சிற்றிதழ் இயக்கம்

சிற்றிதழ் இயக்கம் (Little magazine movement) என்பது 1950கள் மற்றும் 1960 களில் வங்காளி, தமிழ், மராத்தி, இந்தி, மலையாளம் ,குஜராத்தி போன்ற பல இந்திய மொழிகளிலிம், மேற்கு நாடுகளில், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றியது.

தமிழ் சிற்றிதழ் இயக்கம்

தொகு

1900 முதல் 1940 வரை தமிழ் இதழ்கள்

தொகு

தமிழ் மொழியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், இலக்கியத்தில் புதுமையும் வளமும் சேர்க்கவும் விரும்பும் படைப்பாளிகள், தங்கள் சோதனை முயற்சிகளை எல்லாம் பிரசுரிப்பதற்குத் தங்களுக்கென்று தனிப் பத்திரிகை தேவை என்று கருதுவது இயல்பாக இருந்து வருகிறது. 1892 இல் சி. வி. சுவாமிநாதையரால் துவக்கப்பட்ட ‘விவேக சிந்தாமணி‘ என்றொரு பத்திரிகையில்[1] பி. ஆர். ராஜமய்யர் தமிழின் முதல் தொடர்கதையாக,[2] தமிழின் இரண்டாவது புதினமான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதினார். அந்த இதழ் 1915 வரை வெளிவந்திதாக தெரிகிறது.[3] 1900களின் துவக்கத்தில் சுப்பிரமணிய பாரதி இந்தியா, சக்கிரவர்த்தினி போன்ற பத்திரிகைகளைகளுக்கு ஆசிரியராக இருந்து நடத்தினார். அ. மாதவையர் ‘பஞ்சாமிர்தம்‘ என்ற பத்திரிகையை நடத்தினார். அது 1924இல் பிரசுரமானதாக தெரிகிறது. வ. வே. சு. ஐயர் 1924இல் பால பாரதி என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். 1930களின் ஆரம்ப ஆண்டுகளில் சுதந்திரச்சங்கு இதழ் துவக்கப்பட்டது. அதன் ஆசிரியராக சங்கு சுப்பிரமணியம் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்திய நாட்டின் பல மொழிகளிலும் மறுமலர்ச்சி வேகம் பெற்றிருந்தது. அதற்காகப் பல பத்திரிகைகள் பாடுபட்டன. தமிழிலும், ‘சுதந்திரச் சங்கு‘வுடன் ‘காந்தி‘, ‘ஜெயபாரதி‘ போன்ற சிறு பத்திரிகைகள், காலணா விலையில் மக்களைத் தொட முயன்று வந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் ‘மணிக்கொடி‘ வார இதழாக தோன்றியது. 1933 செப்டம்பர் 17ஆம் நாள் பிறந்த இந்த ஏடு அரசியல் பத்திரிகையாகத்தான் முதலில் செயலாற்றியது. ஆரம்பத்தில் கே. சினிவாசன், வ. ரா. டி. எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது இயங்கியது. கால ஓட்டத்தில் ‘மணிக்கொடி‘ ஏடு சிறுகதைகளுக்கு இடம்தர முன்வந்தது. பின்னர், பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் ‘மணிக்கொடி‘ நிற்க நேரிட்டது. அதன் பிறகு 1935 மார்ச் முதல்- பி. எஸ். ராமைய்யாவின் பெரும் முயற்சியால், மணிக்கொடி கதைப் பத்திரிகையாக வெளிவந்தது. சாதனைகள் புரிந்த அதன் வளர்ச்சி தனி வரலாறு படைத்தது.[4]

1940 முதல்

தொகு

தேசிய விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் இவற்றைச் சார்ந்து 1930 களில் மொழி மறுமலர்ச்சி வேகமும் ஏற்பட்ட நிலையில், 1940 களின் பிற்பகுதியிலிருந்து, தமிழ் எழுத்தாளர்களிடையிலும் தமிழ்ப் பத்திரிகை உலகிலும் வேறு இரண்டு நோக்குகளும் போக்குகளும் வளரத் தொடங்கின.

