டி. எல். சசிவர்ணத் தேவர்

தமிழக அரசியல்வாதி

டி. எல். சசிவர்ணத் தேவர் (பிறப்பு:6 ஆகஸ்டு 1912- இறப்பு:7 நவம்பர் 1973), தமிழக அரசியல்வாதியும், முத்துராமலிங்க தேவருடன் இணைந்து அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை தென் தமிழகத்தில் வளர்த்தவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் டி. லாடாசாமி - குருவம்மாள் இணையருக்கு 1912-இல் பிறந்தவர் சசிவர்ணம். 1934-இல் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து பிரித்தானியா ஆட்சியினர் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர் போன்ற சமூகங்களைக் குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தியிருந்த கொடுமையை எதிர்த்துப் போராடினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அந்தக் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார்.

1939இல் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறி, பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்த போது, சசிவர்ணமும் அவருடன் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். புதிய அரசியல் அமைப்பின்படி நடத்தப்பட்ட முதல் தேர்தலில், (1952) இவர் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957-இல் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சென்னை சட்டமன்றத்திற்கு சசிவர்ணத் தேவர் போட்டியிட்டு வென்றார். அதே நேரத்தில் மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 64,765 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைத் தக்க வைத்தவர். [1]

30 அக்டோபர் 1963-இல் உ. முத்துராமலிங்கத் தேவரின் மறைவுக்குப் பின்னர் சசிவர்ணத் தேவருக்கும் மூக்கையாத் தேவருக்கும் இடையே, பார்வார்டு பிளாக் கட்சியின் தலைமைக்குப் போட்டி ஏற்பட்டது. இதில் மூக்கையா தேவர் வெற்றி பெற்றதையடுத்து இந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிவர்ணத் தேவர் தனது கூட்டாளிகளுடன் தனியாகப் பிரிந்து போய் சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் எனும் கட்சியைத் தொடங்கினார்.

சசிவர்ணத் தேவர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழக அமைச்சராக இருந்த கக்கனின் நெருங்கிய நண்பர் ஆவார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Rising discontent throws surprise result in second election
  2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எல்._சசிவர்ணத்_தேவர்&oldid=3819917" இலிருந்து மீள்விக்கப்பட்டது