தந்தை தமியான்

கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவி

தந்தை தமியான் (Father Damien) அல்லது மோலக்காய் பிரதேசப் புனித தமியான் (Saint Damien of Molokai) என்பவர் இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை (Congregation of the Sacred Hearts of Jesus and Mary) என்னும் கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவியும் குருவும் ஆவார் (டச்சு: Pater Damiaan அல்லது Heilige Damiaan van Molokai).

தந்தை தமியான்
மோலக்காய் பிரதேச தமியான்
ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்து, தாமும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க குரு தந்தை தமியான்
புனிதர்
பிறப்பு(1840-01-03)சனவரி 3, 1840
திரெமெலோ, பெல்சியம்
இறப்புஏப்ரல் 15, 1889(1889-04-15) (அகவை 49)
கலாவுபப்பா, ஹவாயி, ஹவாயி இராச்சியம்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க சபை, கீழைக் கத்தோலிக்க சபைகள், அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபை, ஆங்கிலிக்கத்தின் சில பிரிவுகள்; லூதரன் தனிச்சபைகள் சில.
அருளாளர் பட்டம்சூன் 4, 1995, இயேசுவின் திரு இருதயப் பெருங்கோவில், கேக்கல்பெர்க், பிரஸ்ஸல்ஸ், பெல்சியம் by திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
புனிதர் பட்டம்அக்டோபர் 11, 2009, உரோமை by திருத்தந்தை பதினாறம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்லுவேன், பெல்சியம் (உடலின் மீபொருள்கள்);
ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய்ப் பகுதியில் தமியானின் கை பாதுகாக்கப்பட்டு வருகிறது
திருவிழாமே 10, (அனைத்துலகு); ஏப்பிரல் 15 (ஹவாயி; அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபை)
பாதுகாவல்தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்
தந்தை தமியானின் கையொப்பம்

பிறப்பும் துறவறமும் தொகு

தந்தை தமியான் 1840, சனவரி 3ஆம் நாளில் பிறந்தார். ஏப்பிரல் 15, 1889இல் இறந்தார். அவர் பிறந்த இடம் பெல்சிய நாட்டில் உள்ள திரெமலோ என்னும் ஊர் ஆகும். அவருடைய இயற்பெயர் யோசேப்பு தெ ஃபாய்ஸ்ட்டெர் (Jozef De Veuster). அவர் இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை என்னும் துறவற சபையின் உறுப்பினராக இருந்தார்.[1] கிறித்தவ சமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார்.

தொழுநோயாளரிடையே பணி தொகு

ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் ஒதுக்கப்பட்டு அடைபட்டிருந்த தொழுநோயாளரிடையே தந்தை தமியான் பணிபுரிந்து, உலகப் புகழ் பெற்றார்.[2]

தொழுநோயாளரின் குடியேற்ற அடைப்பில் அவர்களுடைய உடல், ஆன்மா மற்றும் உளம் சார்ந்த தேவைகளை நிறைவு செய்த தந்தை தமியான் 18 ஆண்டுகள் அப்பணிக்காகத் தம்மையே கையளித்திருந்தார். இறுதியில் தொழுநோய் அவரையும் தொற்றிக்கொண்டது. அதன் காரணமாக இறந்த தந்தை தமியான் அன்பின் மறைச்சாட்சி (martyr of charity) என்றும் அறியப்படுகிறார்.[3]

இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்று அறியப்படுகின்ற பகுதியில் வாழ்ந்து, மறைப்பணி செய்து உயிர்நீத்து புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட பத்துப்பேருள் ஒருவராக விளங்குகின்றார் தந்தை தமியான்.[4]

புனிதர் நிலை தொகு

தந்தை தமியானை ஒரு புனிதராக ஏற்று, அவருக்கு வணக்கம் செலுத்தி அவரிடத்தில் வேண்டுதல் நிகழ்த்தும் சபைகள் இவை:

புனித தமியான் ஹவாயியின் ஹொனலூலு மறைமாவட்டத்தின் பாதுகாவல் புனிதரும் ஆவார். ஹவாயி மாநிலம் முழுவதிலும் அவருடைய திருவிழா ஏப்பிரல் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

திருத்தந்தை யோவான் பவுல் தந்தை தமியானுக்கு 1995, சூன் நான்காம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கினார். அத்தருணத்தில் அவர் தந்தை தமியானுக்கு நினைவுத் திருவிழா மே 10ஆம் நாள் கொண்டாடப்படலாம் என்று அறிவித்தார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, அக்டோபர் 11ஆம் நாள் தமியானுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.[5][6]

புனித தமியான் தொழுநோயாளரின் திருத்தூதர் (the Apostle of the Lepers) என்னும் பெயராலும் அறியப்படுகிறார்[7] மேலும் அவருக்கு, தொழுநோய்த் துறவி ("leper priest") என்னும் பெயரும் உண்டு.

தமியானின் இளம்பருவம் தொகு

பெல்சிய நாட்டில் ஃப்ளேமிஷ் (Flemish) மொழி பேசும் மக்கள் குழுவைச் சார்ந்த யோவான்னெஸ் ஃப்ரான்சிஸ்குஸ் தெ ஃபாய்ஸ்ட்டர் என்பவருக்கும் அவரது மனைவி ஆன்னி-காதரின் வூட்டெர்ஸ் என்பவருக்கும் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார் தமியான். அவரது இயற்பெயர் யோசேப்பு தெ ஃபாய்ஸ்ட்டர் என்பதாகும். அவரது தந்தை கோதுமை வியாபாரியாக இருந்தார்.

தமியான் பிறந்த ஊரின் பெயர் திரெமோலோ. அது ஃப்ளேமிஷ் ப்ரபான் (Flemish Brabant) பகுதியில் உள்ளது. அவர் ப்ரேய்ன்-லெ-கோம்த் என்னும் இடத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

துறவு வாழ்க்கையைத் தழுவுதல் தொகு

இயேசுவை நெருக்கமாகப் பின்செல்ல விரும்பி, துறவற வாழ்க்கையைத் தழுவ எண்ணிய தமியான் "இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவறக் குழுவில் உறுப்பினராகச் சேர முன்வந்து, அச்சபைக்கான புகுமுகப் பயிற்சி பெற்றார்.

அப்போது அவர் தேர்ந்துகொண்ட துறவறப் பெயர் "தமியானுஸ்" (இலத்தீன்: Damianus) ஆகும். அது டச்சு மொழியில் Damiaan எனவும், பிரஞ்சு மொழியில் Damien எனவும் வரும். அவர் தேர்ந்துகொண்ட பெயரை உடைய புனிதர் ஒருவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைச்சாட்சியாக உயிர்துறந்தார்.[8]

தந்தை தமியானின் மூத்த சகோதரிகள் இருவர் (யூஜெனீ, பவுலீன்) துறவறம் புகுந்தனர். அதுபோலவே அவரது அண்ணன் ஆகுஸ்த் என்பவரும் துறவியாகி குருத்துவத்தைத் தழுவினார். அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி தமியானும் தாம் புகுந்த துறவறக்குழுவில் 1860, அக்டோபர் 7ஆம் நாள் தம் "சகோதரர்" நிலையில் அர்ப்பண வாழ்வைத் தொடங்கினார். அவருக்குப் போதிய கல்வியறிவு இல்லை என்று காரணம் காட்டி, அவர் குருவாகத் தகுதியற்றவர் என்று அவருடைய மேலதிகாரிகள் எண்ணினர். என்றாலும், அவர் அறிவுத் திறன் குன்றியவராகக் கருதப்படவில்லை. அவர் தம் சகோதரரிடம் இலத்தீன் நன்றாகப் பயின்றார். அதைத் தொடர்ந்து அவருடைய மேலதிகாரிகள் அவரைக் குருத்துவப் படிப்புக்கு அனுமதித்தார்கள்.