ஒன்று 'திராவிட இயக்க' வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சமய ஒழிப்பு: மூடநம்பிக்கைகள், வறுமை, விபசாரம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் ஒழிப்பு: இந்தி எதிர்ப்பு: தமிழ்-தமிழர் இன உயர்வு, சமூக சீர்திருத்தம் முதலியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட ‘திராவிட இயக்க' மனோபாவம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. இத்தகைய இன உணர்வுடன் தமிழில் பத்திரிகைகள் தோன்றியன.

இரண்டாவது, முற்போக்கு இலக்கிய நோக்கு இது முதலாளித்துவ எதிர்ப்பு, முதலாளி வர்க்க ஒழிப்பு, பாட்டாளி வர்க்க உயர்வு, பொருளாதார சமத்துவம் முதலியவற்றை லட்சியமாகக் கொண்டது. இந்த நோக்கை கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைகள் 'ஜனசக்தி' ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. 'ஜனயுகம்', 'புதுமை இலக்கியம்' போன்ற சில பத்திரிகைகள் தோன்றி, சிறிது காலம் வெளிவந்து விட்டு மறைந்து போயின. முற்போக்கு இலக்கிய மனோபாவம் தமிழ்நாட்டில் சிறிது சிறிதாகப் பரவி வந்தது. என்றாலும், முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்று எதுவும் இல்லாமலிருந்தது. அதனால், வ. விஜயபாஸ்கரன் அப்படி ஒரு இலக்கியப் பத்திரிகையாகயையாக சரஸ்தியைத் துவக்கினார். அதன்படி 1955 மே மாதம் ‘சரஸ்வதி' யின் முதல் இதழ் வந்தது.[5] அதேபோல முற்போக்கு இதழாக சாந்தி 1954 திசம்பரில் தொ. மு. சி. ரகுநாதனால் துவக்கப்பட்டது.[6]

1959 இல் விமர்சனத்துக்காகவே சி. சு. செல்லப்பாவால் எழுத்து இதழ் துவக்கப்பட்டது. எழுத்து புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது.[7] இதுவே தமிழின் முதல் சிற்றிதழ் என்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.[8]

மராத்தி சிற்றிதழ் இயக்கம்

தொகு

1955 முதல் 1975 வரையிலான சிற்றிதழ்கள்

தொகு

நாற்பதுகளின் நடுப்பகுதியில் பி. எஸ். மர்தேகரின் கவிதை மூலம் புதிய அலையாக நவீனத்துவக் கவிதை மராத்தி இலக்கிய உலகில் வெடித்தது. அதன்பிறகு மராத்தி இலக்கியத்தின் 1955-1975 காலகட்டத்தில் சிற்றிதழ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தியது. இது நவீனத்துவத்தையும் தலித் இயக்கத்தையும் உருவாக்கியது. 1950களின் நடுப்பகுதியில், திலீப் சித்ரே, அருண் கொலாட்கர் மற்றும் அவர்களது நண்பர்கள் சைக்ளோஸ்டைல் ஷப்தாவைத் தொடங்கினர். அசோ, வச்சா, லுரு, பாருட், ருச்சா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இடைக்கால இதழ்கள் முதல் ஒப்பீட்டளவில் நீடித்த இதழ்கள் வரை சிற்றிதழ் இயக்கம் 2017 இல் காட்டுத்தீ போல் பரவத் தொடங்கியது. முதலாளித்துவ, உயர்சாதி, மரபுவழி என்று அவர்கள் பார்த்த மராத்தி இலக்கிய அமைப்பில் ஏற்பட்ட அதிருப்தியால் புதிய தலைமுறை எழுத்தாளர்களை இந்த இயக்கம் உருவாக்கியது. அசோக் ஷஹானே 1960 களில் மராத்தியில் சிற்றிதழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்தார். திலீப் சித்ரே, அருண் கொலாட்கர், நம்தேயோ தசல், துளசி பராப், பாலச்சந்திர நெமதே, மனோகர் ஓக், பாவ் பத்யே, விலாஸ் சாரங். வசந்த் அபாஜி தஹாகே போன்ற எழுத்தாளர்கள் இந்த இயக்கத்தின் மூலம் முக்கியத்துவம் பெற்றனர். அவர்களின் எழுத்துகள் இணக்கமற்றதாகவும், ஜனரஞ்சகமற்ற தீவிர இலக்கியங்களாவும் இருந்தன. 1960 களின் சிற்றிதழ் இயக்கம் 1970 களின் நடுப்பகுதியில் படிப்படியாக உற்சாகம் இழந்தது. [9]

