சிறில் பொன்னம்பெரும

கலாநிதி சிறில் பொன்னம்பெரும (Dr. Cyril Ponnamperuma, சிங்களம்: සිරිල් ඇන්ඩෘ පොන්නම්පෙරුම, அக்டோபர் 16, 1923 – டிசம்பர் 20, 1994) இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும், வேதியியலாளரும், பேராசிரியரும் ஆவார்.

சிரில் பொன்னம்பெருமா
நிலவின் மாதிரிகளை ஆராய்கிறார் பொன்னம்பெருமா
பிறப்புஅக்டோபர் 16, 1923
காலி, இலங்கை
இறப்பு20 திசம்பர் 1994(1994-12-20) (அகவை 71)
மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்இலங்கை
துறைவேதியியல் கூர்ப்பு
ஆய்வு நெறியாளர்மெல்வின் கால்வின்
தாக்கம் 
செலுத்தியோர்
கியீர்கி கிளாதிசெவ்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

சிறில் பொன்னம்பெரும தென்னிலங்கையின் தலைநகரான காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1] இவரது குடும்பத்தவர்கள் பலர் அக்காலத்தில் இலங்கையின் கல்வித் துறையில் முன்னணியில் திகழ்ந்துள்ளனர். தனது ஆரம்பக் கல்வியை காலி புனித அலோசியஸ் கல்லூரியில் பெற்றார். பின்னர் கொழும்பு புனித யோசப் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். உயர்கல்வி பெறுவதற்காக இந்தியாவிற்குச் சென்ற பொன்னம்பெரும 1948ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து மெய்யியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[1]

பின்பு இங்கிலாந்துக்குச் சென்ற அவர் இலண்டன் பல்கலைக்கழகம், பெர்க்பெக் கல்லூரியில் கற்று 1959ல் வேதியியல் இளமாணி (B.Sc.) பட்டத்தைப் பெற்றார். அதே காலப்பகுதியில் புகழ்பெற்ற அறிவியலாளரும், உயிர்களின் தோற்றம் பற்றிய முன்னணி ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவருமான பேராசிரியர் ஜே. டீ. பேர்னல் என்பவருடன் நெருங்கிய தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.[1]

அமெரிக்காவில் உயர்கல்வி

தொகு

லண்டனில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்ற சிறில் பொன்னம்பெரும பேர்கிலி நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார். நோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞரான பேராசிரியர் மெல்வின் கால்வின் என்பவரே அப்போது அவரது மேற்பார்வையாளராக இருந்தார்.[1]

நாசா நிறுவனத்தில்

தொகு

1963ல் நாசா நிறுவனத்தின் புறஉயிரியல் பிரிவில் பணிபுரியத் தொடங்கிய பொன்னம்பெரும பின் அதன் இரசாயனக் கூர்ப்புத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் உயிர்கள் எப்படித் தோன்றின? என்ற விடயம் பற்றியதாகவே இருந்தன.

அடினோசீன் மூபொசுபேற்று சேர்வை

தொகு

உயிரினங்களில் காணப்படும் அடினோசீன் மூபொசுபேற்று (ATP) என்ற சேர்வையை முதன்முறையாகச் செயற்கையாக உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். 1963ல் நாசா ஆய்வுகூடத்தில் சேர்வைகள் பலவற்றைக் கொண்ட கரைசல் ஒன்றினைப் புறஊதாக் கதிர்களுக்குத் திறந்துவைப்பதன் மூலம் பெருமளவு அடினோசீன் மூபொசுபேற்று (ATP) ஐ அவர் உருவாக்கிக் காட்டினார்.

சந்திரன் மண்ணைப் பகுப்பாய்வு

தொகு

நாஸா நிறுவனத்தின் அப்பலோ சந்திரப் பிரயாண நிகழ்ச்சித் திட்டம் அமுல்படுத்தப்பட்டபோது சந்திரனிலிருந்து கொண்டு வரப்படும் மண்ணைப் பகுப்பாய்வு செய்யும் பிரதம ஆய்வாளராக பொன்னம்பெரும நியமனம் பெற்றார். உலக அரங்கில் பிரபல்யம் அடைவதற்கு இதுவே மூல காரணமாக அமைந்தது. அக்காலப்பகுதியில் டைம்ஸ் (Time), நியுஸ் வீக் (Newsweek) போன்ற பிரபல சஞ்சிகைகள் அவரது உருவப்படத்தைத் தம் முன் அட்டைகளில் பிரசுரித்தன. 1967ல் இந்திய அணுசக்திக் கமிசன் அவருக்குப் பேராசிரியர் பதவியொன்றை வழங்க முன்வந்தது.

வகித்த பிற பதவிகள்

தொகு

பிற விண்வெளி ஆய்வுத்திட்டங்களில்

தொகு

அதன் பின் நாஸா செயற்படுத்திய வைக்கிங், வயஜர் {Viking, Voyager} ஆகிய விண்வெளி ஆய்வுத்திட்டங்களிலும் பொன்னம்பெரும ஈடுபட்டிருந்தார். நாசா நிறுவனத்தின் விண்வெளியியல் ஆலோசனைச் சபையிலும் உயிர் விஞ்ஞான (Life Sciences) ஆலோசனைச் சபையிலும் அவர் உறுப்பினராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ திட்டப் பணிப்பாளர்

தொகு

1970 - 71 காலப்பகுதியில் இலங்கையில் அடிப்படை ஆய்வுகளை விருத்தி செய்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டப் பணிப்பாளராக அவரை யுனெஸ்கோ நிறுவனம் நியமித்தது.

