சங்ககாலக் கடல் வாணிகம்

சங்ககாலத் தமிழர் நாவாய், வங்கம் என்னும் கப்பல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து தமக்கு வேண்டிய போர்க்குதிரை முதலான பொருள்களை வாங்கிவந்து இறக்குமதி செயதுகொண்டனர்.

நாவாய் என்பது கடல் வாணிகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மரக்கலம். வாயில் இருக்கும் நாக்குப் போன்ற அடியமைப்பினைக் கொண்டு விளங்குவதால் இதனை நாவாய் என்றனர். [1] சங்ககாலத் தமிழர் பயன்படுத்திய நாவாய், வங்கம் ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. [2] [3][4][5]

அரசர்கள் தொகு

  • வானவன் என்னும் சேரமன்னன் பொன்னை ஈட்டிவந்த வாணிக நாவாய் ஓட்டிய காலத்தில் பிற நாவாய்க் கலங்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. [6]
  • கரிகாலனின் முன்னோன் காற்றைக் கட்டுப்படுத்திக்கொண்டு கடலில் நாவாய் ஓட்டினான். [7]
  • குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிக் காலத்தில் கடலில் கலன்கள் (கப்பல்கள்) கடலில் உலவின. அவற்றை மகளிர் எண்ணி விளையாடிப் பொழுது போக்கிக்கொண்டிருந்தனர். இந்தக் கப்பல்கள் வாணிகக் கப்பல்களாகவோ, போர்க் கப்பல்களாகவோ இருக்கலாம். [8]
  • நலங்கிள்ளி வைத்திருந்த கடற்படை இங்கு எண்ணத்தக்கது. [9]

துறைமுகங்கள் தொகு

  • முசிறித் துறைமுகத்தில் யவனர் பொன்னைத் தந்து மிளகு முதலான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
  • நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்திற்கு வந்த நாவாய்கள் வெள்ளைக் குதிரைகளையும், வடநாட்டுச் செல்வங்களையும் இறக்குமதி செய்தன. [10]
  • நெல்லின் ஊர் துறைமுகத்தில் நாவாயின் இதை என்னும் பாய்மரங்களை அவிழ்த்து நிறுத்திக்கோண்டு பொன்னிரும்பாலான விழுமிய பண்டங்களை முரசு முழக்கத்துடன் இறக்குமதி செய்தனர். [11]
  • பாண்டிநாட்டுத் துறைமுகங்களில் முத்துக்களையும், சங்குகளையும் திமிலில் கொண்டுவந்து இறக்கினர். நாவாய் பெருநீர் ஓச்சுனர் தொலைதூர நாடுகளுக்குச் சென்று தம் அரிய செல்வங்களைக் கொடுத்து வாங்கிவந்த புரவி என்னும் போர்க்குதிரைகளை இறக்குமதி செய்தனர். [12]
  • புகார் நகரில் நாவாய் துவன்று இருக்கை (கப்பல் துறை) இருந்த்து. அங்கு நாவாயில் வந்து இறங்கிய புரவி, மிளகு மூட்டை, வடமலையிலிருந்து வந்த மணி, பொன், குடமலையிலிருந்து வந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரிப்படுகைகளின் விளைச்சல், ஈழநாட்டு உணவுப்பொருள், காழக நாட்டு (பர்மா) ஆக்கவளங்கள் முதலானவை இறக்கப்பட்டுப் புலிமுத்திரை இடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. [13]

பொதுக்குறிப்பு தொகு

  • தமிழர் கடல் வாணிகம் செல்லும்போது மகளிரை அழைத்துச்செல்வதில்லை. [14]
  • தமிழர் வேறு பல நாடுகளுக்கு நாவாயில் சென்று பன்னாட்டு வளங்களைக் கொண்டுவந்தனர். இவர்களின் நாவாய் பல வகையான வேலைப்பாட்டுடன் விளங்கியது. [15]
  • நாவாயில் நாட்டுக்கொடி பறக்கும். [16]
  • சிறிய நாவாய் யானை அளவு இருக்கும். [17]
  • ஆடவர் பொதுமகளிரோடு நாவாயில் விளையாடி நீராடுவர். [18]
  • பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க உதவுவது அறவி (அறச்செயல்) என்னும் நாவாய் [19]
  • ஆதிரையின் கணவன் நாவாய் என்னும் வங்கத்தில் சென்ற வணிகருடன் சென்றபோது புயல் தாக்கி நாவாய் முறிந்தபோது இறந்தான். [20]

அடிக்குறிப்பு தொகு

  1. கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
    நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
    களிகள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப பழமொழி – 79
  2. கடலோடும் நாவாய் - திருக்குறள் 496
  3. மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம்
    கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப! நாலடியார் – 224
  4. கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர்ப்
    பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை - ஐந்திணை எழுபது 61
  5. நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள் - கைந்நிலை 49
  6. சினங்கெழு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி, பிறகலம் செல்லாது - புறம் 126
  7. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக - புறம் 66
  8. கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
    கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; (15) புறநானூறு 386 கோவூர் கிழார் பாடியது.

  9.  கடற்படை அடல் கொண்டி,
    மண்டுற்ற மலிர் நோன் தாள்,
    தண் சோழ நாட்டுப் பொருநன்,
    அலங்கு உளை அணி இவுளி
    நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
    அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' - புறநானூறு 382

  10. நீர்ப்பெயற்று எல்லைப் போகிப் பால்கேழ் வால் உளைப் புவியொடு வடவளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளியிரும் படப்பை – பெரும்பாணாற்றுப்படை 319-321
  11. முந்நீர் ... பௌவத்து ... இதை எடுத்து, இன்னிசைய முரசம் கறங்க, பொன் மலிந்த விழுப்பண்டம் ... நன்கு இழிதரும் ஆடு இயல் பெரு நாவாய், மழை முற்றிய மலை புரைய, துறை முற்றிய துளங்கு இருக்கை – மதுரைக்காஞ்சி - அடி 75 முதல்
  12. பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர்
    கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்
    விழுமிய நாவாய் பெரு நீர் ஓச்சுநர்
    நன தலை தேஎத்து நல் கலம் உய்ம்மார்
    புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு மதுரைக்காஞ்சி அடி319-323

  13. பட்டினப்பாலை - அடி 172 முதல்
  14. தொல்காப்பியம் களவியல் 37
  15. எந்தை, வேறுபல் நாட்டுக் கால் தர வந்த பன் வினை நாவாய் தோன்றும் பெருந்துறை – நற்றிணை 295
  16. நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ, காணாமோ - அகம் 110
  17. களிறு, முந்நீர் வழங்கும் நாவாய் போல வந்த்து – புறம் 13
  18. சிலப்பதிகாரம் 14 -74
  19. மணிமேகலை 11-25
  20. மணிமேகலை 16-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலக்_கடல்_வாணிகம்&oldid=2911061" இலிருந்து மீள்விக்கப்பட்டது