1990கள் மற்றும் 2000களின் சிற்றிதழ்கள்

தொகு

இந்தியாவில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய சமூகத்தில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் சகாப்தத்தை உருவாக்கியது. தொலைத்தொடர்பு துறையின் ஏற்றம், கம்பிவடம், செயற்கைக்கோள் தொலைக்காட்சி, எண்ணியல் புரட்சி ஆகியவை இந்த பொருளாதார சீர்திருத்தங்களுடன் இணைந்து வந்து இந்திய சமூகத்தையும், பண்பாட்டையும் ஆழமாக பாதித்தன. இந்தியாவின் பொருளாதார தலைநகராக இருக்கும் மும்பை, இந்த வியத்தகு மாற்றங்களின் பெரும் சக்தியை உணர்ந்தது. இக்காலத்தில் சிற்றிதழ்கள் மீண்டும் வெளிவந்தன. அபிதானந்தர், சப்தவேத்க், சௌஷ்தவ் மற்றும் பின்னர் ஐவாஜி, கேல், அனாக்ரத் மற்றும் நவக்ஷர் தர்ஷன் ஆகியோர் களத்தில் தோன்றினர். 1990களில் தோன்றிய இந்த சிற்றிதழ்களில் இருந்து தோன்றிய மன்யா ஜோஷி, மங்கேஷ் நாராயணராவ் காலே, ஹேமந்த் திவேட், சஞ்சீவ் கந்தேகர், சலீல் வாக், சச்சின் கேட்கர் போன்ற கவிஞர்கள் சமூக, கலாச்சார மாற்றத்திற்கு சாட்சியாக, 1960 களின் இயக்கத்திலிருந்து தோன்றிய தலைமுறையிலிருந்து வேறுபட்ட உணர்வுடன் எழுதுகிறார்கள். [10]

வங்க சிற்றிதழ் இயக்கம்

தொகு

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி

தொகு

வங்க இலக்கியத்தில், இது 1923 இல் நிறுவப்பட்ட நவீனத்துவ இயக்க இதழான கல்லோல் மூலம் தொடங்கியது. இக்குழுவில் மிகவும் பிரபலமானவர்களாக காஜி நஸ்ருல் இஸ்லாம் (1899-1976), மொஹித்லால் மஜூம்டர் (1888-1952), அச்சிந்த்யகுமார் சென்குப்தா (1903-1976), சத்யேந்திரநாத் தத்தா (1882-1922), பிரேமேந்திர மித்ரா (1904-1988) ஆகியோராவர். புத்ததேவ் போசுவின் கபிதா மற்றும் சுதீந்திரநாத் தத்தாவின் பரிச்சாய் போன்ற சில சிற்றிதழ் இயக்கத்தின் மூலம் 1930 களிலிருந்து வங்காளக் கவிதை நவீனத்துவத்தின் பிரகாசமான வெளிச்சத்திற்கு வந்தது.

தப்புத்தாப்

தொகு

இந்த இதழ் மேற்கு வங்க மாநிலத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவலாக பரப்பப்படும் இலக்கியம், கல்வி, கலாச்சாரம், சமூக செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக (1978) வெளியிடப்பட்டு, இப்போதும் பதிப்பாசிரியர் அமல் போந்தியோபாதயாவால் வெளியிடப்படும் இந்த இதழ், பதிப்பு உலகில் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு. தற்போது நவீன உலகிற்கு ஏற்றவாறு இந்த சிற்றிதழை மின்னிதழாகவும் கொண்டு வந்துள்ளனர்.

