பெருபாரி வழக்கு

பெருபாரி வழக்கு (Berubari Union Case), 1947-இல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை இந்தியாவிற்கும், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை பாகிஸ்தானுக்கும் பிரித்து வழங்கி அளவிடுவதற்கு சிரில் ஜான் இராட்கிளிப் எனும் பிரித்தானியர் நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவிட இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து 2 நபர்களும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து 2 நபர்களும் நியமிக்கப்பட்டனர்.

இராட்கிளிப் எல்லைக்கோட்டின்படி மேற்கு வங்காள மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த பெருபாரி எனும் கிராமத்தை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

ஆனால் பெருபாரி கிராமத்தை இந்தியாவிற்கு வழங்கியதை, எல்லைப் பிரிப்பு ஆவணங்களில் குறிப்பிட இராட்கிளிப் தலைமையிலான குழுவினர் மறந்து விட்டனர். பின்னர் இச்செய்தி அறிந்த பாகிஸ்தான், பெருபாரி கிராமத்தை பாகிஸ்தான் வரைபடத்தில் சேர்த்துக் கொண்டது. இதனால் பெருபாரி கிராமத்தின் உரிமை குறித்து இந்திய – பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் பிணக்குகள் ஏற்பட்டது.

1958-இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும் – பாகிஸ்தான் பிரதமர் பெரோஷா நூன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பெருபாரி கிராமத்தை இந்தியா – பாகிஸ்தான் அரசுகள் பிரித்துக் கொண்டதால் இப்பிணக்கு தீர்க்கப்பட்டது.

மேற்கு வங்காள மாநில அரசின் இசைவின்றி, மாநிலத்தில் உள்ள பெருபாரி கிராமத்தின் பகுதிகளை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியது. இச்செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்திய அரசுக்கு எதிராக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 3 (சி)-கீழ் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஒரு மாநிலத்தின் எல்லையைக் குறைப்பதற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும்; ஆனால் இந்திய நாட்டின் பரப்பை குறைக்க அதிகாரம் இல்லை என 14 மார்ச் 1960-இல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[1]

எனவே அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 3 (சி)-இல் தேவையான திருத்தம் செய்து பெருபாரி கிராமத்தின் பகுதிகளை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியதை நியாப்படுத்த முடிவு செய்தது. 1960-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட 9–வது இந்திய அரசியலமைப்புச் திருத்தத் சட்டம், 1960 மூலம், பெருபாரி கிராமத்தின் பகுதியை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியது குறித்து எழுந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்திய அரசு இனி வருங்காலங்களில் பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் எல்லை நிலப்பிரச்சனை முடிவு கட்ட வேண்டி போடப்படும் ஒப்பந்தங்கள், அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் மேற்கொள்ளலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் என்றும் கருத்து கூறியது.

2015-ஆம் ஆண்டில் 100-வது இந்திய அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம், 2015-கீழ், வங்காள தேசத்தின் எல்லையோரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை இந்தியாவிற்கும்; அதே போல் இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லையில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை வங்காள தேசத்திற்கும் பரஸ்பரம் மாற்றி கொள்ள, இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதனையும் காணக் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Berubari Union Case, 1960". Archived from the original on 2020-03-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருபாரி_வழக்கு&oldid=3565106" இலிருந்து மீள்விக்கப்பட்டது