ஜான் மில்டன்

ஆங்கிலக் கவிஞர் மற்றும் அரசு ஊழியர் (1608-1674)

ஜான் மில்டன் (John Milton 9 திசம்பர் 1608 - 8 நவம்பர் 1674) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின் 400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!' என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

ஜான் மில்டன்
பிறப்புஜான் மில்டன்
(1608-12-09)9 திசம்பர் 1608
லண்டன், இங்கிலாந்து
இறப்பு8 நவம்பர் 1674(1674-11-08) (அகவை 65)
இலண்டன்
தொழில்கவிஞர்

மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது, அவரது எழுத்துக்களை 'தீ' நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும், பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த 'ஜான் மில்டனின்' பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; 'குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்' என்ற உண்மையைக் கண்டுரைத்த சார்லஸ் டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் இலத்தீன், எபிரேயம், இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன். தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு வெளி உலக பயணத்தை மேற்கொண்டார் அது இவருடைய சிந்தனையை விரிவுபடுத்தின.

இவர் கல்லூரியில் பயிலும் பொழுதே பல கவிதைகளை எழுதியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தனது முழு நேரத்தையும் கவிதை எழுதுவதில் செலவிட்டார். உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்குக் கிறித்துவத்தையும் - விவிலியத்தையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான 'இழந்த சொர்க்கத்தையும் (பாரடைஸ் லாஸ்ட்)', 'மீண்ட சொர்க்கத்தையும் (பாரடைஸ் ரீகெய்ன்ட்)' எழுதுவதற்கு கருவானது. இந்த இரு இதிகாசங்களையும் கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தை தழுவி எழுதினார். இந்த இதிகாசங்களை கவிதை நடையில் எழுதியுள்ளார். கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்தபடியே பல்வேறு அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார்.

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலகப் பயணத்தைத் துவக்கினார். பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, 'உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது' என்ற பேருண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவைக் கண்டு அவருடன் உரையாடினார். இந்தச் சந்திப்பைத் தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாகக் கருதினார் மில்டன். இந்த சந்திப்பைத் தனது 'இழந்த சொர்க்கம்' என்ற காவியத்திலும் ஓரிடத்தில் வர்ணித்திருப்பார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மில்டன்&oldid=3770163" இலிருந்து மீள்விக்கப்பட்டது