கிருட்டிபாஸ்

தொகு

கிருட்டிபாஸ் முதன்முதலில் 1953 இல் கொல்கத்தாவில் தோன்றியது. இந்திய விடுதலைக்குப் பிந்தைய தசாப்தங்களில் கொல்கத்தா இலக்கியத் தளங்களில் இது மிகவும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. மேலும் இளம், பரீட்சார்த்த கவிஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்கியது. அவர்களில் பலர் நவீன வங்க கவிதையின் ஒளியாக மாறினர். 1953 சூலையில் துவக்க இதழின் ஆசிரியர்களாக சுனில் கங்கோபாத்யாயா, ஆனந்த பாக்சி, தீபக் மஜூம்தார் ஆகியோர் இருந்தனர். பின்னர் கங்கோபாத்யாய் மட்டும் ஒற்றை ஆசிரியராக இருந்தார். உண்மையில் அவரது பெயர்தான் இதழுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையதாக இருந்தது. சக்தி சட்டோபாத்யாய், சரத் குமார் முகோபாத்யாய், சமரேந்திர சென்குப்தா ஆகியோர் ஒரு கட்டத்தில் இதழின் ஆசிரியர்களாக இருந்தனர். பனிஷ்வர்நாத் ரேணு இதழின் வெளியீட்டாளராகவும் சமீர் ராய்ச்சௌத்ரி ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1961-65 காலகட்டத்தில் பல கவிஞர்கள் இதழிலிருந்து வெளியேறி பசித்த இயக்கத்தில் இணைந்தனர்.

பசித்த தலைமுறை மற்றும் ஸ்தாபனத்திற்கு எதிரான இயக்கங்கள்

தொகு

பசித்த தலைமுறை (Bengali: হাংরি জেনারেশান) இயக்கமானது கலாச்சார ஸ்தாபனத்தை புயலாக தாக்கியபோது. 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் சிற்றிதழ்க்கள் வெடித்து கிளம்பின. உண்மையில் இது வெளியீட்டு வகைகளை மட்டுமல்ல, பத்திரிகைகளின் பெயரிடல் முறையையும் மாற்றியது. இதில் பினோய் மஜும்தார், சைலேஸ்வர் கோஷ், மலாய் ராய் சௌத்ரி, சுபிமல் பசக், திரிதிப் மித்ரா, சமீர் ராய்ச்சௌத்ரி, ஃபல்குனி ராய், சுபோ அச்சார்ஜோ, பிரதீப் சௌத்ரி, சுபாஸ் கோஷ், பாசுதேப் தாஸ்குப்தா, சந்தீபன் சட்டோபத்யாத், உத்பால்குமார் பாசு, ரவீந்திர குஹா, அருணேஷ் கோஷ், ராஜா சர்க்கார், அலோக் கோஸ்வாமி, செலிம் முஸ்தபா, அருப் தத்தா, ரசராஜ் நாத், ரபியுல் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் இருந்தனர்.

ஸ்தாபனத்திற்கு எதிராக குரல் எழுப்பிய வேறு சில வங்காள எழுத்தாளர்கள் இருந்தனர். என்றாலும் அவர்கள் பசித்த தலைமுறை இயக்கத்தில் சேரவில்லை. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் சுபிமல் மிஸ்ரா . கமல் குமார் மஜும்தார், அமியாபூஷன் மஜும்தார் மற்றும் உதயன் கோஷ் ஆகியோர் சிறு பத்திரிகைகளில் பெரும்பாலும் எழுதிய பிற பரீட்சார்த்த எழுத்தாளர்களாவர்.

