சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். இவர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.[1]

சோழியர் / சோழிய வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து

வரலாறு

இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும் நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின் ஆட்சி காலத்திலிருந்தே மேன்மை நிலையை அடைந்திருந்தனர். சோழிய வேளாளர்கள் சோழர்களின் அமைச்சர்கள், படைத்தளபதிகள், அரசு அதிகாரிகள், ஊர் தலைவர்கள் போன்ற உயரிய பதவிகளில் இருந்து அவர்களின் ஆட்சிக்கு பெரும்பங்காற்றியதை கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் மூலம் அறிய முடிகிறது. கொடும்பாளூர் வேளிர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் கரிகாலச் சோழனின் முடிசூட்டும் கல்வெட்டுகளின் வாயிலாக இவர்கள் சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திரு. நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்ற நூலில் இவர்களைப் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது.[2]

கூட்டம்/கிளை

சோழிய வெள்ளாளருள்

  1. கருப்புடையான்
  2. மருதூருடையான்
  3. காருடையார்
  4. குளத்துடையார்
  5. மாயனுடையார்
  6. வாங்காருடையார்
  7. தென்னயமுடையார்
  8. சாத்துக்குடையார்
  9. கூடலுடையார்
  10. ஆதிக்கமுடையார்
  11. காங்கா கோத்திமுடையார்
  12. சுரைக்குடையான்
  13. ஆணைபாக்கமுடையான்
  14. பாக்கமுடையான்
  15. கல்லூடையான்
  16. மருதஞ்சேரியுடையான்

போன்ற 64 கூட்டங்கள் அல்லது கிளைகள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.

புலம்பெயர்வு

தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின், சோழ மண்டலமான கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] இவர்களில் சிலர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அரசு பணி மற்றும் தொழில் காரணமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[சான்று தேவை]

மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ள அய்யர்மலையைச் சுற்றியுள்ள 84 ஊர்களில் வாழும் சோழிய வெள்ளாளர்கள் தங்களை மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு

பிள்ளை மற்றும் வேளாளர் என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.

சோழிய வேளாளர்கள் தங்கள் குலதெய்வமாக அங்காளம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், பச்சையம்மன், காத்தாயி அம்மன், கருப்பசாமி, மதுரைவீரன், காத்தவராயன், பெரியசாமி போன்ற சிறு தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள்.[சான்று தேவை]

இவர்கள் தங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து குலதெய்வத்திற்கு ஆடு மற்றும் கோழிகளை பலி கொடுத்து படையலிட்டு வழிபடும் பழக்கம் உடையவர்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழிய_வெள்ளாளர்&oldid=3701029" இருந்து மீள்விக்கப்பட்டது