சிறப்பு ஒலிபரப்புச் சேவை

சிறப்பு ஒலிபரப்புச் சேவை (Special Broadcasting Service, SBS, எஸ்பிஎஸ்) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் இயங்கும் அரசு-சார்பு பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவை ஆகும். இந்நிறுவனத்தின் நோக்கம் "ஆஸ்திரேலியாவின் பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதும், அதன் மூலம் பன்-மொழி மற்றும் பல்கலாச்சார வானொலி, தொலைக்காட்சி சேவைகளை வழங்குவதும்" ஆகும்[1].

வரலாறு தொகு

1975 ஆம் ஆண்டில் சிறுபான்மையின மக்களுக்காக சிட்னியிலும் மெல்பேர்ணிலும் இரண்டு சமூக உள்ளூர் வானொலி நிலையங்கள் நிறுவப்பட்டன. இவை எட்டு மொழிகளில் தமது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை நடத்தி வந்தன. இவற்றின் சேவைகளை ஒருமுகப்படுத்தும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் சிறப்பு ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இவ்விரண்டு வானொலிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது[2].

முதன் முதலில் மட்டுப்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவை ஏப்ரல் 1979 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் சிட்னியிலும் மெல்பேர்ணிலும் ஒளிபரப்பப்பட்டன. முழு நேர சேவைகள் 1980 அக்டோபர் 24 இல் ஐக்கிய நாடுகள் நாள் அன்று ஆரம்பிக்கப்பட்டன.

1983 அக்டோபர் 16 இல் இதன் சேவைகள் கான்பரா நகருக்கும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் பிறிஸ்பேன், அடிலெயிட் போன்ற நகரங்களுக்கும் தமது சேவைகளை வழங்க ஆரம்பித்தது.

ஆங்கிலம், சீனம், அரபு உட்பட உலக மொழிகள் பலவற்றில் தனது ஒலி/ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகிறது. எஸ்பிஎஸ் வானொலி மொத்தம் 68 மொழிகளில் அனைத்து ஆஸ்திரேலிய மாநிலங்களிலும் வானொலி ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது[3].

 
மெல்பேர்ண் நகரில் எஸ்பிஎஸ் வானொலி நிலையம்

தமிழ்ச் சேவை தொகு

எஸ்பிஎஸ் வானொலியே ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலிச் சேவையாகும். இவ்வொலிபரப்பு 1978 இல் தொடங்கப்பட்டது. கிழமைக்கு ஒரு மணி நேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11:00 முதல் 12:00 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. 2013 ஏப்ரல் 29 முதல் கிழமைக்கு நான்கு நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு நாட்களில்) இரவு 08:00 மணி முதல் 09:00 மணி வரை ஒலிபரப்பப்படுகின்றன. இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் உள்ளூர் செய்திகள், நடப்பு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. றைசல் என அழைக்கப்படும் ரேமண்ட் செல்வராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறார்[4]. இணையம் மூலமாகவும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்[5].

மேற்கோள்கள் தொகு

  1. SBS: Frequently Asked Questions
  2. SBS: வரலாறு
  3. About SBS Radio
  4. ரேமண்ட் செல்வராசா
  5. "SBS தமிழ்". Archived from the original on 2009-01-05. பார்க்கப்பட்ட நாள் 2009-03-13.

வெளி இணைப்புகள் தொகு