ஜாக்லின் விக்டர்

ஜாக்லின் விக்டர் (Jaclyn Victor, பிறப்பு: டிசம்பர் 4 1978), மலேசியாவில் புகழ் பெற்ற பாடகி. மலேசிய ஜாக் என்று அழைக்கப்படும் திரைப்பட நடிகை. Malaysian Idol எனும் தொலைக்காட்சித் தாரகை.[1] அவருடைய குரல் வளத்தின் சிறப்பிற்காக, ஆசிய தேவதை என்றும் புகழப் படுகிறார்.[2]

ஜாக்லின் விக்டர்
Jaclyn Victor
杰克林维克多


வானொலி தொலைக்காட்சி மேடை பாடகி
இயற் பெயர் ஜாக்லின் ஜோசுவா தனராஜ் விக்டர்
பிறப்பு மலேசியா திசம்பர் 4, 1978 (1978-12-04) (அகவை 45)
மலேசியா கெப்போங், கோலாலம்பூர்
வேறு பெயர் 2004இல் இருந்து
சோனி இசைத் தட்டுகள்
துணைவர் திருமணமாகாதவர்
இணையத்தளம் http://www.jaclynvictor.com/

சோனி இசை நிறுவனத்தின் ஒப்பந்தப் பாடகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். பல இனிமையான பாடல்களைப் பாடி ஆசியான், ஆசியத் தாரகை என்று புகழையும் பெற்றவர்.[3] 2011 ஆம் ஆண்டு இவர் அப்பளம் எனும் தமிழ்த் திரைப்படத்தில், நளினி எனும் கதாநாயகி வேடத்தில் நடித்தார். இந்தப் படம் அண்மைய காலங்களில், மலேசியத் தமிழர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் ஆகும்.[4]

வரலாறு

தொகு

ஜாக்லின் விக்டர் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கெப்போங் புறநகர்ப் பகுதியில் பிறந்தவர். இவருடைய தாயாரின் பெயர் மெகி விக்டர். தந்தையாரின் பெயர் தனராஜ் விக்டர். இந்தத் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் ஜாக்லின். இவருக்கு மூன்று தம்பிகள் உள்ளனர்.

ஜாக்லினுக்கு ஒன்பது வயதாகும் போது, இவருடைய தந்தை ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அதனால், அவருடைய குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டது. இளம் வயதில் ஆழமான வறுமை. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவரின் தாயார் மெகி விக்டர், ஒரே சமயத்தில் மூன்று வேலைகளைச் செய்தார்.

முதல் இசைத்தட்டு

தொகு

1996இல் தன்னுடைய உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட ஜாக்லின் விக்டர், கோலாலம்பூரில் இருந்த பொழுதுபோக்கு விடுதிகளில் பாடத் தொடங்கினார். பின்னர், பிரபலமான தங்கும் விடுதிகளில் பாடினார். இவருடைய நண்பரின் உதவியுடன் தன்னுடைய முதல் இசைத் தட்டை வெளியீடு செய்தார்.

’கனவு’ எனும் தலைப்பைக் கொண்ட அந்த இசைத்தட்டு, அவர் எதிர்பார்த்தது போல பிரபலம் அடையவில்லை. மலேசியத் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான டிவி.8லும் அந்த இசைத் தட்டை விளம்பரப் படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மலேசிய ஆராதனைச் சின்னம்

தொகு

அந்தக் காலகட்டத்தில் Malaysian Idol எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, மலேசியர்களிடையே மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக விளங்கியது. பல்லாயிரம் பேர் கலந்து கொள்ளும் அந்தப் போட்டி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படுபவர், நாட்டின் ஆராதனைச் சின்னமாகக் கருதப் படுவார். அவருக்கு பல்வேறு பரிசுகளும், ஊக்குவிப்பு தொகைகளும் வழங்கப்படும். சோனி இசைத்தட்டு நிறுவனம், அதனுடைய எதிர்கால இசைத்தட்டு வெளியீடுகளுக்கும் அவரை ஒப்பந்தம் செய்து கொள்ளும்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி தாயார் மெகி விக்டர், ஜாக்லினுக்கு தூண்டுதல் வழங்கினார். பலவகையான தேர்வு அணுகு முறைகள். பல சோதனைகள் பல வேதனைகள். அனைத்தையும் தாண்டி, இறுதிச் சுற்றுக்கு ஜாக்லின் விக்டர் தேர்வானார். 2004 அக்டோபர் 9ஆம் தேதி மலேசிய ஆராதனைச் சின்னமாகவும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது நிலையில் டினா நாசிர் என்பவர் தேர்வானார். அந்த நிகழ்ச்சிதான் மலேசியாவில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியாகும்.

