செவியறிவுறூஉ

செவியறிவுறூஉ என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று.

இலக்கியம் தொகு

இத் துறைப் பாடல்கள் புறநானூற்றில் 8 உள்ளன. இவை பாடாண் திணையின்பாற் பட்டவை.

  • கறந்த பால் புளித்தாலும், பகல் இருட்டாக மாறினாலும், நால்வேத நெறி உலகில் நிகழாமல் போனாலும், நீயும் நின் சுற்றமும், நூற்றுவர் இறந்த பாரதப் போரில் இருபால் வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கிய கொடை உள்ளம் மாறாமல் இருப்பீர்களாக.[1]
  • உலகமே மாறினாலும் நீ சொல் தவறாதே! உன்னை நாடி இரவலர் வரும்போது அவர்களின் குறிப்பறிந்து கொடு! [2]
  • அருளும் அன்பும் நீக்கியோர் நிரயம் கொள்வர். அவர்களோடு நீ சேராதே! தாய் தன் குழந்தையைப் பேணுவது போல நாட்டு மக்களைக் காப்பாயாக! [3]
  • வழுதி செவியில்
  1. துலாக்கோல் போல் (‘தெரிகோல் ஞமன்) நடுவுநிலைமையைக் கொள்க!
  2. வென்ற நன்கலம் பரிசிலர்க்கு வழங்குக!
  3. முனிவரும் முக்கண் செல்வரும் நகர் வலம் வரும்போது உன் வெண்கொற்றக் குடை பணியட்டும்!
  4. நான்மறை முனிவர் கையேந்தும்போது, உன் தலை வணங்கட்டும்!
  5. உன் தலைமாலை பகைநாட்டை எரிக்கும் புகையில் வாடட்டும்!
  6. உன் சினம் ஊடும் மகளிரை வெல்லட்டும்! [4]
  • கிள்ளிவளவன் செவியில்
  1. உன் வெண்கொற்றக் குடை உனக்கு நிழல் தருவதற்கு அன்று. மக்களின் துன்பத்தைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவததற்காக!
  2. உன் வெற்றி உன் வீரர் கையில் இல்லை. உழவர் உழும் ஏர்ப்படையிடம் உள்ளது.[5]
  • நீயே, பகைவர் முடிப் பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்தவன். யாமே, உன்னை இகழ்ந்தவரை இகழ்ந்து பாகழ்ந்தவரைப் போற்றும் புலவன். என்னிடம் இன்சொல் பேசி, எளிமையாகக் காட்சி தருக! [6]
  • நன்மாறன் செவியில்
  1. அரசின் கொற்றம் (வெற்றி) நாற்படையால் என்றாலும், அதன் முதல் ‘அறநெறி’யே.
  2. எனவே, நம்முடையவர்களிடமும் பிறரிடமும் ஞாயிறு போல் காய்க!
  3. எல்லாருக்கும் திங்கள் போல் குளுமை தருக!
  4. எல்லாருக்கும் மழை போல் வழங்குக! [7]
  • வரியை இரக்க உணர்வோடு வாங்குக! விளைந்த நெல்லை அறுத்துச் சமைத்துக் கவளமாக யானைக்கு நல்கினால் பல நாள் கொடுக்கலாம். விளைச்சலில் யானை புகுந்து உண்டால் அஃது உண்பதைக் காட்டிலும் அதன் காலில் மிதிபட்டு அழியும் நெல் அதிகமல்லவா? உணர்ந்து வரி வாங்குக! [8]

இலக்கணம் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் செவிக்கு முரஞ்சியூர் முடிநாகராயர் - புறநானூறு 2
  2. பாண்டியன் ஒள்வாள் பெரும்பெயர் வழுதி செவியில் இரும்பிடர்த் தலையார் - புறநானூறு 3
  3. சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை செவியில் நரிவெரூஉத் தலையார் - புறநானூறு 5
  4. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செவியில் காரி கிழார் - புறநானூறு 6
  5. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் செவியில் வெள்ளைக்குடி நாகனார் - புறநானூறு 35
  6. இன்சொல் எண்பதத்தை ஆகுமதி - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் செவியில் ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 40
  7. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் செவியில் மதுரை மருதன் இளநாகனார் - புறநானூறு 55
  8. பாண்டியன் அறிவுடை நம்பி செவியில் பிசிராந்தையார் - புறநானூறு 184
  9. தொல்காப்பியம், புறத்திணையியல், 87
  10. மறம் திரிவில்லா மன்பெருஞ் சூழ்ச்சி
    அறம் திரி கோலாற்கு அறிய உரைத்தன்று – புறப்பொருள் வெண்பாமாலை 221

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவியறிவுறூஉ&oldid=3317145" இலிருந்து மீள்விக்கப்பட்டது