தச்சால்
தச்சால் (Dajjal, அரபு:المسيح الدجّال மஸீஹ் தஜ்ஜால்) அல்லது மசீக் தச்சால் என்பவன் உலக அழிவின் சமீபத்தில் வெளிப்படும் விசித்திர மனிதன் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும்[1]. உலக இறுதியின் பத்து அடையாளங்களின் தச்சாலின் வெளிப்பாடு இரண்டாவது மற்றும் மிக முக்கிய அடையாளம் ஆகும். இசுலாமிய நம்பிக்கைகளின் படி, பூமி தனது இறுதிநாளை நெருங்கும் நேரத்தில் தச்சால் நடு கிழக்கு ஆசியாவில் இருந்து வெளிப்படுவான். மெக்கா, மதினா, தூர் சீனா மலை மற்றும் அல் அக்சா மசூதி அகியவற்றை தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவான்[2]. பின்பு தானே கடவுள் எனவும் மக்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் எனவும் கட்டளையிடுவான். மாய மந்திர வித்தைகளை காட்டியும், ஒரேயொரு இறந்த மனிதனை உயிர்ப்பித்தும் மக்களை தனது பக்கம் ஈர்ப்பான். பெண்கள் மற்றும் இசுபகான் பகுதியை சேர்ந்த யூதர்களில் பெரும்பாலோனர் அவனை பின்பற்றுவார்கள். இறுதியில் சிரியாவில் இருந்து வெளிப்படும் நபி ஈசா (இயேசு) வினால் இசுரேலின் லூத்து என்னும் இடத்தில் வைத்து கொல்லப்படுவான்[3].
பெயர்க்காரணம்
தொகுதச்சால் எனும் அராபிய சொல்லுக்கு முலாம் பூசுபவன், பொய்யன், கண்கட்டு வித்தை செய்பவன் என்பது பொருளாகும். மசீக் என்னும் அராபிய சொல்லுக்கு பயணிப்பவர், தடவுபவர், தடவப்பட்டவர் என்பது பொருளாகும். தச்சாலால் உண்மையை பொய்யை போன்றும், பொய்யை உண்மை போன்றும் காட்ட முடியும் என்பதாலும், உலகம் முழுவதும் பயணம் செய்து அதை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவான் என்பதாலும், அவனது ஒரு கண் தடவப்பட்டது போல் தட்டையாக இருக்கும் என்பதாலும் இவன் மசீக் தச்சால் என அழைக்கப்படுகின்றான். மேலும் இவனை தவிர்த்து உலகம் முழுவதும் தன்னையே இறைவனின் தூதர் என அழைத்துக்கொள்ளும் மற்றவர்களும் இசுலாமியர்களால் தச்சால் என்றே அழைக்கப்படுகின்றனர். இவ்வாறானவர்கள் ஏறக்குறைய 30 பேர் உலக அழிவின் வ்ரை வருவார்கள்[4]. இவர்களின் இறுதியில் வருபவனே மசீக் தச்சால் ஆவான்.
தச்சால் பற்றிய நம்பிக்கைகள்
தொகுஉருவ அமைப்பு
தொகுமுகம்மது நபியின் கூற்றுப்படி, தச்சால் சிவந்த மேனியும் பருமனான உடலமைப்பும் கொண்டவனாக இருப்பான். இவனது கண் பச்சை நிறத்தில் கண்ணாடி போன்று இருக்கும். அதில் ஒன்று சிறுத்துப்போய் ஊனமுற்றதாக இருக்கும்[5]. தலைமுடி மிக நீளமாக அடர்ந்த நிலையில் அலை அலையாக இருக்கும். கால்களுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கும். உடல் நல்ல திடகாத்திரமாகவும் குள்ளமாகவும் இருக்கும். இவனது பார்வை நிலைகுத்தியது போல் இருக்கும். மேலும் இவனது நெற்றியில் காஃபிர் (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்.
தோற்றம்
தொகுஇசுலாமிய நம்பிக்கைப்படி, தச்சால் முகம்மது நபியின் காலத்திற்கு முன்பே இந்த உலகில் படைக்கப்பட்டுவிட்டான். சிரியா, ஏமன் அல்லது மதினாவுக்கு கிழக்கு திசையில் உள்ள ஏதோவொரு நாட்டின் கடற்பகுதியில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான். உலகம் தனது இறுதி நாட்களை நெருங்கும் நேரத்தில், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் இருந்து தச்சால் வெளிப்படுவான். பைசான் எனுமிடத்தில் உள்ள பேரித்தம் மரங்கள் பலனளிக்காமல் போவதும், தபரிய்யா எனும் சிறு கடலில் நீர் வற்றிப்போவதும், சுகர் நீரூற்று வற்றி விவசாயம் அழிவதும், படிப்பறிவில்லாத குலத்தில் இருந்து முகம்மது நபி தோன்றுவதும் இவன் வெளிப்படுவதற்கான அடையாளங்கள் ஆகும்.