அவருடைய குருத்துவப் படிப்புக் காலத்தின் போது அவர் ஒவ்வொரு நாளும் மறைபரப்பாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் சவேரியாரின் படத்தின் முன் அமர்ந்து, தாமும் ஒருநாள் நாடுகடந்து சென்று கிறித்தவ மறைப்பணி புரிய இறைவன் அருளவேண்டும் என்று வேண்டுதல் செய்வது வழக்கம்.[9] மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. தமியானின் சகோதரர் ஆகுஸ்து நோய்வாய்ப்பட்டதால் ஹவாயி இராச்சியத்துக்கு மறைப்பணியாளராகச் செல்ல இயலாமல் போயிற்று. அவருக்குப் பதிலாக, அவருடைய தம்பி தமியானை ஹவாயிக்கு மறைப்பணியாளராக அனுப்புவது என்று சபை முடிவுசெய்தது. அண்ணனுக்குக் கிடைக்காத பேறு தம்பிக்குக் கிடைத்தது.

ஹவாயிக்கு மறைப்பணியாற்றச் செல்லுதல் தொகு

 
ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவுக்குப் பணிபுரியச் செல்வதற்கு முன் குருமாணவராக இருந்த தமியானின் தோற்றம். ஆண்டு: 1873

1864ஆம் ஆண்டு, மார்ச்சு 19ஆம் நாள் தமியான் மறைப்பணியாளராக ஹவாயி நாட்டின் ஹொனலூலு துறைமுகம் வந்திறங்கினார். அங்கு, தமியானின் துறவற சபையினர் கட்டியிருந்த ஹவாயி மறைமாவட்டப் பெருங்கோவிலில் 1864, மே 21ஆம் நாள் தமியான் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[10]

1865இல் தமியானுக்கு ஹவாயியின் வட கோஹலா பகுதியில் அமைந்திருந்த இயேசுவின் திரு இருதயக் கோவில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஹவாயியில் மருத்துவ நெருக்கடி தொகு

ஹவாயி இராச்சியத்தின் ஓவாகு (Oahu) பகுதியில் பல பங்குகளில் மறைப்பணி செய்தார் தந்தை தமியான். அவ்வாறு அவர் பணியாற்றிக்கொண்டிருக்கையில் ஹவாயியின் மருத்துவ சேவை ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்கலாயிற்று. வெளிநாடுகளிலிருந்து வந்த வணிகர்களும் கடற்பயணிகளும் சுமந்துவந்த சில நோய்கள் அவர்கள் ஹவாயியின் ஆதி குடிமக்களோடு கொண்ட தொடர்பின் பயனாக அம்மக்கள் சிலரிடையே பரவின.

இதனால் ஆயிரக்கணக்கான ஹவாயி மக்கள் ஃபுளூ சளிக்காய்ச்சல், பால்வினை நோயாகிய மேகப்புண் போன்ற நோய்களுக்கு ஆளாகி இறந்தனர். இந்த நோய்கள் அப்பகுதிகளில் முன்னால் கண்டதில்லை. இவ்வாறு வந்து பரவிய நோய்களுள் ஒன்று "ஹான்சன் நோய்" என்று அழைக்கப்படுகின்ற தொழுநோய்.

தொழுநோயாளர் தனிக் குடியிருப்புகளுக்குக் கொண்டுசெல்லப்படல் தொகு

அச்சமயத்தில் தொழுநோய் மிகவும் பயங்கரமான தொற்றுநோயாகக் கருதப்பட்டது. ஆனால் 95% மனிதர்கள் அந்நோய்க் கிருமியைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளனர் என்று அறியப்பட்டது. தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்றும் அக்காலத்தில் கருதப்பட்டது.

