சிவகங்கை மலை

கர்நாடகத்தில் உள்ள ஒரு மலை

சிவகங்கை மலை (Shivagange, கன்னடம்: ಶಿವಗಂಗೆ ಬೆಟ್ಟ) என்பது கர்நாடக மாநிலத்தின், பெங்களூர் ஊரக மாவட்டத்தின் தொப்பஸ்பேட் அருகில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையின் உச்சியானது 804.8 மீட்டர் அல்லது 2640.3 அடி உயரமாகும்.[1] இந்த மலையானது பெங்களூரில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும், தும்கூரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இந்த மலையானது சிவலிங்க வடிவில் உள்ளது. மேலும் இந்த மலையில் இருந்து வரும் ஊற்றானது உள்ளூர் மக்களால் "கங்கா" என அழைக்கப்படுகிறது. இவையே இந்த மலைக்கான பெயர் காரணமாக அமைந்துள்ளது. இது மேலும் தட்சிண காசி (தென் காசி) எனவும் அறியப்படுகிறது. இந்த மலையில் கங்காதரீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஹொன்னம்மாதேவி கோயில், ஒலக்கே தீர்த்தா (உலக்கை தீர்த்தம்), நந்தி சிலை, பட்டல கங்கே, மலையின் செங்குத்தான ஒரு பாறை முகட்டில் செதுக்கப்பட்டதற்காக சிறப்பாக அறியப்படும் பசவண்ணா என்னும் நந்தி சிலை, சாரதாம்பா கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. மேலும் இந்த மலையில் அகஸ்த்திய தீர்த்தம், கண்வ தீர்த்தம், கபில தீர்த்தம், பாதாள கங்கா போன்ற தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்ரீ ஹொன்னம்மாதேவி கோயில் ஒரு குகையில் உள்ளது. ஸ்ரீ கவி கங்காதீஸ்வரர் கோயிலும் ஒரு குகையில் உள்ளது. கவி என்பது குகையை குறிப்பிடும் சொல்லாகவும் கங்காதீஸ்வரர் என்பது தலையில் கங்கையை தாங்கிய சிவனை குறிக்கும் சொல்லாகும். ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் மகரசங்கராந்தி அன்று கங்காதீஸ்வரருக்கும் மற்றும் ஹொன்னம்மாதேவிக்கும் (பார்வதி) திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது. அச்சமயம் புனித கங்கை நீராக கருதப்படும் ஊற்றுநீர் மலை உச்சியில் இருந்து வரும். அந்த புனித நீரை திருமணச் சடங்குக்கு பயன்படுத்துவர்.

வரலாறு

தொகு

இந்தப் பகுதியானது போசள மன்னர்களின் ஆட்சியில் இருந்தபோது, போசள மன்னனான விட்டுணுவர்தனின் மனைவியும் அரசியுமான சாந்தலா தனக்கு ஆண் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் இந்த மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அவள் தற்கொலை செய்து கொண்ட இடமானது சாந்தலா வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது.[3] இந்த மலையானது 16ஆம் நூற்றாண்டில் சிவப்பநாயக்கர் காலத்தில் பலப்படுத்தப்பட்டது.[4] பெங்களூரை நிறுவியவரான கெம்பே கௌடாவின் காலத்தில் இந்த மலையில் உள்ள கோட்டை மேலும் பலப்பட்டு, இந்த கோட்டையில் தன் புதையலின் ஒரு பகுதியை வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி மாதத்தில் (தை) ஒரு மாதம் முழுக்க இங்கு கால்நடைச் சந்தை நடக்கிறது. அப்போது காளைகளை வாங்க விற்க பலர் கூடுவர். ஆண்டுக்கு இரு முறை இங்கு பக்தர்களால் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. சனவரியில் கங்காதீஸ்ரருக்கும், அக்டோபரில் ஹொன்னமா தேவிக்கும் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது.