'கௌரப்'

தொகு

1970 களில் வங்க சிற்றிதழ் இயக்கத்தில் சில பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன, முக்கியமாக கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் பழமையான இலக்கிய மற்றும் கலாச்சார இதழான கௌராப் இதழைச் சுற்றி ஏற்பட்டது. கௌராபின் முக்கிய ஆதரவு நபர்கள்: சுதேஷ் சென், கமல் சக்ரவர்த்தி (அசல் ஆசிரியர்), பேரின் கோசல், தேபஜோதி தத்தா, பிரணாப்குமார் சட்டோபாத்யாய், சங்கர் லஹிரி, ஷங்கர் சக்ரவர்த்தி, ஆர்யனில் முகோபாத்யாய் (தற்போதைய ஆசிரியர்). சர்வதேச சூழ்நிலையில் வங்காள கவிதைகளானது சுப்ரோ பந்தோபாத்யாய் (தற்போதைய உதவி ஆசிரியர்) போன்ற கௌரப் கவிஞர்களால் முனனெடுக்கப்பட்டுள்ளது. [11]

நடுன் கபிதா (புதிய கவிதை)

தொகு

1980 களின் நடுப்பகுதியில் இருந்து வங்காள இலக்கியம் புதிய கவிதை என்று அழைக்கப்படும் வங்காள கவிதையின் ஒரு புதிய வகையை சுவைத்தது. 1990 களின் முற்பகுதியில் இருந்து கொல்கத்தாவை தளமாகக் கொண்ட கவிதை இதழான கபிதா கேம்பஸின் உத்வேகத்துடன், புதிய கவிதை வங்காளத்தின் இளம் சமகால கவிஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டில், இந்த வகையைச் சேர்ந்த சில கவிஞர்கள் இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்கள் மற்றும் கவிதைகளைக் கொண்ட நடுன் கபிதா என்ற இதழைத் தொடங்கினர். 1990களின் மத்தியில் இந்த இயக்கத்தில் இணைந்த கவிஞர்கள்: பேரின் கோசல், ரஞ்சன் மொய்த்ரோ, ஸ்வபன் ராய், திமான் சக்ரவர்த்தி, அலோக் பிஸ்வாஸ், ப்ரோனோப் பால், சௌமித்ரா சென்குப்தா, ராஜர்ஷி சட்டோபாத்யாய், அதனு பந்தோபாத்யாய், ராஜதேந்திர முகோபாத்யாய், பிரதீப் சக்ரபோர் போன்றோர் ஆவர்.

நியூ ஏஜ் (புதிய நூற்றாண்டு)

தொகு

மேற்கு வங்கத்தில் இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தம் (2001-10) ஒரு நியூ ஏஜ் லிட்டில் இதழ் இயக்கத்தின் காலமாக கருதப்படுகிறது. அரசியல் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை பல்வேறு வகையான சிற்றிதழ்கள் தோன்றின.

குறிப்புகள்

தொகு
  1. அக்டோபர் 22, exammaster.co.in
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - பி.ஆர். ராஜம் ஐயர்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  3. வீ.அரசு. "தமிழ் அச்சுப் பண்பாடு : நிறுவனமயமாதல் நோக்கி... (1860 - 1900)". keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  4. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 15–18. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
  5. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 55–58. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
  6. ச.தமிழ்ச்செல்வன். "தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு சாந்தி, தாமரை, செம்மலர் இதழ்களின் பங்களிப்பு". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  7. "சி.சு.செல்லப்பா சுமந்து சென்ற எழுத்து-கட்டுரை-எஸ்.ரா". www.naduweb.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  8. ம.நவீன் (2015-04-30). "'எழுத்து' இதழும் சிற்றிதழ் அரசியலும்". வல்லினம் (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  9. Chitre, Dilip, ed. An Anthology of Marathi Poetry 1945–65. Mumbai: Nirmala Sadananda Publications, 1967.
  10. Ketkar, Sachin, ed. Live Update: an anthology of recent Marathi poetry. Mumbai: Poetrywala Publications, 2004.
  11. https://www.youtube.com/watch?v=AqruZ-BTpA4
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றிதழ்_இயக்கம்&oldid=3677036" இலிருந்து மீள்விக்கப்பட்டது