சத்தியவாணி முத்து

(சத்யவாணி முத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சத்தியவாணி முத்து (பி.: பெப்ரவரி 15, 1923 - இ. நவம்பர் 11, 1999)[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான சமூக தலைவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம்

தொகு

சத்தியவாணி முத்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். 1953ல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1959-1968 காலகட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளாராகப் பதவி வகித்தார்.

தேர்தல் களத்தில்

தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் தொகுதியிலிருந்து 1957ல் சுயேட்சையாகவும் 1967 மற்றும் 1971ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார்.[2][3][4] 1962 ல் பெரம்பூர் தொகுதியிலும் 1977 ல் உளுந்தூர்பேட்டைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோற்றுப்போனார்.[5][6]

தேர்தல் தொகுதி வென்றவர் வோட்டுகள் கட்சி தோற்றவர் வோட்டுகள் கட்சி முடிவு
1957 பெரம்பூர் 1) பக்கிரிசாமி பிள்ளை
3) சத்தியவாணி முத்து
34,579
27,638
சுயேட்சை
சுயேட்சை
2) டி. எஸ். கோவிந்தசாமி
4) டி. ராஜகோபால்
31,806
23,682
காங்கிரசு
காங்கிரசு
வெற்றி
1962 பெரம்பூர் டி. சுலோச்சனா 40,451 காங்கிரசு சத்தியவாணி முத்து 32,309 திமுக தோல்வி
1967 பெரம்பூர் சத்தியவாணி முத்து 40,364 திமுக டி. சுலோச்சனா 33,677 காங்கிரசு வெற்றி
1971 பெரம்பூர் சத்தியவாணி முத்து 49,070 திமுக டி. சுலோச்சனா 37,047 காங்கிரசு (ஓ) வெற்றி
1977 உளுந்தூர்ப்பேட்டை வி. துலுக்காணம் 26,788 திமுக சத்தியவாணி முத்து 19,211 அதிமுக தோல்வி
1984 பெரம்பூர் பரிதி இளம்வழுதி 53,325 திமுக சத்தியவாணி முத்து 46,121 அதிமுக தோல்வி

அமைச்சர்

தொகு

இவர் 1967 முதல் 1969 வரை தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை அமைச்சரவையில் அரிஜன நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[7] தொடர்ந்து மு. கருணாநிதியின் அமைச்சரவையிலும் 1974 வரை அரிஜனநலத்துறை அமைச்சராக இருந்தார்.[8]

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக்கழகம்

தொகு

சத்தியவாணி முத்து, அண்ணாத்துரையின் மரணத்துக்குப்பின் பட்டியல் சமூக மக்கள் நலனில் யாரும் அக்கறை காட்டவில்லை, புதிய திமுக தலைவர் கருணாநிதி பாரபட்சம் காட்டுகிறார்[8] என்ற குற்றஞ்சாட்டுடன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக விலிருந்து 1974ல் விலகினார். அவர் கூறியது,


இவர் 1974ல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தொகு

பின்னர் 1977ல் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தனது கட்சியை இணைத்து விட்டார்.[11]

மத்திய அமைச்சராக

தொகு

சத்தியவாணி முத்து, ஏப்ரல் 3, 1978 முதல் ஏப்ரல் 2,1984 வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். 1979ல் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் அமைச்சரவையில் பதவி வகித்தார். இவரும் பாலா பழையனூரும் தான் முதன்முதல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற காங்கிரசல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆவர்.[12]

இதழும் நூலும்

தொகு

“அன்னை” என்ற இதழின் ஆசிரியராக இருந்து 1961ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[13] "வாள்தருவாள், வேல்தருவாள், வேகத்திற்குயிர் தருவாள், தாள்பணியாள், தலைகுனியாள், தமிழ்காப்பாள் நம்மன்னை" என்னும் முழக்கத்தோடு அவ்விதழ் சென்னையிலிருந்து திங்கள் இதழாக 1958 முதல் வெளிவந்தது.[14]

"எரிக்கப்ட்டவள்" என்னும் வரலாற்று நூலை எழுதி 1955 மே மாதம் சென்னையிலிருந்த மதி மன்றம் என்னும் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்.[15]

குடும்பம்

தொகு

இவர் தந்தைபெயர் கே. நாகைநாதர். இவர் 8 பிப்ரவரி 1956ஆம் நாள் மறைந்தார்.[16]

நினைவுச் சின்னங்கள்

தொகு

எண்ணூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு “சத்தியவாணி முத்து நகர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.1970-களில் சென்னை,அண்ணாநகர் கிழக்குப்பகுதியில், இன்றைய காந்திநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு அருகே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதி (புதிய ஆவடி சாலை மற்றும் அண்ணாநகர் கிழக்கும் சந்திக்கும் இடம்) மணிவர்மா காலனி என்றும், அதையொட்டிய அண்ணாநகர் கிழக்குச் சாலையில் சத்தியவாணிமுத்து காலனி ( இது தி.மு.க. சார்பானது) என்றும் இரண்டு பகுதிகள் இருந்தன. அந்தக் காலனிகளை அப்புறப்படுத்திய இடத்தில்தான் இப்போது அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Thirunavukkarasu, Ka (1999). Dravida Iyakka Thoongal. Nakkeeran pathippakam. {{cite book}}: Unknown parameter |languag= ignored (help)
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 20 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 December 2009.
  5. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 December 2009.
  6. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. India, a reference annual. Publications Division, Ministry of Information and Broadcasting. 1968. p. 447. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  8. 8.0 8.1 8.2 Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545. 
  9. "The rise and fall of Sathyavani Muthu". Femina. 7 June 1974. 
  10. . The Hindu. 5 May, 6 May, 15 May and 3 June 1974. 
  11. "Nedunchezhiyan dies of heart failure". The Hindu. 13 january 2000 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101205052238/http://www.hinduonnet.com/thehindu/2000/01/13/stories/04132231.htm. பார்த்த நாள்: 1 December 2009. 
  12. "The Swing Parties". Indian Express. 15 May 2009. http://www.indianexpress.com/news/the-swing-parties/459620/0. பார்த்த நாள்: 1 December 2009. 
  13. திராவிடநாடு(இதழ்) 19-2-1961, பக்.4
  14. திராவிடநாடு (இதழ்) நாள்:17-8-1958, பக்கம் 16
  15. திராவிடநாடு (இதழ்) நாள்:29-5-1955, பக்கம் 14
  16. திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1956, பக்கம் 10
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியவாணி_முத்து&oldid=3776820" இலிருந்து மீள்விக்கப்பட்டது