சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலிருக்கும் சின்னமனூர் எனும் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமாகும்.
இந்த சிவாலயம் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தாகும். உயர்ந்த சிவத்தலம் எது? என்று கேட்ட நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூதமா முனிவர், “பதினெண் புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில் சங்கர சங்கிதையில் கூறிய சிவத்தலங்களில் சிறந்த தலம் பூலாவனமாகும்” என்று சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
கோயில் வரலாறு
தொகுசிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த யாகத்தில் பங்கேற்ற அனைத்து வானவர்களும் தண்டிக்கப்பட்டனர். அவ்வாறே, காமதேனுவும், கற்பகத்தருவும் வீரபத்திரரால் தண்டிக்கப் பெற்றன. தெய்வீகப் பசுவான காமதேனுவை நாட்டுப் பசுவாகவும், கற்பகத் தருவை முட்பூலாமரமாகவும் வீரபத்திரர் சபித்தார். அவையிரண்டும் சாபவிமோசனம் கேட்க “கற்பகத்தருவே! நீ முட்பூலாமரமாய் முளைத்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாய்த் தோன்றுவார். அக்காலை ஆயன் காரணமாய் உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும்” என்றும், ”காமதேனுவே! நீ நாட்டுப்பசுவாய் பிறந்து ஒரு புலியினால் உனக்கும், புலிக்கும் ஞானம் உண்டாகிடச் சாபம் நீங்கும்” என்றும் அருளினார்.
காசியில் தவம் செய்து கொண்டிருந்தான் ஒரு அந்தணன். வானுலகிலிருந்து வந்த கந்தர்வன், அந்தணன் எழுந்து தனக்கு மரியாதை செய்யவில்லை என நினைத்து, அவ்வந்தணன் முன் புலியுர்க் கொண்டு உறுமி ஒலி எழுப்பினான். அதைக் கேட்ட அந்தணன் அஞ்சி நடுங்கினான். அதைப் பார்த்தக் கந்தர்வன் அந்தணனை எள்ளி நகையாடினான். உடனே அந்தணன், புலியாய் வந்து தன் தவத்தைக் கலைத்த அந்தக் கந்தர்வனைப் புலியாகுமாறு சபித்தார். கந்தர்வன் சாப விமோசனம் கேட்க, “சிவபெருமானின் திருநாமங்கலில் ஒன்றேனும் விழும் காலத்தில் ஒரு பசுவினால் உனக்கும் பசுவுக்கும் சாபம் தீரும்” என்று சாபவிமோசனம் கூறினான் அந்தணன்.
சதுரகிரிக்கு மேற்கேயும், வராக மலைக்குத் தெற்கேயும் அமைந்துள்ளது திருமலை. அத்திருமலைக்கு வடமேற்கில் சிவபெருமான் வீற்றிருக்கும் “தெய்வநாயக் புரம்” என்ற ஊரில் அந்தணன் ஒருவனது பசுக் கூட்டத்தில் வீரபத்திரர் சாபம் பெற்ற காமதேனு நாட்டுப் பசுவாகப் பிறந்தது. திருமலைக்கு வடக்கே வராக மலைக்குத் தெற்கே சுரபி நதிக்குக் கிழக்கே உள்ள ஆரண்யத்தில் (வனத்தில்) சுயம்புலிங்கமாய் முளைத்திருந்தார். அந்த லிங்கத்தின் வாமப் பாகத்தில் (இடதுபுறம்) வீரபத்திரர் சாபம் பெற்ற கற்பகத்தரு ஒரு முட்பூலாவாகத் தோன்றியது. அது மற்ற மரங்கள் அவ்விடத்தில் தோன்ற விடாது தன் வேர் சென்ற இடங்களெல்லாம் ஓங்கிப் பூலாவனமாக ஆகிச் சிவலிங்கத்திற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது.
