தொல்லுலகச் சிட்டுகள்

(சிட்டு (பறவை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிட்டுக் குருவி
சிட்டுக்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பசரீன்கள்

Illiger., 1811
Genera

Passer
Petronia
Carpospiza
Montifringilla

தொல்லுலகச் சிட்டுகள் (Old World Sparrow) என்பவை சிறிய குருவிகளின் குடும்பம் ஆகும். இவை உண்மையான சிட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையான சிட்டுகள் என்ற பெயர் குறிப்பாக இக்குடும்பத்தின் கீழ் உள்ள பேரினமான பேசர் (Passer) பேரினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

உடல் அமைப்பு

தொகு

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்[1].

வசிப்பிடம்

தொகு

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

உணவுப் பழக்கம்

தொகு

சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள்.தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.

வாழ்க்கைமுறை

தொகு

சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்[2]. ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சிட்டுக் குருவியின் வகைகள்

தொகு
  • மெல்லிய கோடுகளைக் கொண்ட புல்வெளிக் குருவிகள்
  • மாலைச் சிட்டுகள்
  • காட்டில் வாழும் நரிச் சிட்டுகள்
  • வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள்
  • கறுப்புச் சிட்டுகள்
  • வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையைப் பெற்றவை
  • வீட்டுச் சிட்டுக்குருவி

என குருவிகளில் பல வகைகள் உள்ளன.

தமிழ் இலக்கியங்களில் சிட்டுக் குருவி

தொகு

சிட்டுக்குருவியில் இரண்டு இனங்கள் உண்டு.
சிட்டுக்குருவியைச் சிய்யான் குருவி என்றும் கூறுவர்.

ஊர்க்குருவி
ஒன்று ஊர்க்குருவி. இதனைச் சங்க இலக்கியங்கள் மனையுறைக் குரீஇ என்றும்,[3] உள்ளுறைக் குரீஇ என்றும் [4][5] உள்ளூர்க் குரீஇ என்றும்[6] குறிப்பிடுகின்றன. இவை மக்களோடு பழகி வாழ்பவை.
தூக்கணங்குருவி
 
தூக்கணங்குருவிக் கூடு
 
தூக்கணங்குருவிக் கூடு வாயில்
இதன் மற்றொரு வகை தூக்கணங்குருவி. இது மூங்கில் மரங்களிலும்,[7] தென்னை மரங்களிலும்,[8] கூடு கட்டிக்கொண்டு வாழ்பவை. மக்களோடு பழகாமல் காட்டுப்பகுதியில் வாழ்பவை. தினைப்புனம் காத்த மகளிர் இவற்றைத்தான் ஓட்டியதாகப் பாடல்கள் கூறுகின்றன.[9]
பழக்கப்பட்ட குருவிகள்
பழக்கப்பட்ட குருவிகள் பறம்புமலையை மூவேந்தர்கள் முற்றுகை இட்டிருந்தபோது நெற்கதிர்களைக் கொண்டுவந்து பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்கியதாக ஒரு பாடல் தெரிவிக்கிறது.[10]
நிறம்
இந்தக் குருவியின் நிறம் பற்றிய குறிப்புகளும் உள்ளன,
குருவியின் நிறம் பூளாப் பூ போன்ற வெண்மை.[11]
ஆண்குருவியின் கழுத்து கருநிறம்.[12]
தூக்கணங்குருவிக் கூடு
தூக்கணங்குருவியின் கூடு வளைந்த வாயில்களை உடையது என்றும், உயர்ந்த மரங்களில் தொங்கும் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.[13]
பொதுக்குறிப்பு
தமிழ் இலக்கியங்களில் சிட்டுக் குருவியைப் பற்றி பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் 'குருவி ஒப்பியும் கிளி கடிந்து குன்றத்து' என்று குன்றக் குரவையில் மலை மேல் திரிந்த குருவியையும் கிளியையும் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
புறாநானூற்றில் உள்ள குரீஇ என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பர். "குன்றத்து இருந்த குரீஇ இனம் போல் " என்ற புறநானூற்றுப் பாடலிலும் "மனையுறை குரீஇக் களை கனல் சேவல்" என்ற பாடலிலும் [14] கழுத்தில் கறுப்பினை உடைய ஆண்குருவி, வீட்டிலேயே செல்லப் பறவையாக வாழ்வதைக் கூறுகிறது. "தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு" [15] என்ற புற நானூற்றுப் பாடலிலும் தூக்கணாங்குருவியையும் அதன் கூட்டையும் சுட்டுகிறது.
" எண்ணரும் குன்றில் குரீஇ இனம் போன்றனவே" [16] என்ற களவழி நாற்பதும் (பாடல் 8) யானைமேல் தைத்த அம்புகளுக்கு, மலை மீது தங்கிய குருவிகள் உவமை ஆக்கப்பட்டுள்ளன. "உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்"[17] என்ற நற்றிணைப் பாடலும் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புறப்பெடையோடு வதியும் குருவியைக் காட்டுகிறது. " ஆம்பல் பூவின் சம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உரைகுரீஇ " [18] என்ற குறுந்தொகைப் பாடலில், ஆம்பல் மலரின் நாம்பல் நிறத்தை ஒத்த குவிந்த சிறகுகளை உடைய வீட்டுக் குருவிகள் முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தின் கண் உள்ள எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டில் இறப்பில் தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும் [19] என்றும் கூறப்பட்டுள்ளது.
"குருவிசேர் வரை போன்ற குஞ்சரம்"[20] என்ற சீவக சிந்தாமணி யானை மேல் பல அம்புகள் உள்ளதை மலை மேல் குருவிகள் உள்ளதற்கு உவமையாகக் கூறுகிறது.
"குருவி சேர் குன்றம் ஒத்து"என மேருமந்திர புராணமும் இந்தக் குருவி உவமையைக் காட்டுகிறது.

