ஜோதி பாசு

இந்திய அரசியல்வாதி
(ஜோதிபாசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜோதி பாசு (வங்காள மொழி: জ্যোতি বসু) (சூலை 8, 1914- ஜனவரி 17 2010) இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஓர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) அரசியல்வாதி. 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றவர்.(as of 2009) தமது கட்சியின் பொலிட்பீரோவில் 1964ஆம் ஆண்டு கட்சியின் தொடக்கத்தில் இருந்து 2008 வரை உறுப்பினராக இருந்த பெருமையும் கொண்டவர்.[1][2]

ஜோதி பாசு
জ্যোতি বসু
1996இல் பாசு
மேற்கு வங்க முதலமைச்சர்
பதவியில்
21 சூன் 1977 – 6 நவம்பர் 2000
முன்னையவர்சித்தார்த்த சங்கர் ரே
பின்னவர்புத்ததேவ் பட்டாசார்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சூலை 1914 (1914-07-08) (அகவை 110)
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்புசனவரி 17, 2010(2010-01-17) (அகவை 95)
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழிடம்(s)கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
இணையத்தளம்www.cpim.org
As of சனவரி 27, 2007
மூலம்: [இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)]

இளமை வாழ்க்கை

தொகு

ஜோதி பாசு 8 சூலை,1914 அன்று கொல்கத்தாவில் ஓர் நடுத்தர வங்காளக் குடும்பத்தில் ஜோதிரிந்தர பாசு என்ற பெயரில் பிறந்தார். அவரது தந்தை நிசிகாந்த பாசு (தற்போது பங்களாதேசத்தில்) உள்ள கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த தாக்கா மாவட்டத்தில் பரோடி என்னும் சிற்றூரில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் ஏமலதா பாசு இல்லக்கிழத்தியாக இருந்தார்.[3]

தமது பள்ளிக்கல்வியை 1920 ஆம் ஆண்டு கொல்கத்தா (அந்நாள் கல்கத்தா) தர்மதாலாவிலுள்ள லோரேட்டோ பள்ளியில் துவங்கினார். பள்ளியில் சேர்க்கும்போதுதான் அவரது தந்தை அவர் பெயரை சோதிபாசு என்று சுருக்கினார். 1925ஆம் ஆண்டு தூய‌ சேவியர் பள்ளிக்கு மாறினார். பாசு இந்து கல்லூரி (அல்லது மாகாணக் கல்லூரியில்)யில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார்.[4] 1935ஆம் ஆண்டு தமது சட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மூலம் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டார். 1940ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக மிடில் டெம்பிள் சட்டரங்கில் பதிந்து கொண்டார்[5]. அந்த ஆண்டே இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்ள இந்தியப் பொதுவுடமைக் கட்சி அவரை தொடருந்து தொழிலாளர்கள் நலன் பேண அனுப்பியது. தொடருந்து தொழிலாளர் சங்க பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் வாழ்வு

தொகு

இங்கிலாந்தில் தமது சட்டப்படிப்பின்போதே சமூக அமைப்புகளிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட பாசு இந்தியா திரும்பியதும் இடதுசாரி அரசியலில் பங்கெடுக்கும் தமது எண்ணத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களது பலத்த எதிர்ப்புகளுக்கிடையேயும் பிரித்தானிய இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போதிலும் தமது குறிக்கோளிடமிருந்து மாறவில்லை. 1946ஆம் ஆண்டு வங்காளச் சட்டமன்றத்திற்கு தொடருந்து தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடமைக் கட்சி பிளவுபட்டபோது புதிதாகத் தொட‌க்கப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) பொலிட்பீரோவின் முதல் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார்.[2] இதனையடுத்து 1967 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

சூன் 21,1977 முதல் நவம்பர் 6,2000 வரை தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராகப் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டு மைய அரசில் ஐக்கிய முன்னணியின் தலைமை அமைச்சராக‌ப் பொறுப்பேற்க அனைவரின் ஒப்புமையைப் பெற்றபோதிலும் தம் கட்சியின் பொலிட்பீரோ விருப்பத்திற்கிணங்க அரசு அமைப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை வரலாற்றுப்பிழையாகப் பின்னர் பாசு குறிப்பிட்டார்.

2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு பதவியிலிருந்து விலகினார். அவரது நம்பிக்கைக்குரிய புத்ததேவ் பட்டாசார்யா அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மறைவு

தொகு

சனவரி 1,2010 அன்று உடல்நிலை நலிவடைந்ததால் கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.[6] சனவரி 17 அன்று அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதி விருப்பப்படி அவரது உடல் மருத்துவத் துறைக்குக் கொடையாக்கப்பட்டது.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jyoti Basu will continue on Central Committee". தி இந்து (கொல்கத்தா: தி இந்து). ஏப்ரல் 4, 2008 இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105171000/http://www.hindu.com/2008/04/04/stories/2008040460771200.htm. பார்த்த நாள்: ஜனவரி 6, 2010. 
  2. 2.0 2.1 Chatterjee, Manini (April 3, 2008). "Nine to none, founders’ era ends in CPM". The Telegraph (Calcutta: The Telegraph). http://www.telegraphindia.com/1080404/jsp/frontpage/story_9094771.jsp. பார்த்த நாள்: January 6, 2010. 
  3. Basu, Jyoti. Jatadur Mone Pare: Rajnaitik Atmakathan. கொல்கத்தா: National Book Agency.
  4. Biography of Jyoti Basu பரணிடப்பட்டது 2018-04-03 at the வந்தவழி இயந்திரம், Website of Jyoti Basu by the Government of West Bengal
  5. Political biography : Jyoti Basu
  6. "Jyoti Basu admitted to hospital". என்டிடிவி (கொல்கத்தா: என்டிடிவி). January 1, 2010. http://www.ndtv.com/news/india/jyoti_basu_unwell.php. பார்த்த நாள்: January 6, 2010. 
  7. "மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசு மரணம்". Archived from the original on 2010-01-20. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  8. The Telegraph

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோதிபாசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_பாசு&oldid=4104471" இலிருந்து மீள்விக்கப்பட்டது