சப்த தாண்டவங்கள்

சப்த தாண்டவங்கள் என்பவை சைவ சமயக் கடவுளான சிவபெருமான் ஆடிய ஏழு தாண்டவங்களின் தொகுப்பாகும். இந்த தாண்டவங்களின் மூலமாக சிவபெருமான் ஏழு சுவரங்களைப் படைத்ததாக சைவர்கள் நம்புகிறார்கள். சுவரங்கள் ஏழு என்பதால் இவை ஏழு என்ற எண்ணிக்கையில் அடிப்படையில் இருக்கின்றன.

ஏழு தாண்டவங்கள்

தொகு

சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களிலிருந்து தோன்றின. எனவே காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், சம்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகிய ஏழு தாண்டவங்களும் எண்ணிக்கை அடிப்படையில் சப்த (சிவ)தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தாண்டவங்களுலும், அவற்றினை தோற்றுவித்த ஸ்வரங்களின் பட்டியலும் கீழே,.

  1. காளிகா தாண்டவம் - ச
  2. சந்தியா தாண்டவம் - ரி
  3. கௌரி தாண்டவம் - க
  4. சம்கார தாண்டவம் - ம
  5. திரிபுர தாண்டவம் -ப
  6. ஊர்த்துவ தாண்டவம்- த
  7. ஆனந்த தாண்டவம் - நி

சிறீ தத்துவநிதி என்ற நூலில் ஏழுவகைத் தாண்டவங்களாக கீழ்வருவனவற்றைக் கூறுகிறது.[1]

  1. ஆனந்த தாண்டவம்[1]
  2. சந்தியா தாண்டவம்[1]
  3. உமா தாண்டவம்[1]
  4. கௌரி தாண்டவம்[1]
  5. காளிகா தாண்டவம்[1]
  6. திரிபுர தாண்டவம்[1]
  7. சங்கார தாண்டவம்[1]

ஆனந்த தாண்டவம்

தொகு
 

சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற இந்நடனம் ஆனந்த தாண்டவம் என்று வழங்கப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாக ஆனந்த தாண்டவம் அறியப்படுகிறது. ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. இந்நடன திருக்கோலத்தினை திருநாவுக்கரசர் "குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்" என்று பாடுகிறார்.

இந்நடனமாடியமையால் சிவனை கூத்தன் என்றும், தில்லையில் நடமாடியமையால் தில்லைக் கூத்தன் என்றும் அழைக்கின்றனர். கூத்திறைவர் என்றும், நடராசர் என்றும் ஆடல்வல்லான் என்றும் போற்றுகின்ற சிவபெருமானின் இத்தாண்டவம், மற்ற தாண்டவங்களில் முதன்மையான தாண்டவமாக கருதப்படுகிறது. இந்நடனம் களிநடனம் எனவும் வழங்கப்படுகிறது.

சந்தியா தாண்டவம்

தொகு

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று கொண்டாடுகின்றோம்.

உமா தாண்டவம்

தொகு

உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.

ஊர்த்துவ தாண்டவம்

தொகு

சிவனும் சக்தியும் சமமென உணராத காரணத்தில் சிவனின் சாபப்படி சக்தி,உக்கிரமான காளியாக மாறினாள். தில்லையில் சிவனை அடைய தவம் செய்தாள். ஆனால் சிவன் காட்சியளிக்காததால் மேலும் உக்கிரமாக மாறினாள். அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள். ஆடல்கலையின் வல்லவனான சிவனை தன்னுடன் போட்டிக்கு அழைத்தாள்.

சிவனுக்கும், காளிக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. கடுமையான போட்டியில் இருவரும் சமநிலையில் இருந்தார்கள். அப்போது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன். முனிவர்களும், தேவர்களும் இருந்த சபையில் காலை உயர்த்த விரும்பாத காளி, போட்டியில் பின்தங்கினாள். (இந்த வரலாறு கூறப்படும் தில்லை நடராஜர் கோயிலிலேயே காளி பல வடிவங்களில் காலைத் தூக்கி நடனமாடும் சிற்பங்கள் உண்டு.) சிவபெருமான் போட்டியில் வென்றார். காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கஜ சம்ஹாரத் தாண்டவம்

தொகு

தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.

கௌரி தாண்டவம்

தொகு

தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கௌரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கௌரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

காளிகா தாண்டவம்

தொகு

இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.

இலக்கியத்தில்

தொகு

ஏழு சுரங்களை தோற்றுவித்தமைக்காக சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 சிவ தாண்டவம் - இரா. இராமகிருட்டிணன் - பக்கம் 14-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_தாண்டவங்கள்&oldid=3986453" இலிருந்து மீள்விக்கப்பட்டது