் இணையாக நடித்தார். [5]

இறப்பு

தொகு

கோபி கிருஷ்ணா 1994 பிப்ரவரி 18 அன்று மாரடைப்பால் பம்பாயில் இறந்தார். [6]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Film industry has lost its Kohinoor". 
  2. 2.0 2.1 2.2 Banerji, Projesh (1986). Dance in thumri. Abhinav Publications. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-212-8.
  3. Long, Robert Emmet (1991). The films of Merchant Ivory. H.N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-3618-6.
  4. லிம்கா சாதனைகள் புத்தகம். Bisleri Beverages Ltd. 2001.
  5. Aastha Atray Banan (4 June 2011). "Goodbye Sheila, Munni and the deadly jhatkas". Tehelka Magazine 8 (22). http://tehelka.com/story_main49.asp?filename=hub040611Goodbye.asp. பார்த்த நாள்: 25 July 2011. 
  6. "Obituaries". Sruti (112). February 1994. 

வெளி இணைப்புகள்

தொகு