சாருஸ்ரீ (Charusree) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக 2022 ஆம் ஆண்டு பணியேற்றார்.[1][2][3][4] [5]2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வில் சாருஸ்ரீ தனது 24 ஆவது வயதில் அகில இந்திய அளவில் 6ஆவது இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[6] தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த இவர் முன்னதாக ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராகவும், சென்னை வணிகவரித்துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் உதவி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.[7]

திருவாரூரில் 2023 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கோவை பீளமேடு பகுதியில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தியாகராசன், குமுதா தம்பதியருக்கு சாருஸ்ரீ மகளாகப் பிறந்தார். தந்தை தியாகராசன் மாநில வேளாண்மைப் பொறியியல் துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவராவார். தனது மகளை இந்திய ஆட்சிப்பணி தேர்வை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார். தாயார் ஓர் இல்லத்தரசி. தேர்வுக்கான தயாரிப்பின் போது சாருஸ்ரீக்கு சிறந்த ஆதரவாக இருந்தார். சிறுவயதிலிருந்தே நாட்டின் கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையும், ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக ஆக வேண்டும் என்ற கனவும் இவருக்கு இருந்தன. கடின உழைப்பும் நேர மேலாண்மையும் இவரது பலமாகும்.

கோவையில் பள்ளிப் படிப்பை முடித்த சாருஸ்ரீ, பத்தாம் வகுப்பில் 94% மதிப்பெண்கள் பெற்றார். தனது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தார். 12 ஆம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். சென்னையிலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பாடத்தில் 2012 ஆம் ஆண்டு இளநிலை பட்டம் பெற்றார்.

கோல்காம் நிறுவனத்தில் வன்பொருள் வடிவமைப்பு பொறியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பணியாற்றிக்கொண்டே இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளுக்காகவும் படித்தார்.[8] இரண்டு முறை ஆட்சிப்பணி தேர்வை எழுதிய இவர் முதல்முறையில் பெற்ற தர அடிப்படையில், 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பணியில் சேர்ந்து உத்தராகண்ட மாநிலம் டேராடூனில் பயிற்சிக்குச் சென்றார். பின்னர் நடந்து முடிந்த தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்திருந்த சாருஸ்ரீ, இந்திய ஆட்சிப்பணி தேர்வில் வெற்றி பெற்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட 1236 நபர்களில் அகில இந்திய அளவில் 6 ஆம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டித் தேர்வில் நல்ல தரவரிசையைப் பெறுவதற்கு ஆளுமைத் தேர்வில் பெறும் மதிப்பெண் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அவ்வாறு சாருஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள் ஓர் ஆட்சிப்பணியாளராக இவர் சேருவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு அரசு". https://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: 1 April 2023. 
  2. Codingest (2021-06-19). "தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது ஆணையாளராக சாருஸ்ரீ பதவி ஏற்றுக்கொண்டார்". Malaimurasu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  3. "தமிழ்நாடு முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் மாற்றப்பட்டு மோகன் நியமனம்". www.dinakaran.com. Archived from the original on 2023-04-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  4. "தமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  5. "30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்: தென்காசி, தேனி-க்கு புதிய கலெக்டர்கள்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  6. "IAS gives chance to be agent of change: 6th ranked Charusree". Hindustan Times (in ஆங்கிலம்). 2015-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  7. தினத்தந்தி (2023-01-31). "தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, திருவாரூர் கலெக்டர் ஆனார்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
  8. "Anna varsity alumna is IAS topper in Tamil Nadu". The Hindu (in Indian English). 2015-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.

புற இணைப்புகள்

தொகு

https://www.youtube.com/watch?v=xoPPdSlfFhE

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருஸ்ரீ&oldid=3790579" இலிருந்து மீள்விக்கப்பட்டது