திருமலையில் அச்சமில்லாமல் மேய்ந்து கொண்டிருந்த காமதேனுவாகிய பசுவும், மற்ற பசுக்களுடன் மேய்ந்து தண்ணீர் குடிக்கத் தனித்துச் செல்லும் போது அந்தணரது சாபத்தால் வந்த கந்தர்வன் ஆகிய புலி பசுவின் மீது பாய முயன்றது. அதைக் கண்ட பசு, “புலியே! என் வேண்டுகோளைக் கேட்டு பின் என்னை உண்பாய்! நான் வீட்டிற்குச் சென்று என் கன்றுகளுக்குப் பால் கொடுத்து விட்டு மீண்டும் வருவேன். அதுவரை பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டியது. புலியோ மூன்று நாள் பட்டினியோடு இருக்கும் நான் உன்னை உண்பேன் என்று துணிந்த போது, பசு “சிவ சிவ” என்று சப்தமிட அந்தப் புலி தன் பூர்வம் அறிந்தது. அப்பொழுது பசு, “நான் சொன்னபடி உன்னிடம் வராவிட்டால், சிவபெருமானது திருவெண்ணீற்றைச் சிதைத்தவர், கங்கையை மறந்த நதிகள், தன்னுயிர் போல் பிற உயிர்களைப் பாராது கொன்று தின்னும் மனிதர்கள் அடையும் நரகத்தினை நான் அடைவேன்" என்று சத்தியம் செய்தது. பசுவின் வாசகம் கேட்டு புலி துணுக்குற்று, “நீ கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு மீண்டும் வா” என்று சொல்ல பசு விரைந்து வீட்டிற்கு வந்து தன் கன்றுக்குப் பால் கொடுத்து சொன்னபடி புலியிடம் வந்து சேர்ந்தது.
சொன்னபடி வந்து சேர்ந்த பசுவைக் கண்டு புலி வாயடைத்துப் போய் ஒதுங்கி நின்றது. அது கண்ட பசுவானது, “பசித்திருக்கும் நீ என்னைப் புசித்து பசி தணிப்பாய்” என்று கூற, “நீ சொன்ன சத்தியங்களுள் பிற உயிர்களைக் கொன்று புலால் உன்போர் அடையும் நரகமும் ஒன்று” என்பதால் புலி ”பசுவை அடித்துக் கொன்று தின்ன விரும்பவில்லை.” என்று கூறியது. உடனே பசு, “நீ என்னைக் கொல்லாவிட்டால் நானே இந்தப் பாறையில் மோதி உயிரை மாய்க்கிறேன்.” என்று பாறையில் மோதித் தன் உயிரை விட்டது. உடனே சிவபெருமான் அங்கு காட்சியளித்து பசுவிற்கு காமதேனு உருவமும், புலிக்குக் கந்தர்வ உருவமும் தந்து அருளினார்.
காமதேனு பசு,” சுவாமி இன்று முதல் இந்த திருமலைக்கு ’சுரபி மலை’ என்று பெயர் வழங்கவும் இந்நதியில் மூழ்குவோர் பாவங்கள் தீர்ந்து உயர்பதவியைப் பெறவும், இதற்கு அடையாளமாக இந்நதியில் விழும் இலை, வேர், குச்சி, எலும்பு ஆகியன கல்லாயும், பாசமில்லாமலும் இருக்க வேண்டும் என்று வேண்டியது. இறைவனும் காமதேனு பசு கேட்டபடி தன் சடைமுடியிலிருந்து சிறு திவலையை சிதற சுரபி நதி தோன்றியது.
இராசசிங்கன் எனும் அரசன் வீரபாண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த நிலையில், துஷ்ட மிருகங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, அவர்கள் குறை தீர்க்க வேட்டைக்குப் புறப்பட்டு பூலாவனத்தின் மேற்கே சுரபி நதியின் பக்கம் வந்து சேர்கிறான். ஆற்றுக்கு மேற்புறமாக ஒரு கோயிலைக் காண்கிறான். அது மதுரையை ஆண்ட விக்கிரமபாண்டியன் எனும் மன்னனால் பிரதிட்டை செய்யப்பட்ட விக்கிரபாண்டி ஈசர் ஆலயம் என்பதை அறிந்து மகிழ்ந்தான். அதன் பின் அங்கே அழகு நகர் ஒன்றை உருவாக்கி மக்களைக் குடியமர்த்தி ஆட்சி செய்து வரத் தொடங்கினான்.