தொழுநோய் பரவத் தொடங்கினால் ஹவாயி முழுதும் பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும் என்று அந்த இராச்சியத்தின் அரசர் ஐந்தாம் காமேகாமேகா (Kamehameha V) என்பவர் அஞ்சினார். அவசரமாகக் கூடிய நாடாளுமன்றம் 1865இல் இயற்றிய "தொழுநோய் பரவலைத் தடுக்கும் சட்டம்" என்னும் சட்டத்திற்கு அரசர் கையெழுத்திட்டார்.

இச்சட்டத்தின்படி, ஹவாயியின் தொழுநோயாளர் பிற மக்களிடமிருந்து பிரித்து ஓர் ஒதுக்கிடத்தில் அடைக்கப்பட்டனர். ஹவாயியின் மோலக்காய் தீவிலுள்ள கலாவுபப்பா தீபகற்பத்தில் அமைந்த "கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பு" மற்றும் "கலாவாவு தொழுநோயாளர் குடியிருப்பு" என்னும் பாசறைகளுக்குக் கொண்டுபோகப்பட்டனர். கலாவாவு மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தொழுநோயாளர் குடியிருப்புகள் மோலக்காயின் பிற பகுதிகளிலிருந்து செங்குத்தானதொரு மலைத் தொடரால் பிரிக்கப்பட்டுள்ளன. இன்றுகூட அப்பகுதிக்குப் போகவேண்டும் என்றால் கோவேறு கழுதைகளில் ஏறித்தான் செல்ல முடியும்.

தொழுநோயாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்ட 1866இலிருந்து 1969 வரை சுமார் 8000 ஹவாயி மக்கள் தொழுநோயாளராக அங்கு அனுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மோலக்காய் தொழுநோயாளர் குடியிருப்புகள் நிலைமை தொகு

ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு மக்கள் நல வாரியம் உணவும் பிற பொருள்களும் கொடுத்தது. ஆனால் நாள்கள் போகப்போக அம்மக்களின் நலனைக் கவனிக்க போதுமான ஆள்களோ பொருள்களோ அனுப்பப்படவில்லை. சமகால ஆவணங்களின்படி, தொழுநோயாளர் குடியிருப்புகள் தண்டனைத் தளங்களாக ஏற்படுத்தப்படவில்லை, ஆனால் அவற்றின் பராமரிப்புக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.[2]

அரசு திட்டப்படி, தொழுநோயாளர் குடியிருப்புகள் தமது தேவைக்கான உணவைப் பயிரிட்டுப் பெற்றுக்கொள்ளலாம். ஆனல், பயிரேற்றுவதற்கு உகந்த நில, நீர் வசதி இல்லை. தொழுநோயின் விளைவுகளும் மக்கள் பயிரிடுவதற்குத் தடையாக இருந்தன.

1868ஆம் ஆண்டு தொடங்கியபோது, தொழுநோயாளர் குடியிருப்பில் குடிப்பழக்கம் பரவலாயிற்று. பால்வினைத் தொழில் தழைத்தது. இயல்பாகவே நற்பண்புகள் கொண்ட அம்மக்களின் வாழ்வே தலைகீழாக மாறிற்று[11]

 
ஹவாயியில் கலாவு பெண்கள் பாடகர் குழுவோடு தந்தை தமியான். காலம்: 1870கள்

தொழுநோயாளருக்குப் பணியாற்ற முன்வந்த தமியான் தொகு

கைவிடப்பட்ட நிலையில் இருந்த தொழுநோயாளர் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களுக்கு ஆன்ம பணி செய்வதற்காவது ஒரு குரு தேவைப்படுகிறது என்பதை ஹவாயி ஆயராக இருந்த லூயி தெசிரே மேக்ரே (Louis Désiré Maigret) உணர்ந்தார். ஆனால் ஒரு குருவைத் தொழுநோயாளர் குடியிருப்புக்கு அனுப்பினால் அவரும் தொழுநோய் கண்டு சாவைச் சந்திக்கும் ஆபத்து ஏற்படுமே என்று அவர் தயங்கினார். எனவே, எந்த ஒரு குருவையும் கட்டாயப்படுத்தி அங்கே அனுப்ப ஆயர் விரும்பவில்லை.

