கோமல் சுவாமிநாதன்
கோமல் சுவாமிநாதன் (27 சனவரி 1935 - 1995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் இதழாளர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். இவரது எழுத்தில் பாலச்சந்தரால் இயக்கபெற்ற தண்ணீர் தண்ணீர் முக்கியமான திரைப்படம் ஆகும்.
கோமல் சுவாமிநாதன் | |
---|---|
பிறப்பு | கோமல் சுவாமிநாதன் 27 சனவரி 1935 காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாடு |
இறப்பு | அக்டோபர் 1995 (அகவை 60) சென்னை, தமிழ்நாடு |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1959–1995 |
உறவினர்கள் | ஆனந்த் சங்கர் (பேரன்)[1] |
வாழ்க்கை
தொகுகோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 1957 ல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடகக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 அவர்களுக்காகப் 'புதிய பாதை' என்ற முதல் நாடகத்தை எழுதினார். 1957 முதல் இறுதி வரை சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் வாழ்ந்தார்.
திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் வசன உதவியாளராகப் பணியாற்றினார். திரையில் அவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. அவரது சிலநாடகங்கள் படமானாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை.
1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடககுழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆரம்ப காலத்தில் சில நகைச்சுவை நாடகங்களை எழுதிய இவர், பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப் பிரச்சினைகளையுமே எழுதினார். தீவிரமான இடதுசாரிப் பிடிப்புடையவராக இருந்தார்.
1980ல் இவர் எழுதிய [தண்ணீர் தண்ணீர்] என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.
இதழியல்
தொகுவாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்புப் புற்றுநோயால் அவதிப்பட்டார். தன் நாடகக் குழுவைக் கலைத்து விட்டு இதழியலில் ஈடுபட்டார். முன்னரே அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. சி. சு. செல்லப்பாவின் நண்பராக எழுத்து இதழில் பங்கு பெற்றிருந்தார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப் பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களைப் பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது
கோமல் படைப்புகள்
தொகு- புதியபாதை; 1966 சனவரி; பக்.172; விற்பனை உரிமை: எழுத்து பிரசுரம், சென்னை
- சன்னதித் தெரு, 1971,
- நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),
- மந்திரி குமாரி, 1972,
- பட்டணம் பறிபோகிறது, 1972,
- வாழ்வின் வாசல், 1973,
- பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),
- ஜீஸஸ் வருவார், 1974,
- யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
- ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),
- அஞ்சு புலி ஒரு பெண், 1976,
- கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் "இலக்கணம் மீறிய கவிதைகள்" என வழங்கப் பெற்றது),
- ஆட்சி மாற்றம், 1977,
- சுல்தான் ஏகாதசி, 1978,
- சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
- செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),
- தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),
- ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
- அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
- நள்ளிரவில் பெற்றோம், 1984,
- இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
- கறுப்பு வியாழக்கிழமை, 1988,
- நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
- கிராம ராஜ்யம், 1989,
- மனிதன் என்னும் தீவு, 1989,
- அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,
பணியாற்றிய மற்ற படைப்புகள்,
- புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
- மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
- தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
- டாக்டருக்கு மருந்து,
- கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )
- டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் "கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),
- அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
- அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
- கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)
- என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, S. R. Ashok (31 May 2014). "Audio Beat: Arima Nambi - Sivamani belts it out". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-arima-nambi-sivamani-belts-it-out/article6069756.ece. பார்த்த நாள்: 19 July 2020.
புற இணைப்புகள்
தொகு- http://tfmpage.com/forum/26339.5890.23.51.04.html A Tribute to Komal Swaminathan by 'Cinema Virumbi
- Shankar, S.; Swaminathan, Komal (2001). "Water!: A Tamil Play by Komal Swaminathan". Asian Theatre Journal 18 (2): 123–173. doi:10.1353/atj.2001.0023.