கோவை ஞானி
கோவை ஞானி (சூலை 1, 1935 - சூலை 22, 2020) மார்க்சிய அறிஞரும், எழுத்தாளரும், தமிழிலக்கியத் திறனாய்வாளரும், தமிழாசிரியரும் ஆவார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார்.[1]
கோவை ஞானி | |
---|---|
பிறப்பு | கி. பழனிச்சாமி 1 சூலை 1935 சோமனூர், கோயம்புத்தூர் |
இறப்பு | சூலை 22, 2020 வி. ஆர்.வி நகர், கோவை | (அகவை 85)
தேசியம் | இந்தியர் |
கல்வி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | தமிழறிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் |
பெற்றோர் | கிருஷ்ணசாமி, மாரியம்மாள் |
வாழ்க்கைத் துணை | இந்திராணி (இ. 2012) |
பிள்ளைகள் | பாரிவள்ளல் மாதவன் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி ஆகும். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள் உள்ளனர்.[2]
எழுத்துலகில்
தொகுஇவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வந்தார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர். மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம்/மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.[2]
விருதுகள்
தொகு- புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998)
- கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010)
- எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013)
- ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய சாதனையாளர் விருது (2019)[1]
தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது
தொகுஇவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நூல்கள்
தொகுதிறனாய்வு நூல்கள்
தொகு- மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
- தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
- எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
- படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -
- தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
- நானும் என் தமிழும் - 1999
- தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999
- தமிழில் படைப்பியக்கம் - 1999
- மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001
- எதிர் எதிர் கோணங்களில் - 2002
- மார்க்சிய அழகியல் - 2002
- கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002
- தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003
- தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
- வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
- தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005
- தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005
- வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
- தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
- நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009
- செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
- தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
- வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011
- ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012
- அகமும் புறமும் புதுப்புனல் - 2012
- அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012
- ஞானியின் எழுத்துலகம் - 2005
- ஞானியோடு நேர்காணல் - 2012
மெய்யியல்
தொகு- மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
- மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
- இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975
- மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976
- கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996
- நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006
கவிதை நூல்கள்
தொகு- கல்லிகை - 1995
- தொலைவிலிருந்து - 1989
- கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012
தொகுப்பு நூல்கள்
தொகு- தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
- அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997
- மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998
- படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
- மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999
- விடுதலை இறையியல் - 1999
- இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000
- மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000
- நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
- பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003
மறைவு
தொகுகோவை ஞானி சூலை 22, 2020 அன்று தனது 86-வது அகவையில் கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, வி. ஆர். வி நகரில் காலமானார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்". தமிழ் இந்து (சூலை 22, 2020)
- ↑ 2.0 2.1 2.2 "தமிழின் மூத்த எழுத்தாளர் ஆய்வறிஞர் கோவை ஞானி காலமானார்!". ஒன் இந்தியா (சூலை 22, 2020)
- ↑ "கோவை ஞானி காலமானார்"., தினமணி (சூலை 22, 2020)