முதல் மலேசியப் பெண்

தொகு

’மலேசிய ஐடொல்’ நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியப் பெண். முதல் இந்தியப் பெண். முதல் தமிழ்ப்பெண். மலேசியாவின் 76 விழுக்காட்டு ரசிகர்கள், ஜாக்லின் விக்டருக்கு வாக்களித்து அவரை முதல்நிலைக்கு கொண்டு வந்தனர். அதிகமான வாக்குகள் மலாய், சீன சமூகத்தினரிடம் இருந்து பெறப்பட்டன.

’மலேசிய ஐடொல்’ நிகழ்ச்சிகள் இதுவரை இருமுறைகள் நடைபெற்றுள்ளன. 2006 மார்ச் 12ஆம் தேதி அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மலேசிய இந்தியர்கள் மூவர் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். ஜாக்லினைத் தவிர, அஸ்வின் குமார், திரிசியா பிரிசிலா ஆகிய இருவருமே இறுதிச் சுற்றில் தோல்வி கண்டனர். முதல் சுற்றில் முதலாவதாகத் தேர்வு பெற்றவர் ஜாக்லின் மட்டும்தான். மலேசிய இசை உலகில் அது ஒரு வரலாறு.

கண்ணீர் மல்கும் வெற்றியாளர் பாடல்

தொகு

பல்லாயிரம் பேர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சியில், பல இலட்சம் ரசிகர்கள் கைபேசிகளின் வழியாக வாக்களித்தனர். இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ஜாக்லின் விக்டர் Gemilang எனும் வெற்றியாளர்ப் பாடலைக் கண்ணீர் மல்கப் பாடினார். ’கெமிலாங்’ என்றால் மலேசிய மொழியில் வெற்றி என்று பொருள்.

அந்தப் பாடலைக் கொண்ட இசைத்தட்டு வெளியான ஒரே வாரத்திலேயே விற்று முடிந்தது. மலேசிய இசை உலகில் தங்கத் தகுதி பெற்றது. அதுவும் ஒரு சாதனைதான்.[5]

இதைத்தவிர, இவர் முதன்முதலில் வெளியிட்டு அனாதையாகிக் கிடந்த ‘கனவு’ எனும் இசைத்தட்டும் ஒரு சில நாட்களிலேயே விற்று முடிந்தது. அதன் பின்னர், அவருக்கு பல வாய்ப்புகள் மலை மலையாய் வந்து குவிந்தன. மலேசியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள அழைப்புகளை விடுத்தன.

சுனாமி நிதியுதவி இசைவிழாக்கள்

தொகு

இந்தக் காலகட்டத்தில், அதாவது 2004ஆம் ஆண்டு இறுதி வாக்கில், சுனாமி பேரலைகளினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவிகள் செய்ய மலேசியாவில் பல அறநிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு நிதி சேர்க்கும் இசைவிழாக்கள், கலைவிழாக்களும் நடந்தன. அந்த வகையில் ஜாக்லின் விக்டரும் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஊதியம் வாங்காமல் ஊழியம் செய்தார்.

இதைப் போல பல அறநிறுவனங்களுக்கும் நிதி சேர்ப்பதில் உதவிகள் செய்துள்ளார்.[6] 2005 அக்டோபர் மாதம் 28ஆம் தேதி, சீனா, ஷாங்காய் நகரில் ஆசிய இசைவிழா நடைபெற்றது.[7] அதில் ஆசியாவின் 20 நாடுகளின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். மலேசியாவை ஜாக்லின் விக்டர் பிரதிநிதித்தார். அந்த இசைவிழா ஜாக்லினின் வரலாற்றையே மாற்றி அமைத்தது. அந்த விழாவில் ஜாக்லின் தங்கப்பதக்கம் பெற்றார்.[8] அந்த நிகழ்ச்சியில் அவர் ’கெமிலாங்’ பாடலைப் பாடினார்.

