ஜூலியனின் கோல்டன் கார்ப்

தென்கிழக்காசியாவில் காணப்படும் ஒரு நன்னீர் மீனினம்
ஜூலியனின் கோல்டன் கார்ப்
Jullien's golden carp
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Cypriniformes
குடும்பம்:
Cyprinidae
பேரினம்:
Probarbus
இனம்:
P. jullieni
இருசொற் பெயரீடு
Probarbus jullieni
ஆண்ரி எமீல் சோவாஜ், 1880

ஜூலியனின் தங்கக் கெண்டை அல்லது ஜூலியனின் கோல்டன் கார்ப் (Jullien's golden carp, (புரோபார்பஸ் ஜுல்லியேனி, Probarbus jullieni) என்பது தென்கிழக்கு ஆசிய ஆற்றுப் படுகைகளில் காணப்படும் அக்டினோட்டெரிகீயை (கீற்றுத்-துடுப்பு மீன்) வகுப்பிலுள்ள சைப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் அருகிய நிலையிலுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு நன்னீர் மீன் இனமாகும். இதன் எண்ணிக்கை பாரிய வேளாண்மை மற்றும் நீர்மின்சாரத்திற்காக அணைகள் கட்டுதல் போன்ற பல்வேறு பொருளியல் நடவடிக்கைகளால் குறைந்து வருகிறது.

பிரெஞ்சுத் தொல்லுயிரியலாளரும், மீனியலாளரும் ஊர்வனவியலாளருமான ஆண்ரி எமீல் சோவாஜ் இதற்கு ஜூலியனின் கோல்டன் கார்ப் எனப் பெயரிட்டார்.[2] இந்த மீனினத்துக்குப் பரவலாக வழங்கப்படும் வேறு பெயர் ஏழு-கோடுகளுள்ள கொடுக்கு ஆகும். இது மலாய் மொழியில் கார்பில்லா இகான் டெமோலே என்றும் தாய் மொழியில் பிலா இசோக், பிலா சோயுக் (புலி மீன்) என்றும் அறியப்படுகிறது.

விவரிப்பு

தொகு

அடையாளம்

தொகு

இந்த மீனினம், அதன் பக்கவாட்டுக் கோட்டுக்கு மேலே ஐந்து நீளமான கோடுகளைக் கொண்டுள்ளது. தம் சுற்றப்புறத்தை அறிந்துகொள்ள இவற்றின் வாயருகில், மேற்தாடை உணர் இழைகளைத் தொடுவுணர்விகளாகக் கொண்டிருக்கின்றன. நகர்வுக்காக இவை ஒரு முதுகுத் துடுப்பையும் ஒன்பது கிளைக் கீற்றுகளையும் ஐந்து குதக்கீற்றுக்களையும் கொண்டுள்ளன. ஏறத்தாழ எழுபது (70) கிலோ வரை எடையுள்ள இந்த மீன்கள் 165 செ.மீ நீளம் வரை வளரக்கூடியவை,[3] ஐம்பது (50) ஆண்டு காலம் வரை வாழக்கூடியவை.[4]

இயல்புகள்

தொகு

பெரும்பாலான பிற ஆற்று மீன்களைப் போலவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியும் பருவ மழையைச் சார்ந்துள்ளது. இவை பருவமழையின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றன.[5]

நன்னீர் ஓட்டுமீன்களையும் இறால்களையும் நீர்த் தாவரங்களையும் உணவாகக் கொள்கின்றன. உணவு செழிப்பாகக் கிடைக்கும் மழைக்காலங்களில் அதிக அளவிலும், அரிதாகக் கிடைக்கும் வறண்ட காலங்களில் குறைவாகவும் உட்கொள்கின்றன.[4]

புலம்பெயர்வு மீன்களான இவற்றின் இடப்பெயர்வு இனப்பெருக்க காலத்தை மையமாகக் கொண்டது. நீர் வேளாண்மை மற்றும் நீர் ஆற்றல் வளர்ச்சிச் செயல்பாடுகள் இவற்றின் இடப்பெயர்வு முறையைக் குலைத்து, இவை அருகிய இனமாகக் காரணிகளாயின.[6]

வாழ்விடம்

தொகு
 
மேக்கொங் ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதி.

வரலாற்றின் படி, இந்த மீனினம் தென்கிழக்கு ஆசியாவின் மேக்கொங் ஆறு, ஐராவதி ஆறு, சாவோ பிரயா ஆறு, மேக்குலௌங் ஆறு, பகாங் ஆறு, பேராக் ஆறுகளின் படுகைகளில், குறிப்பாக தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் மலேசியா நாடுகளில் காணப்படுகின்றது. இக்காலத்தில் இது மேகாங் ஆற்றுப் படுகையில் பெருமளவில் காணப்படுகிறது, பகாங் மற்றும் பேராக்கின் படுகைகளில் சிறிய அளவில் உள்ளன. இந்த ஆற்றுப்படுகைகளில், இவை வேகமான தெளிவான நீரோடைகளில் காணப்படுகின்றன. மழைக்காலத்தில் இவை ஆழமான நீரிலும், அவற்றின் முட்டையிடும் காலமான வறண்ட காலத்தில் ஆழமற்ற நீரிலும் வாழ்கின்றன.[7]

சான்றுகள்

தொகு
  1. Ahmad, A.B. (2019). "Probarbus jullieni". IUCN Red List of Threatened Species 2019: e.T18182A1728224. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T18182A1728224.en. https://www.iucnredlist.org/species/18182/1728224. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. Emile Sauvage, Henri. “Amphibious Fishes.” Popular Science Monthly 9 (September 1876): ProQuest. Web. 1 May 2014.
  3. Phanera, Tach, Zeb Hogan, and Ian G. Baird. “Threatened Fishes of the World: Probarbus Jullieni Sauvage, 1880 (Cyrinidae).” Environmental Biology of Fishes 84.3 (3/2009). Wed. 1 May 2014.
  4. 4.0 4.1 Cheong, Sam. "Gentle Giant Fights for Survival." New Straits Times, Dec 06, 1996. ProQuest. Web. 1 May 2014.
  5. Dudgeon, David. “The Ecology of Tropical Asian Rivers and Streams in Relation to Biodiverty Conservation.” Annual Review of Ecology & Systematics 31. (2000): 239. EBSCO MegaFILE. Web. 1 May 2014.
  6. Hogan, Zeb. “Three Megafish Species Imperiled by Lao’s Mekong River Dam.” National Geographic. National Geographic Society, 27 Dec. 2012. Web. 1 May 2014.
  7. Nambiar, Ravi. "Endangered Fish Find Safe Sanctuary at Last." New Straits Times, Jun 15, 1999. ProQuest. Web. 1 May 2014.