கவி கங்காதீஸ்வரர் கோயில் குறித்து நிலவும் நம்பிக்கைகள்

தொகு

கவி கங்காதீசுவரர் கோயியில் ஒரு சுவாரசியமான அற்புதம் நிகழ்கிறது. சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யப்படும் நெய்யானது வெண்ணெயாக மாறிவிடுவதே அந்த அற்புதமாகும். இந்த நிகழ்வை பக்கர்கள் நேரில் காண இயலும். வெண்ணையாக மாறும் இந்த நெய்யானது மருத்துவ குணம் கொண்டது எனவும், பல நோய்களை குணமாக்கக் கூடியது என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயில் கருவறையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் பெங்களூரில் உள்ள கவி கங்காதேஸ்வரர் கோயில் கருவறைவரைக்கு செல்ல இரகசிய சுரங்கப்பாதை உள்ளது என்ற கூற்று உள்ளது.

குமுதவதி ஆறு

தொகு

சிவகங்கா மலையில் தோன்றும் குமுதவதி ஆறானது ஆர்க்காவதி ஆற்றின் துணை ஆறாகும். குமுதவதி ஆறானது பெங்களூர் ஊரக மாவட்டத்தின் நெலமங்கலா வட்டத்தின் பெரும்பகுதி கிராமங்கள் மற்றும் இராமநகர மாவட்டத்தின் மகடி வட்டத்தின் ஒரு பகுதியில் கிராமங்கள் வழியாக மொத்தம் 278 கிராமங்கள் வழியாக 460 கிமீ2 பரப்பளவில் பாய்கிறது. ஆறு பாயும் இப்பகுதிகளில் காடழிப்பு, மிகுதியான நிலத்தடி நீர் உறிஞ்சல், மண் அரிப்பு, ஆக்கிரமிப்பு, மிகுதியான யூகலிப்டஸ் மர வளர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் ஆற்றோரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாகுறை கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆற்றின் வளத்தைப் புதுப்பிக்க பல குழுக்கள் திட்டங்களை தீட்டி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.[5]

மலைஏற்றம்

தொகு

கர்நாடக மாநிலத்தில் இப்பகுதியானது பாறையேற்றத்துக்கு பிரபலமான இடமாக உள்ளது. மலை உச்சியை அடைய மலைப் பாறையில் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் படிக்கட்டுகள் அற்றும் உள்ளது. செங்குத்தான பாறையில் ஏற உள்ள குறுகலான படிக்கட்டுகளின் பக்கவாட்டுகளில் பாதுகாப்புக்கு இரும்புக் குழாய்களினால் கைப்பிடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வழியில் இளைப்பாற ஆங்காங்கே இடங்களும், அங்கே உணவுப் பெருட்களும், குடிபானங்கள் விற்கும் கடைகளும் உள்ளன. மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சிப் பகுதிக்குச் செல்ல 2.3 கி.மீ. தொலைவு உள்ள மலையேற்ற பாதையில் ஏறவேண்டும். இந்தமலைகளில் வாழும் உயிரினங்களில் குரங்குகள் முக்கிய விலங்கு ஆகும்.

பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்

தொகு

கர்நாடக தொல்லியல் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1962இன் கீழ் இந்த மலையில் உள்ள கோயிலானது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.

Shivagange

மேற்கோள்கள்

தொகு
  1. "Shivaganga, Tumkur District, Karnataka, India". charmingindia.com. Archived from the original on 15 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Shivagange பரணிடப்பட்டது 2013-11-06 at the வந்தவழி இயந்திரம் mustseeindia.com
  3. "Shivagange – A world of adventure, mystery and legends". Karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
  4. S.V. Charya, Upendra (2014). "Shivagange and its fort". Deccan Herald, Bangalore. http://www.deccanherald.com/content/129918/shivagange-its-fort.html. பார்த்த நாள்: 14 March 2014. 
  5. "Revive Kumudavathi". revivekumudvathi.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_மலை&oldid=3929945" இலிருந்து மீள்விக்கப்பட்டது