திரைப்படங்கள்

தொகு
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் Notes
2008 Susuk கதாநாயகி காமியோ
2009 Talentime பவானி மலேசியத் திரைப்படங்கள்
2010 அப்பளம் நளினி மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்

இசைத் தட்டுகள்

தொகு
ஆண்டு இசைத்தட்டு வெளியீடு குறிப்புகள்
2002 கனவு சொந்த வெளியீடு -
2004 Gemilang சோனி 20,000 இசைத் தட்டுகள்.
2006 Inilah Jac சோனி 2006ஆம் ஆண்டின் சிறந்த பாடகி
2007 Inilah Jac - இரண்டாம் பதிப்பு சோனி காணொளிகள் இணைக்கப்பட்டவை
2009 Jaclyn Victor III சோனி 2010ஆம் ஆண்டின் சிறந்த பாடகி
2011 3 Suara சோனி பாடகர்கள் நிங் பைசுரா, ஷீலா மஜீத்

விருதுகள்

தொகு
 • Hitz. FM சிறந்த புதுப் பாடகர் விருது - மார்ச் 12, 2005
 • பெரித்தா ஹரியான் மலேசிய மலாய் நாளிதழ் விருது - மிகச் சிறந்த பெண் கலைஞர் விருது - ஏப்ரல் 13, 2005
 • உலகச் சீனர்கள் இசை தங்க விருது - ஜூலை 16, 2005
 • ஆசிய ஷாங்காய் இசைவிழா தங்கப் பதக்கம் - அக்டோபர் 28, 2005
 • மலேசிய வானொலி தொலைக்காட்சி விருது - ஜனவரி 21, 2006
  • மிகச் சிறந்த பாடல் - Gemilang
  • மிகச் சிறந்த பாடல் நடன விருது
 • மலேசியத் தொலைக்காட்சி TV3 விருது - பிப்ரவரி 5, 2006
  • மிகச் சிறந்த பாடல் - Gemilang
  • 2006ஆம் ஆண்டின் சிறந்த பாடல் - Gemilang
 • சிங்கப்பூர் இசையுலக விருது - மார்ச் 24, 2006
  • மிகச் சிறந்த பெண் கலைஞர்
 • 13வது மலேசிய இசைத்துறை விருது - ஏப்ரல் 29, 2006
  • சிறந்த அறிமுகக் கலைஞர்
  • சிறந்த பாடல் தொகுப்பு
  • சிறந்த பரப்பிசை இசைத்தட்டு
  • ஆண்டின் சிறந்த இசைத்தட்டு
 • URS மலேசிய மலாய்த் தாளிகை விருது
  • மலாய்க்காரர் அல்லாதவருக்கான கவர் அழகு விருது
 • 14வது மலேசிய இசைத்துறை விருது - ஏப்ரல் 28, 2007
  • பாடுவதில் மிகச் சிறந்த பெண் குரல் வளம்
 • மலேசிய ஆராதனைச் சின்னம் - IKON MALAYSIA
  • தனிநபர் வெற்றியாளர்
 • மலேசிய Era மலாய்த் தாளிகை விருது 2007
  • மலேசியாவில் சிறந்த ஆங்கில மொழிப் பாடகர் - மலேசியா மாலைத்தீவுகளின் தூதர்
 • பாடல் வெற்றியாளர் விருது - 27 ஜனவரி 2008
  • மிகச் சிறந்த குரல் வளம் Ceritera Cinta எனும் மலாய்ப் பாடல்
 • Red Box 2008 Karaoke பாடல்
  • Ceritera Cinta மலாய்ப் பாடல்
 • உயர்த் தொனி விருது 2009
  • சிறந்த குரல் வளம்
 • 22வது மலேசிய திரைப்பட விழா[9]
  • மிக நம்பிக்கையான நடிகை - Talentime திரைப்படம்
 • மலேசியத் திரை விருது 2009
  • நீதிபதிகளின் சிறப்பு விருது - யாஷ்மின் அகமட் விருது - Talentime திரைப்படம்
 • மலேசிய இசையுலக விருது - 2011
  • மிகச் சிறந்த குரல் வளம் - நிங் பைசுரா, ஷீலா அம்சா
 • 2011ஆம் ஆண்டின் சிறந்த தாரகைகள் விருது
  • மிகப் புகழ்பெற்ற குழுவினர்
 • 26வது மலேசிய இசையுலக விருது
  • இரண்டாம் நிலை - Beribu Sesalan
 • 18வது மலேசிய இசைத்துறை விருது
  • 2012 ஆம் ஆண்டு மிகச் சிறந்த மலாய்ப் பாடல் - Beribu Sesalan
 • 19வது மலேசிய இசைத்துறை விருது
  • பெண்களுக்கான சிறந்த குரல் வளம் - ஆங்கிலப் பாடல் : Counting Days. 2012
  • சிறந்த பாடல் தொகுப்பு. ஆங்கிலப் பாடல் : Counting Days. எழுதியவர்: Aubrey Suwito. 2012
  • மிகச் சிறந்த ஆங்கிலப் பாடல். Counting Days. 2012