பூலாவனத்தினுள் இருந்த ஆயர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் மன்னனுக்கு நாள்தோறும் பால் கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயர் குலத்தைச் சேர்ந்த அவன் முதல் நாள் பால் கொண்டு வரும் போது ஒரு பூலாமரத்தின் வேரில் இடறி நிலத்தில் விழுந்ததுடன் பால் முழுவதும் அங்கு சிதறிப் போனது. இதனால் அவன் மன்னனுக்குப் பால் கொண்டு சென்று கொடுக்க முடியாமல் போனது. இப்படியே மறுநாளும் நடந்தது. தனக்குப் பால் கொண்டு வரக் கட்டளையிட்டும் பால் கொண்டு வராததால் அரசன் கோபிப்பாரே என்று எண்ணி அஞ்சினான் அவன். மூன்றாம் நாள் பாற்குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு இடறி விடும் மரத்தின் வேரை வெட்ட ஒரு கோடாரியும் கொண்டு வந்தான். வழக்கம் போல் அந்த இடத்திற்கு வரும் போது இடறி விழுந்தான். சினத்துடன் எழுந்த அவன் கையில் கொண்டு வந்த கோடாரியால் அந்த பூலாமரத்தின் வேரை வெட்டினான். அந்த வெட்டு அருகிலிருந்த சிவலிங்கத்தின் முடியிற்பட்டு செங்குருதி வெள்ளமாக எழுந்தது. அப்போது சிவபெருமான் ஆகாயம் வரை உயர்ந்து தோன்றினார். பூலாமரம் கற்பகத் தருவாய் மாறி வணங்கி, “உன் திருவருளால் உனக்கு நிழல் கொடுத்து உன் பாதமே பற்றாக வாழ்ந்தேன். அந்தச் சிறப்பால் தங்களை நேராகத் தரிசித்தேன். என்பக்கத்தில் ஒரு சில்லி வேரை விட்டு வந்தேன். அந்த வேரிலிருந்து பூலாமரம் முளைக்குமேல் அதைக் கற்பகத்தருவாய் நினைத்து வணங்குபவர்களுக்கு அவர்கள் கேட்ட வரமளிக்க வேண்டும்” என்று கேட்டது. இறைவனும், “அப்படியே ஆகுக” என்று அருளினார்.
அதைப் பார்த்த ஆயர் குலத்தவன் பயந்து போனான். மயங்கி விழுந்தான். பின் எழுந்த அவன் அரசனிடம் தான் பால் கொண்டு வர இயலாமைக்கான காரணத்தையும் தான் கண்ட காட்சியையும் தெரிவித்தான். ஆயன் பொய் சொல்வதாக நினைத்த அரசன் இராசசிங்கன் அந்த இடத்திற்குத் தனது பரிவாரங்களுடன் சென்றான். அங்கு சிவலிங்கத்திலிருந்து குருதி பெருகி ஓடிக் கொண்டிருந்தது. அரசன் சிவலிங்கத்திலிருந்து பெருகிய குருதியைக் கண்டு துயரமடைந்தான். குருதியை நிறுத்தி அருள் புரிய வேண்டுமாய் வணங்கி நின்றான். அவனுடைய வேண்டுகோளை ஏற்ற இறைவன் குருதியை மறைத்து தன் உருவத்தைக் காட்டி அருளினார். அந்த அரசன் அவரைக் கட்டித் தழுவினான். மகிழ்ந்தான்.
பின்னர் இராசசிங்க பாண்டியன் ”அண்ணலே! நீர் பூலா ஆரண்யத்தில் இருந்தமையால் “பூலாவனேசர்” என்று பெயர் பெற்றாய். ஆயன் பாற்குடம் இடறிச் சொறிந்த பாலை உண்டதனால் “பாலுண்டநாதர்” என்றும், பின் என்னைக் கட்டித் தழுவியதால் “தழுவக் குழைந்தவர்” என்றும் பெயர் பெற்றது போல் இன்று முதல் உன்னைப் பூசித்த பேற்றினால் ”இராச சிம்மேசுவரர்” என்றும் அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமானும் அவன் விருப்பம் நிறைவேறும் என்று சொல்லி மறைந்தார்.