அருகி வரும் இனம்

தொகு

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச் சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவையை பாதுகாக்க சிலர் முயற்சி எடுத்துவருகின்றனர்.[21] இந்த இனத்தின் அழிவு நிலையைக்கண்டு புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தம்பதிகள் அவர்களின் வீட்டில் கூடுகள் அமைத்து பராமரித்து வருகின்றனர்.[22] உலகம் முழுவதும் மார்ச் 20ம் தேதியை சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.[23] மதுரையில் இந்த குருவிக்காக ஒரு கோவிலை சுதந்திர போராட்ட வீரர் கோவிந்தசாமி என்பவர் கட்டியுள்ளார்.[24]

உலக ஊர்க்குருவிகள் நாள்

தொகு

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் 20 ஆம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.

மேலும் காண்க

தொகு

துணை நூற்பட்டியல்

தொகு
  • சலீம் அலி, 'பறவை உலகம்' , நேசனல் புக் டிரஸ்ட். புது தில்லி. வெளியீடு 2004
  • மா. கி. இரமணன், 'அறிவியல் ஒளி', ஏப்ரல் 2010 இதழ்

மேற்கோள்கள்

தொகு
  1. சலீம் அலி, 'பறவை உலகம்' பக்.127
  2. சலீம் அலி,பறவைகள் உலகம். பக்.128
  3. ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
    கூம்பிய சிறகர் மனையுறைக் குரீஇ
    முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
    எருவின் நுண்தாது குடைவன ஆடி
    இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் - குறுந்தொகை 46
  4. சங்க காலச் சிறுவர்கள் தோளில் பறையை மாட்டிக்கொண்டே திரிவார்களாம். அந்தப் பறையில் குருவிப் படம் வரையப்பட்டிருக்குமாம். தலைவி ஒருத்தி தன் வீட்டுக் கட்டுத்தறியில் உள்ள குதிரையிடம் பேசுகிறாள். தன் கணவன் போருக்குச் செல்ல இருக்கிறான். திரும்பும்போது அந்தக் குதிரை சவுக்கால் அடிபடபடப் போவதைக் குறிப்பிடுகிறாள். சிறுவர்கள் பறையை அடிக்கும்போது அந்தப் படக்குருவி அடிபடுவதுபோலத் தலைவன் வினைமுற்றி மீளும்போது தேரில் பூட்டிய குதிரை அடிபடும் \ சொவ்வரிப் பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல நற்றிணை 58
  5. இது மக்கள் குடியிருக்கும் வீட்டுக்குள் கூடு கட்டிக்கொண்டு வாழும். ஆண் குருவியின் கழுத்து கருமையாக இருக்கும். பெண்குருவி குஞ்சுகளுடன் இருந்தபோது ஆண்குருவி வேற்றுப்புலப் பறவைகளோடு மேய்ந்ததாம். பின் கூட்டுக்குத் திரும்பியபோது பெண்குருவி அந்த ஆண்குருவியைத் தன் கூட்டுக்குள் சேர்த்துக்கொள்ளவில்லையாம். ஆண்குருவி தூறல் துவலையில் நனைந்து வாடிற்றாம்.
    உள் உறைக் குரீஇக் கார் அணல் சேவல்
    பிறபுலத் துணையொடு உறைபுலத்து அல்கி
    வந்ததன் செவ்வி நோக்கிப், பேடை
    நெறிகிளர் வேங்கைப் பூவின் அன்ன
    சிறுபல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் - நற்றிணை 181
  6. உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடை சேவல் சூல் முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர் தேம் பொதி கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூ கொழுதும் - குறுந்தொகை 85
  7. முதுக்குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில் அங்கழைத் தூங்க - நற்றிணை 366
  8. முடங்கல் இறைய தூக்கணங் குரீஇ நீடு இரும் பெண்ணை தொடுத்த கூடு - நற்றிணை 374
  9. ஏனல் குரீஇ ஓப்புவாள் - குறுந்தொகை 72, 388
  10. வண்புகழ் பாரி பறம்பின்
    நிறைபறைக் குரீஇ இனம் காலை போகி
    முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஒராங்கு
    இரைதேர் கொட்பின ஆகி பொழுதுபடப்
    படர்கொள் மாலைப் படர்தந்து ஆங்கு
    வருவர் - அகம் 303
  11. குரீஇப் பூளை – குறிஞ்சிப்பாட்டு 72
  12. மனை உறைக் குரீஇக் கறை அடல் சேவல் - புறம் 318
  13. தூக்கணங் குரீஇ தூங்குகூடு - புறம் 225
  14. புறம்; பாடல். 318
  15. புறநானூறு, பாடல் .225
  16. களவழி நாற்பது, பாடல் .8
  17. நற்றினை, பாடல் .181
  18. குறுந்தொகை ,பாடல் 46
  19. மயிலாடனார், 'குறுந்தொகை', பாடல் .46
  20. சீவக சிந்தாமணி, பாடல்- 2237
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
  22. வீட்டுக்குள்ளே சிட்டுக்குருவி சரணாலயம்: உறவாக கருதி நேசிக்கும் புதுச்சேரி தம்பதி
  23. Houses for sparrows
  24. World Sparrow Day: Will sparrows ever return to this temple named after them?

ஒளிப்படத் தொகுப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்லுலகச்_சிட்டுகள்&oldid=3732819" இலிருந்து மீள்விக்கப்பட்டது