சிகி குதுகு
சிகி குதுகு என்பவர் மங்கோலியப் பேரரசின் ஆரம்ப ஆண்டுகளில் உயர்நிலை மந்திரியாகப் பணியாற்றியவர் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தச் செங்கிஸ் கானின் தத்துத் தம்பி ஆவார்.
வாழ்க்கை
தொகுமங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி, சிகி குதுகு ஒரு தாதர் உயர்குடியின மனிதனின் மகனாவார். 1190களின் போது மங்கோலியர்கள் மற்றும் தாதர்களுக்கு இடையில் நடைபெற்ற சண்டையின்போது குழந்தையான இவர் தொலைந்துவிட்டார். பிறகு செங்கிஸ் கானின் ஆட்களால் கண்டுபிடிக்கப்பட்டார். கானின் தாய் ஓவலுனிடம் இவர் கொண்டு வரப்பட்டார். ஓவலுனால் மகனாகத் தத்தெடுக்கப்பட்டார்.
சிகி குதுகு சட்ட விவகாரங்களை நன்றாக அறிந்தவராக இருந்தார். மங்கோலியப் பேரரசின் ஆரம்ப ஆண்டுகளின் போது யசா எனும் மங்கோலியச் சட்ட வரைவிற்குப் பெரும் பங்களித்தார். 1206ஆம் ஆண்டு ஒரு நீதிபதியாகச் செங்கிஸ் கானால் இவர் நியமிக்கப்பட்டார். தீர்ப்புகள் மற்றும் குற்ற விவகாரங்கள் பற்றிய பதிவுகளை வைத்திருப்பது இவரது பணியின் ஒரு பகுதியாக இருந்தது. மங்கோலியப் பேரரசின் பிரதம மந்திரியாகிய எலு சுகையுடன் இவர் நல்ல நட்புறவில் இருந்தார்.
1221ஆம் ஆண்டு குவாரசமியப் பேரரசுக்கு எதிரான பர்வான் யுத்தத்தில் மங்கோலிய இராணுவத்திற்குச் சிகி குதுகு தலைமை தாங்கினார். குவாரசமியப் பேரரசுக்குச் சுல்தான் ஜலாலுதீன் மிங்புர்னு தலைமை தாங்கினார். மங்கோலியர்கள் குவாரசமியர்களால் தோற்கடிக்கப்பட்ட சில தோல்விகளில் இதுவும் ஒன்றாகும். சிந்து ஆற்று யுத்தத்தில் செங்கிஸ் கானுடன் சிகி குதுகு இணைந்து கொண்டார். பிறகு செங்கிஸ் கானின் ஒன்று விட்ட தம்பியான டொலுன் செர்பியுடன் நிசாபூருக்கு இவர் அனுப்பி வைக்கப்பட்டார். நிசாபூரில் இவரது பணியை முடித்த பிறகு மங்கோலியாவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த காசுனியில் பிடிக்கப்பட்டக் கைவினைஞர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. காசுனியில் தனது பணியை முடித்த பிறகு துலக் நகர முற்றுகைக்குச் சிகி குதுகு தலைமை தாங்கினார். அந்நகரின் ஆளுநரான அசாபி நிசாவர் திறை செலுத்த ஒப்புக் கொண்டார். துரலக் நகரத்தை இணைத்த பிறகு மெர்வ் நகரத்தின் மங்கோலியச் சார்பு அரசைப் பதவியில் இருந்து இறக்கிய கிளர்ச்சியை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
1240ஆம் ஆண்டு வட சீனாவில் தலைமை நீதிபதியாக ஒக்தாயி கானால் சிகி குதுகு நியமிக்கப்பட்டார். இவர் 1250ஆம் ஆண்டு இறந்தார்.
மங்கோலியர்களின் இரகசிய வரலாறு காவிய நூலை எழுதிய நபர்களில் இவரும் ஒருவர் என புராணக் கதைகள் உள்ளன.[1]
உசாத்துணை
தொகு- ↑ 《蒙古秘史现代汉语版》第77页