காலிங்கராயர் அல்லது காலிங்கராயன் என்பவர்கள், தமிழ் நாட்டில் முதலாம் குலோத்துங்க சோழன் கால முதலே “கலிங்கராயன்' என்ற புதிய பட்டத்துடன்‌ கல்வெட்டுகளிற்‌ காணப்படுகின்றனர்.[1]

மன்னர்கள் தம் நாட்டில் சிறப்புற்று விளங்கியோர்க்கும் தங்கள் அரசியல் அதிகாரிகட்கும் அவர்தம் பணியைப் பாராட்டித் தகுதிக்கேற்ற வகையில் பற்பல பட்டப்பெயர்களை அளித்தனர். எட்டி, ஏனாதி, காவிதி என்பன அவற்றுட் சில பெயர்களாக வரலாற்றில் அறிகின்றோம். இவ்வாறு அளித்த பல பட்டப்பெயர்களுள் 'காலிங்கராயன்' என்பதும் ஒன்று. கள்ளர் மற்றும் கொங்கு வேளாளர் சாதிகளில் காலிங்கராயன் என்ற பட்டப்பெயர்கள் உள்ளன.[1]

விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் ஆகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1096 இல் தென் கலிங்கத்தையும் கி.பி. 1112 இல் வடகலிங்கத்தையும் வென்று தன் குடைக்கீழ்க் கொணர்ந்தான். இதில் கி.பி. 1112 இல் அனந்தவர்மனோடு நடைபெற்ற வடகலிங்கப் போர் வெற்றியையே செயங்கொண்டார் பரணியாகத் தரணி போற்றப் பாடினார். குலோத்துங்கன் தன் கலிங்க வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவனும் சிறந்த சிவபக்தனுமாகிய நரலோக வீரன் என்ற சிறப்புப் பெயரையுடைய மணவிற்கூத்தனுக்குக் 'காலிங்கராயன்' என்ற பட்டத்தை அளித்தான். கலிங்க வெற்றியின் அடையாளமாகவே குலோத்துங்கன் இவ்வாறு பட்டப்பெயரை அளித்தான். பலர் 'காலிங்கராயன்' என்ற பெயரைக் 'காளிங்கராயன்' , 'காளிங்கராயர்' மற்றும் 'கலிங்கராயன்' என்று எழுதி வருகின்றனர்.[1]

சோழ நாட்டில் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள மதுரையும் ஈழமும் கொண்ட இராசாதிராச தேவனின் 11 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 'காலிங்கராயர்' என்ற ஒரு அரசியல் அதிகாரியின் பெயரைக் காண் கின்றோம். தில்லையில் கூத்தரசப் பெருமான் ஆலயக் கல்வெட்டில் 'காலிங்கராயர் ஓலை' என்ற பெயரில் ஓர் அரசியல் அதிகாரியின் ஆணை குறிக்கப்பெறுகிறது. திருவரங்கம் கோயில் கல்வெட்டில் காலிங்கராயர் வைக்கிற அகரம்" என ஒரு கல்வெட்டில் காணுகின்றோம். அத்திருவரங்கத்திலேயே "உடையார் பெரியபெருமாள் ஆன காலிங்கராயர் கலியுகராமச்சதுர்வேதிமங்கலம் என்று அந்தணர்கட்கு ஊர் ஏற்படுத்தியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.[1]

திருவிடைமருதூர்ச் சிவாலயத்தில் உள்ள கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில் 'காலிங்கராயன்' என்ற அதிகாரி சாட்சிக் கையொப்பமிட்டுள்ளான். நன்னிலம் தாலூக்கா திருமீயச்சூர் சிவாலயக் கல்வெட்டில் உடையார் காலிங்கராயர், குலசேகர காலிங்கராயர்' என்று இருவர் குறிப்பிடப்பெறுகின்றனர். பாண்டிய நாட்டில் திருப்பரங்குன்றம் உமையாண்டான் கோயிலில் உள்ள சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் கல்வெட்டினால் ஓர் அலுவலர் பெயர் 'காலிங்கராஜன்' என்றிருப்பதை அறிகின்றோம்.[1]

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மூன்றாம் பிரகாரம் வடக்குச் சுவரில் உள்ள குலசேகர தேவனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் நெட்டூருடையான் திருவிருந்தான் காலிங்கராயன்' என்ற அரசியல் தலைவர் குறிக்கப்பெற்றுள்ளார். மிழலைக்கூறு நடுவிற்கூறு பராந்தக நல்லூர் ஆன கட்டிக்குறிச்சியிலும் 'காலிங்கராயர்' என்ற பெயரைக் காணுகின்றோம். மதுரைச் சுந்தரேசவரர் கோயிலுக்குத் திருவிழா நடத்த நிவந்தம் விட்ட பலருள் 'முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் கரிய மாணிக்காழ்வான் திருவுடை நாயகரான வீரபாண்டியக் காலிங்கராயர்' என்பவர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றார்.[1]