இரசாயனக் கூர்ப்பு ஆய்வுகூடத்தின் பணிப்பாளர்

தொகு

1971 முதல் அவர் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பேராசிரியராகவும் அதன் இரசாயனக் கூர்ப்பு ஆய்வுகூடத்தின் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

ஜனாதிபதியின் விஞ்ஞானத்துறை ஆலோசகர்

தொகு

1984ல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் சிறில் பொன்னம்பெரும அவர்களை ஜனாதிபதியின் விஞ்ஞானத்துறை ஆலோசகராக நியமித்தார்.

ஆர்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் பணிப்பாளர்

தொகு

மொரட்டுவையிலுள்ள நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் அக்காலத்தில் அவர் செயற்பட்டார்.

அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனப் பணிப்பாளர்

தொகு

அதே காலப்பகுதியில் இலங்கையின் அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (I.F.S.) பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றினார்.

3ம் உலக விஞ்ஞான அகடெமி உபதலைவர்

தொகு

இத்தாலியில் அமைந்திருந்த 3ம் உலக விஞ்ஞான அகடெமி (Third World Academy Of Science) என்ற அமைப்பின் உபதலைவராக 1989ம் ஆண்டில் தெரிவானார். இந்நிறுவனம் வளர்முக நாடுகளில் விஞ்ஞான அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாக செயற்பட்டு வந்தது.

3ம் உலக பவுண்டேசன் தலைவர்

தொகு

அத்தோடு வட அமெரிக்காவில் மூன்றாம் உலக நாடுகளில் அபிவிருத்தி நிலையைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட. 3ம் உலக பவுண்டேசன் என்ற அமைப்பின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

சிறப்பு விரிவுரையாளர்

தொகு

அப்போதைய சோவியத் நாட்டின் விஞ்ஞான அகடெமியிலும் சீன விஞ்ஞான அகடெமியிலும் சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

தொகு
  • இலங்கையின் 1990ம் ஆண்டு தேசிய தின வைபவத்தின் போது அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ இவரின் சேவைகளைக் கருத்திற்கொண்டு வித்யா ஜோதி என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார். இலங்கையில் இலங்கையில் அறிவியல் துறையில் ஈடுபடுவோருக்கு இலங்கை அரசால் வழங்கப்படும் அதியுயர் விருது இதுவாகும்.
  • மேரிலாந்து பல்கலைக்கழகம் (University of Maryland) இவரின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் அதியுயர் விருதான சர்வதேச சேவை விருதினை 1991ம் ஆண்டில் வழங்கியது.
  • மேலும் பல சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் அவருக்குப் பல தங்கப் பதக்கங்களையும், விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளன.

ஆக்கங்கள்

தொகு

பேராசிரியர் சிறில் பொன்னம்பெரும 29 ஆய்வு மற்றும் சரிதை நூல்களையும், 400க்கும் மேற்பட்ட ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் நூல்கள் சர்வதேச ரீதியில் பெரும் கீர்த்திக்குட்பட்டவை. இவரின் கட்டுரைகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

இறுதிக்காலம்:

தொகு

பேராசிரியர் பொன்னம்பெரும தனது பிற்கால வாழ்வின் பெரும் பகுதியை மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடங்களிலேயே கழித்தார். 1994ல் மேரிலாந்து பல்கலைக்கழகத்திலுள்ள இரசாயனக் கூர்ப்பு ஆய்வுகூடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக டிசம்பர் 20 1994ல் இவர் இறந்தார். அவரது பூதவுடல் 1995 ஜனவரி 9ம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு அரச மரியாதையோடு இறுதிக் கிரியைகள் நிறைவேற்றப்பட்டன.

வெளி இணைப்புகள்

தொகு
  • "Special issue dedicated to the memory of Cyril Ponnamperuma". Origins of life and evolution of the biosphere: the journal of the International Society for the Study of the Origin of Life 28 (2): 105–225. ஏப்ரல் 1998. 
  • Romero, A; Navarro-González R (ஏப்ரல் 1998). "Cyril Ponnamperuma and the origin of life: a bibliography". Origins of life and evolution of the biosphere : the journal of the International Society for the Study of the Origin of Life 28 (2): 109–21. 
  • Navarro-González, R (ஏப்ரல் 1998). "In memoriam Cyril Andrew Ponnamperuma 1923-1994". Origins of life and evolution of the biosphere : the journal of the International Society for the Study of the Origin of Life 28 (2): 105–8. 
  1. 1.0 1.1 1.2 1.3 Walter Sullivan (24-12-1994). "Cyril Ponnamperuma, Scholar Of Life's Origins, Is Dead at 71". நியூயோர்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 7-01-2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறில்_பொன்னம்பெரும&oldid=2917266" இலிருந்து மீள்விக்கப்பட்டது