ஆற்றல்
தொகுஇவன் மாய மந்திரங்கள் மற்றும் கண்கட்டு வித்தைகளில் அதிக ஆற்றல் உடையவனாக இருப்பான். பொய்யான சொர்க்கம் மற்றும் நரகம் ஆகியவற்றை மக்களுக்கு காட்டுவான். இதில் சொர்க்கம் உண்மையில் நரகமாகும். நரகம் உண்மையில் சொர்க்கம் ஆகும். அதேபோல் பொய்யான நீர் நதி மற்றும் நெருப்பு நதி ஆகிய்வற்றை மக்களுக்கு காட்டுவான். இதில் நதி நீர் உண்மையில் நெருப்பு நீர் ஆகும். நெருப்பு நீர் உண்மையில் நதி நீர் ஆகும். மேலும் இவனிடம் மலையளவு உணவுப் பொருட்களை இருக்கும். மழையை பொழியவைப்பான். நிலத்தை விளையவைப்பான். உடல் வற்றிய கால்நடைகளை கொழுக்க வைப்பான். பிறவிக் குருடு, வெண்குட்டம் போன்ற நோய்களை குணப்படுத்துவான். பூமியில் புதையல்கள் உள்ள இடங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவான். மேலும் உயிருடன் உள்ள மனிதனை இரண்டாக பிளந்து மீண்டும் அவனை உயிர்ப்பிப்பான். ஆனால் அதே மனிதனை மறுமுறை அவ்வாரு உயிர்ப்பிக்க அவனால் முடியாது.
கொள்கை, படை மற்றும் ஆட்சி
தொகுஉலகம் முழுவதுக்குமான அதிபதி தானே எனவும், இந்த உலகம் முழுவதையும் படைத்த கடவுளும் தானே எனவும் இவன் வாதிடுவான். இவன் சிறந்த நாவன்மை கொண்டவனாக இருப்பான். இவனின் நாவன்மை மற்றும் மாய மந்திரங்களின் மூலம் மக்களை எளிதில் கவரக்கூடியவனாக இருப்பான். இவனை சந்திக்கும் பக்திமான்கள் பலரும் மேற்கூறிய இவனின் சக்தியின் மூலம் இவனிடம் சரனடைவார்கள். ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இவனை பின்பற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இசுபகான் எனும் பகுதியை சேர்ந்த 70,000 யூதர்கள் இவனை பின்பற்றி இவனுடைய படையில் சேர்வார்கள். இந்த படை மெக்கா மதினா நகரங்கள், எகிப்தில் உள்ள தூர் சீனா மலை மற்றும் பாலசுத்தீனத்தில் உள்ள அல்-அக்சா மசூதி ஆகியவற்றை தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றும். அந்தந்த இடங்களில் உள்ள மக்கள் தச்சாலை வழிபட கட்டாயப்படுத்தப்படுவார்கள். மறுப்பவர்கள் கொல்லப்படுவார்கள்.
மரணம்
தொகுஇதன் பிறகு தச்சாலின் படைகள் சிரியாவின் தலைநகர் டமாசுக்கச்சை முற்றுகை இடும். அந்த பொழுது சிரியாவை முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழி வந்த இமாம் மகதி (மஹ்தி) என்பவர் ஆட்சி செய்து வருவார். அவரின் படைகள் தச்சாலை எதிர்த்து போரிடும். அதன் இறுதி கட்டத்தின் ஒரு நாள் அதிகாலை வேளையில் நபி ஈசா அவர்கள் உமய்யா மசூதியில் உள்ள வெள்ளை கோபுரத்தில் வந்து இறங்குவார்கள். இமாம் மகதியின் படைக்கு தலைமை தாங்கி நபி ஈசா வருவதை பார்த்த தச்சால் போர்முனையில் இருந்து பின்வாங்கி விடுவான். இருப்பினும் அவனை தொடர்ந்து விரட்டிச்செல்லும் நபி ஈசா, இன்றைய இசுரேல் பாலசுத்தீன எல்லையில் உள்ள லுத் எனும் இடத்தில் வைத்து கொன்றுவிடுவார்கள். இதன் பின்பு தச்சாலின் படையும் நிர்மூலமாக்கப்படும். தச்சால் உலகில் வெளிப்பட்டதிலிருந்து, இறுதியில் நபி ஈசாவினால் கொல்லப்படுவது வரை 40 நாட்களிலேயே நடந்தேறிவிடும். இருப்பினும் இந்த 40 நாட்களில் ஒரு நாள் ஒரு வருடம் போலவும், இன்னொரு நாள் ஒரு மாதம் போலவும், மற்றொரு நாள் ஒரு வாரம் போலவும் இருக்கும். மீதமுள்ள நாட்கள் சாதாரண நாட்களை போன்று இருக்கும்.