ஆழ்ந்த சிந்தித்து, இறைவேண்டல் செய்த பின் நான்கு குருக்கள் தாம் தொழுநோயாளர் குடியிருப்புகளின் மக்களுக்குப் பணிசெய்யத் தயார் என்று கூறி முன்வந்தார்கள். அந்நால்வரும் ஒருவருக்குப் பின் ஒருவராக அங்குப் பணி செய்யலாம் என்று ஆயர் கூறினார்.

தந்தை தமியான் தொழுநோயாளர் நடுவே பணி செய்ய முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தார். ஒதுக்கப்பட்ட இடமாகிய கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பில் தமியான் 1873, மே 10ஆம் நாள் சென்றடைந்தார். அங்கு வாழ்ந்த 816 தொழுநோயாளர் முன்னிலையில் ஆயர் மேக்ரே தந்தை தமியானை அறிமுகம் செய்தார்.

தொழுநோயாளர் குடியிருப்பில் தமியான் ஆற்றிய பணிகள் தொகு

தொழுநோயாளர் குடியிருப்பில் போய்ச் சேர்ந்த உடனேயே அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து தமியான் சிந்திக்கலானார். முதல் வேலையாக ஒரு கோவில் கட்டுவது என்று முடிவுசெய்து, கோவிலைக் கட்டி அதைப் புனித பிலோமினாவுக்கு அர்ப்பணித்தார். ஆனால் அவரது பணி மறைசார்ந்த ஒன்றாக மட்டுமே இருக்கவில்லை.

தொழுநோயாளரின் புண்களைக் கட்டுவது, அவர்கள் வசதியாகத் தங்கியிருக்க வீடுகள் கட்டுவது, அவர்களுக்குத் தேவையான மரச்சாமான்களைச் செய்துகொடுப்பது, இறந்தோரை அடக்கம் செய்ய அடக்கப்பெட்டிகள் செய்வது, கல்லறைக் குழிகள் தோண்டுவது என்று பல பணிகளையும் தமியான் செய்யலானார்.[12]

தொழுநோயாளரின் குடியிருப்பு இருந்த கலாவாவு பகுதிக்குச் சென்று ஆறு மாதங்கள் கழிந்த போது தந்தை தமியான், ஐரோப்பாவிலிருந்த தன் சகோதரர் பம்ஃபீல் (Pamphile) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:

...இயேசுவுக்கு அனைத்தையும் காணிக்கையாக்கும் வண்ணம் நான் இங்குள்ள தொழுநோயாளரோடு என்னையும் ஒரு தொழுநோயாளியாக ஆக்கிக்கொண்டேன்

தொழுநோயாளரின் குடியுருப்புக்கு தந்தை தமியான் வந்து சேர்ந்தது ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று பலர் கருதுகின்றனர். அவரது தலைமையில் ஒழுங்குகள் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்பட்டன, சீரழிந்த குடிசைகள் வீடுகளாயின, பயிரிட வயில்கள் பண்படுத்தப்பட்டன, பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

தந்தை தமியான் தங்களோடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தொழுநோயாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தந்தை தமியானும் அவ்வாறே விரும்பினார். இவ்வாறு தமியான் மோலக்காயிலேயே தங்கிவிட்டார்.[2]

தமியானுக்கும் தொழுநோய் தோன்றுதல் தொகு

 
மரணப் படுக்கையில் தந்தை தமியான்
 
தந்தை தமியானின் உயிர்பிரிந்த சடலத்தின் அருகே மேரியான் கோப் என்னும் பிரான்சிஸ்கு சபைச் சகோதரி

1884, திசம்பர் மாதம் ஒருநாள் தமியான் குளிப்பதற்குத் தயாரான வேளையில் கொதிக்கும் நீரில் தெரியாமல் காலை வைத்துவிட்டார். அவருடைய கால் தோலில் கொப்புளம் தோன்றிய பிறகும் எந்த ஒரு வேதனையோ உணர்வோ அந்த இடத்தில் இல்லை.[2] தந்தை தமியானுக்குத் தொழுநோய் தொற்றிவிட்டது.