அதன் பின் இராசசிங்க பாண்டியன் அவ்விடத்தில் கோயில் கட்டி முடித்தான். கோயிலில் சக்தியின் வடிவான அம்மைக்கும் தனிக் கோயில் ஒன்று எழுப்ப விரும்பினான். ஒரு சிற்பியிடம் சொல்லி சிலை ஒன்றை வடிவமைக்கச் சொன்னான். அவன் மலைக்குச் சென்று ஒரு பாறையைத் தேர்வு செய்து சிலையை எப்படி வடிவமைப்பது என்று சிந்திக்கலானான். அந்த சிந்தனையில் அப்படியே உறங்கத் தொடங்கினான். அப்போது அவன் கனவில் தோன்றிய இறைவன், ”இவ்விடத்தில் நம் தேவி கூப வடிவாய் விளங்குகிறாள். அனைவரும் கூபத்தின் (கிணற்றின்) முன் வந்து தேவியைத் தியானித்து அம்மை வெளிப்பட வேண்டுமென பிரார்த்தனை செய்தால் கிணற்று நீரில் எலுமிச்சம்பழம், விபூதியும் மிதக்கும். அதன் பின் உள்ளே இறங்கிப் பாருங்கள்; அம்மை உருவாய்ச் சமைந்து தென்படுவாள் அப்படியே பிரதிட்டை செய்யுங்கள்.” என்று கட்டளையிட்டு மறைந்தார். அன்றிரவே அரசர் கனவிலும், பட்டர் கனவிலும் அவ்வாறே அருளி மறைந்தார்.
மறுநாள் அனைவரும் ஒன்று கூடி கூபத்தில் வந்து பிரார்த்திக்க எலுமிச்சம்பழம், விபூதியும் கண்டனர். பின்னர் கிணற்றில் இருந்த அம்மன் சிலையை எடுத்துக் கோயில் அமைத்தான். அம்மனுக்கு சிவகாமி அம்மன் என்று பெயர் சூட்டினான்.
அரிகேசரி நல்லூர்
தொகுஇராணி மங்கம்மாள் காலத்தில் சின்னமநாயக்கர் என்ற அரசியல் அதிகாரி இவ்வூரை உருவாக்கியதால் அவர் பெயரால் சின்னமனூர் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டதாக மதுரை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று கூறுகிறது. புராணத்தில் இந்த ஊர் அரிகேசரி நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துலாபார யுகத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் திடீரென திருமகள் திடுக்கிட எழுந்தார். திருமகள் அதற்குக் காரணம் கேட்க, திருமால் கூறுகிறார். “உலகமெல்லாம் நான் நிறைந்திருந்தாலும் எனக்குள் அந்தரியாய் இருப்பவன் சிவனே. அவன் உலகம் உய்த்திடச் சுயம்புவாய் உதித்த சிவலிங்கம் அளவில்லாதவை. அவை எல்லாம் தொழுதேன். அவற்றுள் தொழாததும் உண்டோ என்று எண்ணிய போது, நலம் மிகுந்த பூலாவனம் ஒன்று உண்டு என்பதை உணர்ந்து, அதனைத் தொழுதிட எழுந்தேன்” என்று சொல்லிய திருமால் பூலாவனம் வந்து சிவபெருமானை வணங்குகிறார். சிவபெருமான் மகிழ்ந்து திருமாலுக்கு தில்லைத் திருநடன் காட்டி அருளினார். திருமால் சிவபெருமானிடம்,சிவகாமவல்லி இல்லாமலிருப்பதற்குக் காரணம் கேட்கிறார். உடனே சிவபெருமான், “இத்தலம் இன்னொரு சிதம்பரமாகும். தில்லையில் உள்ள பரமானந்த கூபமே (கிணறே) இங்கு கூபமாய் அமைந்துள்ளது. அதுவே இடதுபுறத்தில் சிவகாமியாக இருக்கிறது என்று உணர்த்த அங்கும் சென்று வணங்குகிறார். மீண்டும் அங்கு வந்த திருமால், ”இத்தலம் சிதம்பரம் என்றால் தன் பாவம் போக்கிட இங்கு ஒரு சிவகங்கைத் தீர்த்தம் ஒன்று வேண்டுமே.” என்று கேட்க சிவபெருமான் தன் சன்னதிக்கு முன்பாக ஒரு தடாகத்தை உருவாக்கினார். அந்தத் தடாகத்தில் குளித்து சிவபெருமானை வணங்கினார் திருமால். அவருக்கு அடுத்து பிரம்மன் வந்து பூலாவன ஈசரை வணங்கி வரம் பெற்றுச் சென்றார். பின்னர் ஈசானன் முதலிய பதினொரு உருத்திரர்கள் வந்து வணங்கி அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுச் சென்றனர். பின்னர் இந்திரன், இந்திராணியுடன் வந்து வணங்கிச் சென்றான்.