சர்ச்சை

தொகு

2007ஆம் ஆண்டு ஜாக்லின் விக்டர், மலேசியாவின் சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள தேவாலயங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆலயங்களில் Harapan Bangsa (தமிழில்: இனத்தின் எதிர்பார்ப்புகள்) எனும் பாடலைப் பாடினார்.[10] அவர் அந்தப் பாடலைப் பாடி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2012இல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தப் பாடல் அங்குள்ள முஸ்லீம் சமூகத்தவரை வேதனைப் படுத்துவது போல அமைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.[11]

அதனால், ஜாக்லின் விக்டரையும் அவருடைய பாடல்களையும், மலேசிய முஸ்லீம் மக்கள் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று மலேசியாவில் இருக்கும் ‘பெர்க்காசா’ எனும் அரசு சாரா இயக்கம் அறைகூவல் விடுத்தது.[12]

சிறப்புகள்

தொகு

மலேசியத் தொலைக்காட்சி தொடர் நாடகங்களான Fara, Manjalara எனும் மலாய் நாடகங்களுக்கு, ஜாக்லின் விக்டரின் பாடல்கள், தொடக்கக் இசைப் பாடல்களாகப் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாரா தொடருக்கு ஜாக்லின் விக்டரின் Cepat-Cepat எனும் பாடலும், மஞ்சலாரா தொடருக்கு Satu Harapan எனும் பாடலும் தொடக்க இசைப் பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.

அந்தத் தொடக்க இசைப் பாடல்கள், மலேசியாவில் பல மில்லியன் மலாய், சீன, இந்திய ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. அவை ஒரு தமிழ்ப் பெண் உருவாக்கிப் பாடிய பாடல்களின் இசையில் உருவானவை என்பதின் மூலம் மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
 1. "Jac now becomes the latest addition to the list of victors from the globally renowned reality TV series, joining other Idol celebrities, such as Fantasia Barrino, Guy Sebastian, Kurt Nilsen". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
 2. "She shot to fame when she beat 10,000 contestants to become the first Malaysian Idol in 2004". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
 3. JACLYN Victor, fondly known as Jac, is one of Malaysia’s dynamic and talented singers and her powerful rendition of Malay and English songs has made Malaysians proud.[தொடர்பிழந்த இணைப்பு]
 4. மலேசியாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அப்பளம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 5. "Malaysian Idol Jaclyn Victor received a gold plaque from Sony BMG for as her album Gemilang had sold more than 15,000 copies". Archived from the original on 2005-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
 6. Malaysian Idol 2004 winner Jaclyn Victor is organising a charity concert and dance to raise RM150,000 to construct a new electrical and computer workshop.[தொடர்பிழந்த இணைப்பு]
 7. "Shanghai Asia Music Festival, sponsored by Shanghai Culture Development Foundation". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.
 8. Jac won the Golden Prize at the 8th Shanghai Asia Music Awards in China.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "In 2009, Jaclyn debuted as an actress in Talentime, for which she received a Most Promising Actress award at the Malaysian Film Festival". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
 10. Harapan Bangsa
 11. "Berita Harian: Tiada Niat Singgung". Archived from the original on 2018-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.
 12. "Perkasa wants boycott of Jaclyn Victor". Archived from the original on 2013-01-23. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்லின்_விக்டர்&oldid=3792281" இலிருந்து மீள்விக்கப்பட்டது