தமக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்று தெரிந்த பிறகும், தமியான் முன்னைப் போலவே ஊக்கத்தோடு தம் பணிகளில் ஈடுபட்டார் என்று தொழுநோய்க் குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் கூறியுள்ளனர். வழக்கம்போல, தொழுநோயாளருக்கு வீடுகள் கட்டுவதிலும், தாம் தொடங்கிய திட்டங்கள் தமது மறைவுக்குப் பின்னும் தொடர்ந்து நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் கருத்துச் செலுத்தினார்.

தொழுநோயாளருக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லுநரான மசானாவோ கோத்தோ (Masanao Goto)என்ற சப்பானிய மருத்துவர் 1885இல் ஹொனலூலு நகர் வந்து தந்தை தமியானுக்கு சிகிச்சை அளித்தார். அவருடைய பார்வையில், தொழுநோய் வருவதற்குக் காரணம் உடம்பில் இரத்தம் குறைபடுவதாகும். எனவே, நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும், போதிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும், உணர்ச்சி இழந்துபோன உடல்பகுதிகளை அழுத்தித் தடவி விட வேண்டும், தைலங்களும் மருந்து கலந்த குளியல்களும் வேண்டும் என்னும் வகையில் அவருடைய சிகிச்சை அமைந்தது.

அம்மருத்துவர் அளித்த சிகிச்சைக்கு ஓரளவு பலன் கிட்டியது. நோயின் அறிகுறிகள் சில மறைய ஆரம்பித்தன. அச்சிகிச்சை ஹவாயி நோயாளர் நடுவே நல்ல வரவேற்பையும் பெற்றது. தந்தை தமியானுக்கும் அச்சிகிச்சையில் நம்பிக்கை இருந்தது. எனவே, மசானாவோ கோத்தோ தவிர வேறு யாரிடமும் சிகிச்சை பெறப்போவதில்லை என்று அவர் கூறினார்.[13][14][15]

அந்த மருத்துவரும் தந்தை தமியானும் நெருங்கிய நண்பர் ஆனார்கள்.[16] தமியான் கடைசி முறையாக ஹொனொலூலு நகருக்குப் பயணமாகச் சென்றது அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காகவே.

இறுதிவரை பணி தொகு

தம் வாழ்வின் கடைசி ஆண்டுகளில் தந்தை தமியான் பல்வேறு பணிகளைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டார். தொழுநோயாளர்களுக்கு அன்புப் பணி புரிந்ததோடு, அவர் தொடங்கிய கட்டட வேலைகளை எல்லாம் முடிக்க முயன்றார். அவர் ஆரம்பித்த அனாதை இல்லங்களை விரிவுபடுத்துவதிலும் முனைந்து செயல்பட்டார்.

எதிர்பாராமல் வந்த துணையாளர்கள் தொகு

தொழுநோயால் அவதிப்பட்டு, வலுவிழந்த நிலையில் இருந்த தந்தை தமியானுக்குத் துணைசெய்வதற்கு நான்கு நன்மனிதர் முன்வந்தனர். ஒருவர் குரு, ஒருவர் படைவீரர், ஒருவர் ஆண் மருத்துவத் துணையாளர், ஒருவர் பெண் துறவி.[17]

 
தந்தை தமியானின் கல்லறை. துக்கம் கொண்டாடச் சூழ்ந்திருப்போர் மோலக்காய் தொழுநோய்க் குடியிருப்பு மக்கள்

தமியானுக்கு உதவி செய்ய வந்த குருவின் பெயர் லூயி லாம்பெர்ட் கோன்ரார்டி (Louis Lambert Conrardy). அவருக்குத் துணைநிற்க வந்த பெண்துறவியின் பெயர் மேரியான் கோப். அன்னை மேரியான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நியூயார்க் மாநிலத்தின் சீரக்யூஸ் நகரில் அமைந்திருந்த புனித பிரான்சிஸ்கு சபை இல்லத்தைச் சார்ந்தவர்.