தச்சால் பற்றிய விவாதங்கள்
தொகுசில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள தச்சால், ஒரு மனிதன் அல்ல என்பதும் மனிதனாக உருவகப்படுத்தப்பட்ட வேறு சில அம்சங்கள் அல்லது பொருட்கள் என்பது ஒரு சாரரின் கருத்து. இவர்களின் வாதப்படி தொடருந்து, தொலைக்காட்சி, கணினி மற்றும் நவீன கருவிகள் அனைத்துமே தச்சால் ஆகும். இவற்றின் மூலமே மக்கள் உலக வாழ்வின் சுகங்களுக்கு அடிமையாகி கடவுளையும் அவனது வழிமுறைகளையும் நிராகரிப்போர்களாக மாறிவருகின்றனர் என்பது இவர்களின் வாதம் ஆகும். இன்னும் சிலர் ஐக்கிய நாடுகள் அவை போன்ற உலகை மறைமுகமாக கட்டுப்படுத்தும் நிறுவனங்களே தச்சால் எனவும் வாதிடுகின்றனர். மேலும் உலகில் குழப்பங்கள் மற்றும் மாபெரும் அழிவை ஏற்படுத்திய சிலரும் தச்சால் என வர்ணிக்கப்பட்டதுண்டு. முகம்மது நபியின் காலத்தில் வாழ்ந்த இப்னு சைய்யத், இட்லர் போன்றவர்கள் இவ்வாறு வர்ணிக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபலமானவர்கள்.
மற்ற மதங்களின் பார்வை
தொகுகிருத்துவம்
தொகுஅந்தி கிருத்து என தச்சாலை கிருத்துவம் அழைக்கின்றது. ஆர்ப்பரிக்கும் அலையில் இருந்து இவன் தோன்றுவான் என விவிலியம் கூறுகின்றது. இவன் பாவத்தின் மகன் என்றும் இவனது வருகை உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று எனவும் இயேசு கூறியதாக விவிலியம் பதிவு செய்துள்ளது[6].
இந்து மதம்
தொகுஇந்து மதத்தில் தச்சாலை ஒன்றிய அந்தாக் ஆசர் என்பவனை பற்றிய குறிப்பு உள்ளது. அந்தாக் ஆசர் எனும் சமசுகிருத சொல்லுக்கு இறுதியில் வரும் ஒற்றைக்கண்ணன் என்பது பொருளாகும். இவன் வன்மம் மிகுந்தும் ஆயிரம் கைகள், ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் பாதங்கள் மற்றும் இரண்டாயிரம் கண்களை கொண்டவனாகவும் இருப்பான். இவன் மந்தார் பர்வதத்தில் நுழைய முற்படும்போது கொல்லப்படுவான்[7].
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dajjal is One-Eyed
- ↑ http://www.tamililquran.com/bukharisearch.php?q=%E0%AE%A4%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&Submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95[தொடர்பிழந்த இணைப்பு] ஸஹீஹுல் புஹாரி பாகம்:2 அத்தியாயம்:29
- ↑ Maulana Ahmad Ali. "Major Signs Before The Day Of Judgement" Pg 30
- ↑ http://www.tamililquran.com/bukharisearch.php?s=10&q=தஜ்ஜால்[தொடர்பிழந்த இணைப்பு] ஸஹீஹுல் புஹாரி பாகம்:7 அத்தியாயம்:92
- ↑ http://www.tamililquran.com/bukharisearch.php?s=20&q=தஜ்ஜால் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் ஸஹீஹுல் புஹாரி பாகம்:7 அத்தியாயம்:97
- ↑ (மத்தேயு 24:4, 5)(வெளிப்பாடு 6:1, 2)(யோவான் 2:18)(2 தெசலோனியர் 2:3-8)
- ↑ (ஹரிவன்ஸ் புரானா - ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா - பாகம் 1 - பக்கம் 492, 502-504)
வெளி இணைப்புகள்
தொகு- http://www.islam.tc/prophecies/masdaj.html பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம்
- http://www.islaam.com/Article.aspx?id=402 பரணிடப்பட்டது 2008-03-03 at the வந்தவழி இயந்திரம்
- http://muttaqun.com/dajjal.html
- https://web.archive.org/web/20090621003552/http://pakalert.wordpress.com/2009/06/18/the-dajjal-war-on-humankind/
- http://www.youtube.com/watch?v=4TNeA-I0Bak