டாம் ரீகன்
டாம் ரீகன் (ஆங்கிலம்: Tom Regan) (உச்சரிப்பு: /ˈreɪɡən/; நவம்பர் 28, 1938 - பிப்ரவரி 17, 2017) விலங்குரிமைக் கோட்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமெரிக்க மெய்யியலாளர் ஆவார். அவர் வட கரொலைனா மாகாண பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக இருந்தார். அங்கு அவர் 1967 முதல் 2001-ல் ஓய்வு பெறும் வரை கற்பித்து வந்தார்.[1]
டாம் ரீகன் | |
---|---|
பிறப்பு | பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா | நவம்பர் 28, 1938
இறப்பு | பெப்ரவரி 17, 2017 வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 78)
கல்வி | தீல் கல்லூரி (பி.ஏ.) வர்ஜினியா பல்கலைக்கழகம் (எம்.ஏ., பி.எச்.டி.) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி கேஸ் ஃபார் அனிமல ரைட்ஸ் (1983) |
வாழ்க்கைத் துணை | நான்சி டர்க் |
பிள்ளைகள் | 2 |
காலம் | தற்கால மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | பகுப்பாய்வு மெய்யியல் |
கல்விக்கழகங்கள் | வட கரொலைனா மாகாண பல்கலைக்கழகம் |
முக்கிய ஆர்வங்கள் | விலங்குரிமை கோட்பாடு மற்றும் பரப்புரை |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | "ஒரு-வாழ்வின்-குடிகள்" கோட்பாடு |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
வலைத்தளம் | |
regan |
ரீகன் விலங்குரிமை தத்துவம் பற்றிய பல புத்தகங்களை எழுதியவர். இதில் நவீன விலங்குரிமை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சில ஆய்வுகளில் ஒன்றான தி கேஸ் ஃபார் அனிமல் ரைட்ஸ் (1983) என்ற நூலும் அடங்கும். இவற்றில், மனிதர்களைப் போலவே, மனிதரல்லாத விலங்குகளையும் "ஒரு-வாழ்வின்-குடிகள்" என்ற கோட்பாட்டைக் கொண்டு சமமாக நோக்குமாறு அவர் வாதிடுகிறார். மேலும் மனிதர்களுக்குள் பகுத்தறிவுத் திறனைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமாக மதிப்பளிக்க முனைவோமாயின் அதுபோலவே மனிதரல்லா விலங்குகளிலும் அவற்றின் பகுத்தறிவுத் திறனைப் பொருட்படுத்தாது சமமதிப்பு அளித்தல் வேண்டும் என்பதை தொளிவுறுத்துகிறார்.[2]
1985-ம் ஆண்டு முதல், அவர் தனது மனைவி நான்சியுடன் இணைந்து கலாச்சார மற்றும் விலங்குகள் அறக்கட்டளை என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் இணை-தலைவராகப் பணியாற்றினார். இது "விலங்குகள் மீதான நேர்மறையான அக்கறையால் ஒன்றுபட்ட அறிவுசார் மற்றும் கலை முயற்சிகளின் வளர்ச்சியை வளர்ப்பதில் உறுதி கொண்ட ஓர் அமைப்பு" என்று அறியப்படுகிறது.[3]
உலக நனிசைவ அமைப்பு ரீகனை "ஒரு கொள்கை உறுதிகொண்ட நனிசைவ விலங்குரிமை ஆர்வலர்" என்று நினைவுகூறுகிறது.[4]
ஒரு-வாழ்வின்-குடிகள் கோட்பாடு
தொகுரீகன் தனது தி கேஸ் ஃபார் அனிமல் ரைட்ஸ் (1983) என்ற நூலில் மனிதரல்லா விலங்குகளை "ஒரு வாழ்வின் குடிகள்" ("subjects-of-a-life") என்று பெயரிட்டு அழைத்து அவற்றிற்கு பிறவியிலேயே உரிமை உண்டு என்கிறார்.[5] அறிதிற ஆற்றல் சார்ந்த திறன்கள் உள்ளதனாலேயே மனிதர்களுக்கு தார்மீக உரிமை உண்டென்று நாம் கருதுவதால் அதற்கு ஒத்த அறிவாற்றல் திறன் கொண்ட உணர்திற உயிர்களான மனிதரல்லா விலங்குகளுக்கும் தாரிமீக உரிமைகள் உண்டு என்று அவர் நிறுவுகிறார். மனிதர்கள் மட்டுமே தார்மீக முகவர்களாக செயல்பட்டாலும், கைக்குழந்தைகள் போன்ற தார்மீக உரிமை விடயத்தில் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களும் குறைந்தபட்சம் அதற்கு ஒத்த விலங்குகளும் "தார்மீக சிகிச்சைக்குக் காத்திருப்போர்" அல்லது "தார்மீக நோயாளிகள்" என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.[5]
