பிசிராந்தையார்

பிசிராந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 308, நற்றிணை 91, புறநானூறு 67, 184, 191, 212 ஆகியவை.ஆந்தையார் என்பது இவர் பெயர். ஆந்தையார் என்னும் பெயர் ஆதன் தந்தை என்னும் பெயர்களின் கூட்டுச்சொல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சோழன், பாண்டியன் அறிவுடைநம்பி, ஆகியோரைப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தரும் செய்திகள் பல.

செய்திகள் தொகு

 • வேங்கைப்புலியோடு போரிட்ட ஆண்யானை தன் கொம்புகளைக் கழுவாமல் நடமாடும் வழியில் தலைவன் வருவது தலைவிக்குத் துன்பம் தருகிறது [1]
 • ஆணும் பெண்ணுமாக இணைந்து இரை தேடும் நாரை புன்னைமரத்தில் கட்டிய கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்குச் சிறு சிறு மீன்களைக் கொண்டுசென்று இரையாக ஊட்டும். [2]
 • அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்கிறார். [3]
 • பாண்டியன் அறிவுடைநம்பி குடிமக்களைக் கொடுமைப்படுத்தி அதிகமாக வரி தண்டினான். விளைந்த நெல்லை அறுத்து அரிசியாக்கி உணவுக் கவளமாக ஊட்டினால் அது யானைக்கு உணவாகப் பல நாட்களுக்கு வரும். நெல்வயலில் புகுந்து யானை தானே தின்றால் உண்பதைவிட அதன் கால்மிதியில் அழிவது அதிகமாக் அல்லவா? என்று உவமை மூலம் பக்குவமாக எடுத்துரைத்து மன்னனைத் திருத்தினார். [4]
 • நேரில் காணாமலே கோப்பெருஞ்சோழனோடு நட்புப் பூண்டார். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த போது அவனைக் காணவும் சென்றார். அப்போது தன் தலையில் நரை தோன்றாமல் இருப்பதற்கான காரணத்தை விளக்கும் பாடல் ஒன்று உள்ளது. புறநானூற்றில்]] இவர் பாடிய பாடல் ஒன்று வருகிறது. தன் தலைமயிர் நரைக்காது இருக்கக் காரணம் எனப் பதிலளிக்கிறார்.[5]
 • பாண்டிய நாட்டில் வாழ்ந்த இவர் தன் அரசன் பொத்தியாரோடு நட்புப் பூண்டுள்ள கோப்பெருஞ்சோழன் எனக் கூறுவது வியப்பாக உள்ளது [6]

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இவ்விருவரின் நட்பு, நட்புக்கு இலக்கணமாக முன்வைக்கப்படுகிறது.

அடிக்குறிப்பு தொகு

 1. அகநானூறு 308
 2. நற்றிணை 91
 3. புறநானூறு 67
 4. புறநானூறு 184
 5. யாண்டு பலவாக நரையில வாகுதல்
  யாங்கா கியரென வினவுதிராயின்
  மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
  யான்கண் டனையர் என் இளையர்: வேந்தனும்
  அல்லவை செய்யான் காக்கும் அதனதலை
  ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்
  பலர் யான் வாழும் ஊரே புறநானூறு 191
 6. புறநானூறு 212

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசிராந்தையார்&oldid=3220875" இலிருந்து மீள்விக்கப்பட்டது