சிரக்கடவு மகாதேவர் கோயில்
சிரக்கடவு மகாதேவர் கோயில் தேசிய நெடுஞ்சாலை எண் 183-ன் கொல்லம் - தேனி வழித்தடத்தில் கோட்டயம் நகரம் அட்சரா நகரியிலிருந்து சுமார் 32 கி.மீ. கிழக்கிலும், மணிமலை-எருமேலி செல்லும் வழியில் பொன்குன்னத்திலிருந்து 3 கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ள மகாதேவர் கோயிலாகும்.
வரலாறு
தொகுஇக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள மூலவர் ஸ்வயம்பு சிவலிங்கம் ஆகும். இந்த மூலவர் வில்வ மரத்தின் கீழ் உள்ளார் ஆழ்வார்கள் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள குளம் (மலையாளத்தில் 'சிரா') என்றழைக்கப்படுவதால் அந்த இடம் 'சிரக்கடவு' எனப்படுகிறது.
புராணம்
தொகுஇக்கோயிலைக் கட்டிய மன்னன் தன் இறுதிக் காலத்தில் வில்வ மரத்தின் அருகே ஒரு ஆசிரமம் கட்டியுள்ளார். அவர் அங்கு தவத்தில் ஈடுபட்ட நிலையில் வில்வ மகரிஷி என்றழைக்கப்பட்டார். அவர் தவத்தில் இருந்தபோது இறைவன் அவருடைய கனவில் தோன்றினார். அவரது விருப்பப்படி மன்னர் தனது தவத்தைத் தொடர்ந்ததாகவும், பின்னர் சொர்க்கத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலின் பலிகல்லு மிகப் பெரியதாகும். அதற்கு முன்பாக கருங்கல்லால் ஆன அழகிய சிற்பமும், ஒரு பெரிய விளக்கும் உள்ளன. பலிகல்லு பெரியதாக இருந்தாலும் , கிழக்கு கோபுரத்தின் வாயிலுக்கு அருகில் நின்றால் இறைவனை தெளிவாகத் தரிசனம் செய்யலாம். கோயிலைச் சுற்றிலும் உள்ள மரச் சிற்பங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன. இக்கோயிலில் ஐந்து கால பூசைகள், 3 சீவேலி, தினசரி நவகம் ஆகியவை நடத்தப்பெறுகின்றன.
திருவிழாக்கள்
தொகுமுன்பெல்லாம் வாகன வசதி இல்லாதபோதும், சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் போதும் இந்தக்கோயிலில் தான் பக்தர்கள் தங்குவர். தங்குவார்கள். ஐயப்ப பக்தர்கள், இங்குள்ள மூலவரை ஐயப்பனின் தந்தையாகக் கருதுகின்றனர். இதனால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தாணு 24-ஆம் நாளில் சபரிமலை செல்லும் பக்தர்கள் கடந்த காலத்தில் செய்தது போல் "ஐயப்பன் பட்டு" நடத்துகின்றனர். மகாதேவர் கோவிலில் திருவிழாக் காலத்தில் நடத்தப்படும் வெலகளி மிகவும் சிறப்பு பெற்றது. இதற்காக ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலான குழந்தைகள் வாள் மற்றும் கேடயம் ஏந்தியபடி போர்வீரர்கள் வேடமணிந்து மேள தாளத்திற்கு ஏற்ப நடனமாடுவர். இந்த நடனம் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். "மீனாரி" இக்கோயிலின் புகழ்பெற்ற காணிக்கையாகும். புஷ்பாஞ்சலியும் இங்கு செய்யப்படுகிறது. மற்றொரு முக்கிய வழிபாடு சதுர்ஷதம் ஆகும். இது திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான சுயசார்புள்ள மிகச் சில கோயில்களில் ஒன்றாகும். [1]