கோலக் நாத் வழக்கு

கோலக்நாத் எதிர் பஞ்சாப் அரசு வழக்கு அல்லது கோலக்நாத் வழக்கு (Golaknath v. State Of Punjab (1967 AIR 1643, 1967 SCR (2) 762), உச்ச நீதிமன்றத்தில் 1967-இல் நடைபெற்ற கோலக்நாத் வழக்கில், அரசியலமைப்பு சட்டம் தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமையில் தலையிட இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத்தீர்ப்பு வழங்கியது.[1]

வரலாறு

தொகு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தில் வாழும் கோலக்நாத் மற்றும் ஹென்றி வில்லியம் ஆகிய சகோதர்களின் 500 ஏக்கர் பண்ணை நிலத்தில், 30 ஏக்கர் நிலம் போக எஞ்சிய 470 ஏக்கர் உபரி நிலத்தை, பஞ்சாப் நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், 1953-ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில அரசு கையகப்படுத்தியது. பஞ்சாப் அரசின் இச்செயலுக்கு எதிராக கோலக்நாத் குடும்பத்தினர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இறுதியாக இவ்வழக்கு 1965-இல் உச்ச நீதி மன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு வந்தது.

இவ்வழக்கில், கோலக்நாத் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 32-ஐ மேற்கோள் காட்டி, அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும் அதனையும் மீறி கொண்டுவந்த சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால் அதுவும் செல்லுபடியாகாது என்றும், பஞ்சாப் அரசு நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் தனது விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு அதிகாரம் இல்லை என்றும், மீண்டும் தனது 500 ஏக்கர் பஞ்சாப் அரசு தனக்கு திருப்பி வழங்க வேண்டியும், பஞ்சாப் அரசின் இச்சட்டத்தை நீக்கவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கோலக்நாத் தனது மனுவில் அரசியல் சட்டப் பிரிவுகள் 19(1)(f) மற்றும் 19(1)(g)) சட்டப்பிரிவு 14-ஐ மேற்கோள் காட்டினார்.[2]

இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு வழங்கிய சொத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை, சட்டம் மூலம் பறிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என 1967-இல் இந்திய உச்ச் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு

தொகு

1967-இல் கோலக்நாத் வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத்தீர்ப்பு வழங்கியது.[3][4]

தீர்ப்பிற்குப் பின்

தொகு

இத்தீர்ப்பினை முடக்க இந்திய அரசு 5 நவம்பர் 1971 அன்று நாடாளுமன்றம், 24-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம்[5], அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்த திருத்தங்கள் வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. மேலும் 1972-ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 31-இல் கொண்டு வரப்பட்ட 25-ஆவது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துகளையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும் போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்தகாலகட்டத்தில் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. L. C. Golaknath V. State Of Punjab
  2. Austin, Granville (1999). Working a Democratic Constitution - A History of the Indian Experience. New Delhi: Oxford University Press. pp. 196–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019565610-5.
  3. G. G. Mirchandani (1 January 1977). Subverting the Constitution. Abhinav Publications. p. 182. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013.
  4. GOLAKNATH CASE JUDGMENT
  5. Twenty-fourth Amendment of the Constitution of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலக்_நாத்_வழக்கு&oldid=4037296" இலிருந்து மீள்விக்கப்பட்டது