அரி + க + ஈசன் + அரி = அரிகேசரி
அரி - திருமால், க - பிரம்மா, ஈசர் - உருத்திரர், அரி - இந்திரன் ஆகியோர் வழிபட்டதால், இது முதல் பூலானந்தீசுவரருக்கு “அரிகேசரி நாதர்” என்ற பெயர் விளங்கிற்று. அவர் இருந்து அருள் தரும் நகருக்கு “அரிகேசரி நல்லூர்” என்று பெயர் வழங்கிற்று.
கோயிலின் அமைப்பு
தொகுசின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரம், அதற்கடுத்து நந்தி பகவான் அதற்கடுத்து மண்டபம் ஆகியவைகளைக் கடந்து பூலாநந்தீசுவரர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் இடது புறம் சிவகாமி அம்மன் கோயிலும் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சந்திரசேகரர், காங்காளர், சுப்பிரமணிய சுவாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, காளி, பைரவர் போன்ற துணைத் தெய்வங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வலதுபுறம் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்குப் பகுதியில் திருமால் வேண்டுகோளுக்காக சிவபெருமான் உருவாக்கிய சிவகங்கைத் தீர்த்தம் எனப்படும் குளம் உள்ளது.
இக்கோவிலை போடிநாயக்கனூர் ஜமீன் திருமலை பங்காரு முத்து நாயக்கர் என்பவர் கட்டுவதற்கு உதவியுள்ளார். இக்கோவில் திருப்பணிக்காக நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார். [1]
சிறப்பு விழாக்கள்
தொகுஇக்கோயிலில் தினசரி ஆறுகாலப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இக்கோயிலில் நிரந்தர வைப்புநிதித் திட்டம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் கீழ்காணும் சிறப்பு விழாக்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
- சித்திரை - தீர்த்தவாரி சித்திரைப் பெருவிழா எனும் 15 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா
- வைகாசி - விசாக நட்சத்திரம், திருமுருகன் பால்குட விழா
- ஆனி -ஆனி திருமஞ்சனத் திருவிழா
- ஆடி - முளைக் கொட்டுத் திருநாள், அம்மன் தபசு,
- ஆவணி - புட்டுத் திருவிழா, விறகு விற்றல் திருவிழா
- புரட்டாசி - நவராத்திரி விழா
- ஐப்பசி - கந்த சஷ்டி, அன்னாபிசேகம்
- கார்த்திகை - திருக்கார்த்திகை விழா
- மார்கழி - ஆரூத்ரா தரிசனம், படியளத்தல் விழா
- தை - தீர்த்தவாரி, தைப்பூசத் தெப்பத் திருவிழா
- மாசி - மகாசிவராத்திரி
- பங்குனி - பங்குனி உத்திரம்
இவை தவிர 63 நாயன்மார்களுக்கும் அவர்களது நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகளும், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வெள்ளியன்று திருவிளக்கு பூசையும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
சிறப்புக்கள்
தொகு- இந்தியாவில் முக்தி கொடுக்கும் தலங்கள் ஐந்து உள்ளன. 1. காசி , 2. திருவண்ணாமலை , 3. சிதம்பரம் , 4. திருவாரூர் , 5. அரிகேசரி நல்லூர். இவற்றில் அரிகேசரி நல்லூரே சிறந்தது. ஏனெனில் காசியில் இறக்க முக்தி என்றாலும் அங்கே நினைத்துப் போகும் போதும் காசியில் இருக்கும் போதும் பல இடையூறுகளினால் இறக்கும் தருணத்தில் சிந்திக்காமல் திரும்பும்படி நேரிடும். திருவண்ணாமலையை மரணகாலத்தில் நினைக்க முக்தி என்றாலும் மரண வேதனையில் அந்த நினைப்பு வருவது எளிதல்ல. சிதம்பரத்திற்குப் போய் தரிசனம் செய்யும் சமயத்தில் பல இடையூறுகளாலும், ஜன நெருக்கடியாலும் தரிசனம் கிடைக்காமல் மருண்டு போவதும் உண்டு. அதுவும் எளிதல்ல. திருவாரூரில் பிறக்க முக்தி என்றாலும் அது மிகவும் கடினம். அரிகேசரிநல்லூரில் வசிக்கும் போது அபுத்திப்பூர்வமாக சுரபி நதியில் மூழ்கினாலும், அபுத்திப் பூர்வமாக வேடிக்கை பார்ப்பது போல அரிகேசரி நாதர் சன்னதியில் நின்றாலும் அவர்களுக்கெல்லாம் முக்தி சித்திக்கும்.[சான்று தேவை] இதற்கு சிவபெருமான் காமதேனுவிற்குக் கொடுத்த வரம்தான் காரணம்.