ஒய்சளர் காலத்தில் கொங்கு நாட்டுக் குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஒய்சள நாட்டு மன்னன் வீரவல்லாள தேவன் கல்வெட்டில் உடையாண்டான் அழகப்பெருமாள் பிள்ளையாண்டானான காலிங்கராயன் குறிக்கப் பெறுகின்றான். விசயநகர ஆட்சியில் திருவரங்குளம் அரிதீர்த்தேசுவரர் கோயிலில் உள்ள வீர அச்சுதராயர் கல்வெட்டில் (கி. பி. 1531) செவந்தி காலிங்கராயன்' என்பவரும் பிரான்மலை மங்கை நாதேசுவரர் கோயிலில் உள்ள கிருட்டிண தேவராயன் காலத்துக் கல்வெட்டில் ' அறந்தாங்கிக் கணக்கு அடியார்க்கு நல்லான் கற்பூரக் காலிங்கராயன்' என்பவரும் அரசியல் அதிகாரிகளாகக் குறிக்கப் பெறுகின்றனர்.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள 'சகல லோக சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர்' காலத்துக் கல்வெட்டில் “ எயில் கோட்டத்து ஆர்ப்பாக்கக் கிழான் பெருங்கருணையாளன் திருவேங்கடமுடையான் காலிங்கராயன்' என்ற அரசியல் அதிகாரி சிறப்பிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காலிங்கராயன் என்ற பெயர் வழக்கிலிருந்ததை நாம் அறிகின்றோம். பாண்டியர்கள் தாங்கள் சீர் திகழ வீற்றிருந்து செங்கோலோச்சிய அரண்மனைக்கும் அமர்ந்த இருக்கைக்கும் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியிருந்தனர். 'கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது 292 ஆம் நாள் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி சோழ மண்டலத்துப் பாண்டிய குலபதி வளநாட்டுக் கண்டியூர் கோயில் பள்ளியறைக் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளி யிருக்க' எனவரும் இத்தொடரால் சோழ நாட்டை வென்ற பாண்டியன் கண்டியூரில் இருந்த தன்னுடைய அரண்மனை யில் ஒருபகுதிக்குக் காலிங்கராயன் என்று பெயர் வைத்த சிறப்பை அறிகின்றோம்.[1]

'மதுரைக் கோயில் பள்ளியறையுள்ளாலை பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருந்து' எனவரும் குலசேகர பாண்டியன் கல்வெட்டுத் தொடரால் மதுரை அரண்மனை யிலும் ஒருபகுதி இச்சிறப்புப் பெயர் கொண்டு விளங்கியதை அறிகின்றோம். சீவல்லபதேவர் காலத்திலும் “மாடக்குளக்கீழ் மதுரைக் கோயில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயன்' என்று குறிக்கப்பட்டுள்ளது.[1]

அறந்தாங்கித் தொண்டைமான்கள் உயர் அலுவலர்களாகப் பல காலிங்கராயர் பட்டம் பெற்றவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கலியுகமெய்யன் காலிங்கராயர், கற்பூரக் காலிங்கராயர், சிற்றம்பலமுடையான் காலிங்கராயர் , திருச்சாற்றன் காலிங்கராயர், திருவம்பலமுடையான் காலிங்கராயர், நிரம்பவழகியான்காலிங்கராயர் என்போராவர். இவர்களில் சிலர் நாடுமதித்த காலிங்கராயர் என்ற பெரும் சிறப்பினைப் பெற்றுள்ளனர்.[1]

திருச்சி மாவட்டம் காவேரிப்பாளையம் கல்வெட்டால் ஒரு நிலத்தின் பெயர் 'காலிங்க ராயன் கொல்லை' என்று அறிகின்றோம். காலிங்கராய நடனமாது காளையார் கோயில் காளீசுவரர் கோயிலில் விழாக் காலத்தில் நடனமாட வந்தாள் ஒரு நங்கை. அவருக்குக் கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம் மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியதேவன் தன் 40 ஆம் ஆட்சியாண்டில் உரிமைகள் சிலவற்றை உவந்தளித்தான். அப்பெண்ணின் பெயர் 'நக்கன் செய்யாளான காலிங்கராயத் தலைக்கோலி' என இன்றும் நின்று நிலவுகிறது.[1]

காலிங்கராயனுக்குப் பின் வந்த சாத்தந்தை குலத்தினர் பலரும் காலிங்கராயக் கவுண்டர் என்று பிற்காலம் வரை பெயர் வைத்துக் கொண்டதைக் கொங்குக் காணியான பட்டயம், மதுக்கரைப் பட்டயம், அகிலாண்ட தீட்சிதர் செப்பேடு ஆகியவற்றால் அறிகின்றோம்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 காலிங்கராயன் கால்வாய். 1987. pp. 27].
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிங்கராயன்&oldid=4122077" இலிருந்து மீள்விக்கப்பட்டது