தார்மீக நோயாளிகள் தார்மீகக் கொள்கைகளை உருவாக்க இயலாதவர்கள் ஆவர். அவ்வகையில் தாங்கள் செய்வது நன்மையையோ தீங்கையோ விளைவிக்க வல்லவை என்றபோதும் அவர்களால் நன்மையையோ தீமையையோ செய்ய இயலாது. தார்மீக முகவர்களால் மட்டுமே தார்மீக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். விலங்குகள் ஒரு-வாழ்வின்-குடிகள் என்ற வகையில் "உள்ளார்ந்த மதிப்பைக்" கொண்டுள்ளவை ஆகும் என்று ரீகன் துணிகிறார். இவ்வாறு வாழ்க்கை என்ற ஒன்றைத் தங்களுக்கே உரிய குறிக்கோளாகக் கொண்டுள்ள விலங்குகள் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது குறிக்கோள்களை அடைய உதவும் கருவிகள் ஆகமாட்டா. இக்கருத்தே ரீகனை ஒழிப்புவாத விலங்குரிமைக் கோட்பாட்டினர் வரிசையில் நிலைத்திருக்க வைக்கிறது. ரீகனின் கோட்பாடு ஒரு-வாழ்வின்-குடிகள் என்று அவர் கருதும் விலங்குகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது.[5] குறைந்தபட்சம் ஒரு வயதுடைய அனைத்து சாதாரண பாலூட்டிகளும் இத்தகுதியைப் பெறும் என்று கீழ்க்காண்டவாறு அவர் வாதிடுகிறார்:[5]
“ | ... பிறருக்கு ஒரு பயன்படு பொருளாகவும் தேவையான பொருளாகவும் இருப்பதற்கு அப்பாற்பட்டு தனது வாழ்வினை இன்பமானவை என்றும் துன்பமானவை என்றும் அனுபவித்து உணரும் தன்மை கொண்டு சிந்தனை, விருப்பம்; கருத்து, நினைவகம், எதிர்காலத்தைப் பற்றிய உணர்வு; இன்பதுன்பம், வலி ஆகியவற்றை உணரக்கூடிய ஒரு உணர்வுபூர்வமான வாழ்க்கை; விருப்பம் மற்றும் தன்நலம் சார்ந்த உணர்வுகள்; தன் விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப செயலாற்றும் திறன்; காலப்போக்கில் உருவாகும் மனம்–உடல் சார்ந்த தன்னடையாளம்; தன்னைச் சார்ந்த தனிப்பட்ட நலன்களில் அக்கறை ஆகியவற்றைக் கொண்ட தனிப்பட்ட விலங்குகள் யாவும் ஒரு-வாழ்வின்-குடிகள் என்று கருதப்படுகின்றன. | ” |
அடிப்படையில் விலங்குகளை நாம் நடத்தும் விதம் மேம்பட வேண்டும் என்றும், சில அனுமான சூழ்நிலைகளில், மனிதன் உட்பட விலங்குகளின் நியாயமான நலனுக்குப் தனிப்பட்ட சில விலங்குகள் பயன்படலாம் என்றும் சிங்கர் கருதுகையில், நாம் மனிதர்களை நடத்துவது போலவே மனிதரல்லா விலங்குகளையும் நடத்த வேண்டும் என்று ரீகன் கூறுகிறார். விலங்குகளுக்கும் வாழ்க்கை என்ற தனிப்பட்ட குறிக்கோள் உண்டென்பதால் அது மதிக்கப்பட வேண்டும் என்றும் அதனாலேயே விலங்குகள் மனிதர்களின் தேவைக்குப் பயன்படும் கருவிகளாகக் கருதப்படக்கூடாது என்றும் கூறுவதன் வாயிலாக இம்மானுவேல் காந்து மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்திய சிந்தனையை ரீகன் விலங்குகளுக்கும் நீட்டிக்கிறார்.[5]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள் தரவுகள்
தொகு- ↑ "Tom Regan", North Carolina State University, accessed 4 June 2011.
- ↑ Regan, Tom. The Case for Animal Rights. University of California Press 1983.
- ↑ "The Culture and Animals Foundation". Archived from the original on மே 23, 2017. பார்க்கப்பட்ட நாள் March 26, 2015.
- ↑ "Tom Regan, philosopher and animal rights pioneer, 1938-2017". vegansociety.com. February 20, 2017. பார்க்கப்பட்ட நாள் October 15, 2017.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Regan, Tom. (1983). The Case for Animal Rights. University of California Press. p. 243.
வெளியிணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டாம் ரீகன்
- Culture & Animals Foundation
- Tom Regan Animal Rights Archive
- Guide to the Tom Regan Papers
- Guide to the Tom Regan Animal Rights Honorary Collection 2016
- Tribute to Tom Regan, by Rainer Ebert
- Animals 24-7 obituary for Tom Regan: "Evolved from butcher to leading advocate of vegan philosophy"