- இத்திருக்கோயிலில் 27 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை] இதில் அள நாட்டின் பிரம் தேயமான அரிகேசரி நல்லூரில் அமைந்துள்ள இராசசிம்மேசுவரமுடையார் என்று இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை]
- எம் மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலாம் குலசேகரவர்மன் (1268- 1308), ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், சடைய மாறன் ஆகிய பாண்டிய மன்னர்கள் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு நிலம், பொன், ஆடு முதலியவை தானமாக வழங்கப்பட்ட செய்திகளைக் இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றனர்.
- சுங்கம், வரி, பொருள் விற்பனை ஆகியவை வசூலிக்கப்பட்டவுடன் அவற்றால் கிடைத்த தொகைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தானமாகக் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. நிலங்கள் விற்கப்பட்ட போது அரிகேசரிநல்லூரைச் சேர்ந்த மகாசபையார் பண்ணை செய்வார்கள், வேலி செய்வார்கள் போன்ற குழுவினர் அதனைக் கண்காணித்தனர். இங்கு மலர்வனம் அமைப்பதற்காக ஏற்றுமதிப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட சுங்க வரி பயன்படுத்தப்பட்டது. துர்கா பரமேஸ்வரி சந்நிதியில் நந்தா விளக்கு எரிப்பதற்காக அருகிலுள்ள மூன்று கிராமங்களில் சபையோர் முன்னிலையில் நிலதானம் அளிக்கப்பட்டத் போன்ற தகவல்கள் இக்கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.
- மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டு ஒன்றில் திருப்பூலாந்துறை உடையார் அல்லது ராசசிம்ம சோழீச்சுரமுடையார் என்று இக்கோயிலில் குடி கொண்டுள்ள ஈசன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
- கடந்த நூற்றாண்டின் இறுதியில் கோயிலில் மடைப்பள்ளி கட்டுவதற்காகத் தோண்டிய போது இரண்டு செப்பேடுகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று முதலில் “மகாவிஷ்ணுவிற்கு தோத்திரம்” கூறுகிறது. அடுத்து "பாண்டியர் குலம் நீடூழி வாழ்க" என்று பிரார்த்தனை செய்கிறது. அதனையடுத்து மேருமலையில் கயல் சின்னத்தைப் பொறித்தும், இந்திரனின் ஆரத்தை அணிந்தும், அவனது அரியணையில் அமர்ந்தும், வேற்படையை எறிந்து கடல்நீரை வற்றச் செய்தும், ஆயிரம் வேள்விகளை நடத்தியும் புகழ் பெற்ற முதற்காலப் பாண்டியர்களின் சிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது.
- இக்கோயிலின் வடபகுதியில் நாகலிங்கப் பூ மரம் ஒன்று உள்ளது.
பயண வசதி
தொகுதமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் நகருக்கு தேனியிலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்து பயண வசதி உள்ளது. தேனியிலிருந்து கம்பம் மற்றும் குமுளி செல்லும் பேருந்துகள் இந்த ஊரின் வழியாகத்தான் செல்கின்றன. தேனியிலிருந்து நகரப் பேருந்து வசதியும் உள்ளது. கார் பயணம் செய்ய விரும்புபவர்கள் தேனியிலிருந்து கம்பம் நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூரை அடையலாம்.
உசாத்துணை
தொகுமேற்கோள்கள்
தொகு<references>