சம்ஸ் அப்பாசி

அபா சம்ஸ் அப்பாசி என்று பிரபலமாக அழைக்கப்படும் சம்ஸ் அப்பாசி (Shams Abbasi) (10 சனவரி 1924 -16 மார்ச் 2011) பாக்கித்தானைச் கல்வியாளரும், கல்வித் தலைவரும், அறிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் ஆங்கிலம் சிந்தி மொழி போன்றவற்றில் 22 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கல்வி கற்பதற்கான காரணத்திற்காக இவர் உறுதியுடன் இருந்தார். இவர் கல்வி இயக்குநராகவும், பாடத்திட்ட பணியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் சிந்து பகுதியின் தலைவராகவும், 'சிந்தி ஆரத் தன்சீம்' (சிந்தி பெண்கள் சங்கம்) என்பதன் தலைவராகவும் இருந்தார். இவர் பல இலக்கிய, கல்வி மற்றும் சமூக சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

அபா சம்ஸ் அப்பாசி
இயற்பெயர்
آپا شمس عباسي
பிறப்பு(1924-01-10)10 சனவரி 1924
ஐதராபாத், பாக்கித்தான்
இறப்பு(2011-03-16)16 மார்ச்சு 2011
ஐதராபாத், சிந்து மாகாணம்
தொழில்கல்வியாளர், கல்வித் தலைவர், ஆசிரியர்
குடியுரிமைபாக்கித்தானியர்
கல்விமுனைவர்
காலம்1924 - 2011

குழந்தைப் பருவமும் கல்வியும்

தொகு

சம்ஸ் அப்பாசி 1924 சனவரி 10 அன்று பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள ஐதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை காசி அப்துல் கயூம், ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும், அவரது காலத்தின் சமூகத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது இவருடைய தந்தை இறந்துவிட்டார். இவர் முறையே 1939 மற்றும் 1941ஆம் ஆண்டுகளில் மெட்ரிகுலேசன் மற்றும் இடைநிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். மேலும், 1943இல் இளங்கலை பட்டம் பெற்றார். [1]

தொழில்

தொகு

ஐதராபாத்தில் உள்ள மதர்சாட்-உல்-பனாத் பள்ளியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1948இல் மீரன் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகவும், 1955இல் ஐதராபாத்தின் சுபைதா கல்லூரியின் முதல் முதல்வராகவும் சேர்ந்தார். இவர் 1971இல் கல்லூரிக்கல்வி துணை இயக்குநராகவும், 1974இல் பாடத்திட்ட பணியகத்தின் நிறுவன இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1984இல் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது வேலை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் இருந்தபோதிலும், இவர் தனது மாமாவும், மாமனாருமான ஹக்கீம் பதே முஹம்மது செஹவானியின் இலக்கிய மற்றும் அரசியல் பங்களிப்புகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சமூக, கல்வி மற்றும் இலக்கிய நடவடிக்கைகள்

தொகு

கல்வி இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சிந்துவின் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று பெற்றோரை சமாதானப்படுத்தி, சிறுமிகளுக்கு கல்வி வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவித்தார். சிறுமிகளையும் அவர்களது பெற்றோர்களையும் கல்வியை நோக்கி ஊக்குவிப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்கும் முயற்சியை இவர் முதன்முதலில் எடுத்தார். நிலப்பிரபுத்துவ அமைப்பால் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரே வழி இதுதான் என்ற நம்பிக்கையுடன் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். இவர் தனது தாயால் ஈர்க்கப்பட்டார், இவர் தனது மகள்கள் அனைவருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி கல்வியை வழங்கினார். [2]

இவரது ஒரே மகன் அக்விலின் மரணத்திற்குப் பிறகு, அவரது நினைவாக ஐதராபாத்தில் ஒரு பள்ளியை நிறுவி அவரது பெயரிட்டார். அபா ஷம்ஸ் அப்பாசி நூலகமும் பெரிய கலையரங்கமும் பள்ளியின் இரண்டு ஈர்ப்புகளாகும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் அடங்குவர். [3]

இவரது கல்வி பங்களிப்புகளுடன், இவர் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றார். இவர் அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் தலைவராகவும், சிந்துவின் தொழில்முறை மற்றும் வணிகத் தலைவராகவும், சிந்துவின் பிரம்மஞான சபையின் தலைவராகவும், மூத்த குடிமக்கள் கழகத்தின் துணைத் தலைவராகவும், சிந்தி மகளிர் சங்கத்தின் தலைவராகவும், முஹ்சின் நினைவு கல்வி சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் பேங்காக், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிலிப்பீன்சு, ஈரான், துருக்கி, இந்தியா, சீனா, பெல்ஜியம், ஜெர்மனி, அமெரிக்கா, யப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

இவரது முன்னாள் மாணவர்கள் பலர் இப்போது பல்வேறு அமைப்புகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் - சிந்துவின் முன்னாள் கல்வி அமைச்சர் முனைவர் ஹமீதா குஹ்ரோ, முன்னாள் மாகாண செயலாளர் மஹ்தாப் அக்பர் ராஷ்டி, ஐதராபாத் பிராந்தியத்தின் கல்லூரிக் கல்வி இயக்குநரான மரியம் சுல்தானா நூஹானி , கைர்பூர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஷா அப்துல் லத்தீப், முனைவர் பர்வீன் ஷா போனொறோர் இவரது மாணவர்களில் சிலர்.

இவரது பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாக, இவர் 200 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இறப்பு

தொகு

சம்ஸ் அப்பாசி மார்ச் 2011 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "شمس عباسي آپا : (Sindhianaسنڌيانا)". www.encyclopediasindhiana.org (in சிந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  2. "Dr Shams Abbasi: an educationist par excellence no more with us". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-15. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  3. "ڊاڪٽر شمس عباسي جي شخصيت". SindhSalamat. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்ஸ்_அப்பாசி&oldid=3552969" இலிருந்து மீள்விக்கப்பட்டது