மூன்றாவது துணையாள் பெயர் யோசேப்பு டட்டன் (Joseph Dutton). இவர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் கலந்து கொண்ட ஒரு முன்னாள் போர்வீரர். குடிப்பிரச்சினை காரணமாக முறிந்துபோன திருமணத்தைச் சந்தித்தவர். ஹவாயி சென்று மக்களுக்குப் பணிபுரிய புறப்பட்டுப் போனவர். தந்தை தமியானுக்குத் துணைசெய்ய வந்த நான்காமவர் பெயர் ஜேம்சு சின்னெட் (James Sinnett). ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சிக்காகோ நகரைச் சேர்ந்த அவர் ஒரு மருத்துவத் துணையாள்.

தந்தை லூயி லாம்பெர்ட் கோன்ரார்டி தொழுநோயாளருக்கு ஆன்மிகப் பணி புரிவதில் ஈடுபட்டார். மேரியான் கோப் செயல்படும் ஒரு மருத்துவ மனை தொடங்கினார். டட்டன் குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தினார். ஜேம்சு சின்னெட், தந்தை தமியானின் தொழுநோய் முற்றிய நிலையில் அவருக்கு மருத்துவ உதவி நல்கினார்.

தந்தை தமியானின் இறுதி நாள்கள் தொகு

ஒரு முழங்கையில் தொட்டில் கட்டு போடப்பட்டு, ஒரு காலடியில் தோன்றிய புண்கள் கட்டுப்போட்டவாறும், காலை இழுத்து சிரமத்தோடு நடந்தவாறுமாக இருந்த தமியான் தம் வாழ்வின் இறுதி நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். 1889, மார்ச் 23ஆம் நாள் நோயின் கடுமை காரணமாக அவர் படுக்கையில் ஆனார். மார்ச் 30ஆம் நாள் தம் வாழ்நாளில் செய்த எல்லாப் பாவங்களையும் குற்றம் குறைகளையும் நினைத்து மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கோரும் வகையில் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றார். தம் துறவற வாக்குறுதிகளையும் புதுப்பித்துக்கொண்டார்.

ஏப்பிரல் முதல் நாள் இறுதி வழியுணவு (Viaticum) என்று அழைக்கப்படும் நற்கருணை விருந்தை அருந்தினார். மறுநாள் நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தைப் பெற்றார்.

இறப்பும் அடக்கமும் தொகு

1889, ஏப்பிரல் 15ஆம் நாள் காலை 8 மணிக்குத் தந்தை தமியான் தொழுநோயால் இறந்தார். அப்போது அவருக்கு வயது 49.

மறுநாள் அவருடைய அடக்கத் திருப்பலியை தந்தை முல்லர்ஸ் (Moellers) என்பவர் நிறைவேற்றினார். அச்சடங்கு தந்தை தமியான் கட்டிய புனித பிலோமினா கோவிலில் நடந்தது. அடக்க ஊர்வலத்தின் போது தொழுநோயாளர் குடியிருப்பின் அனைத்து உறுப்பினர்களும் துயரத்தோடு நடந்து சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர். அங்கே Pandanus என்னும் பெயர்பெற்ற ஒருவகை கற்றாழை மரத்தின் அடியில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதே கற்றாழை மரத்தின் கீழ்தான் தந்தை தமியான் தாம் முதல்முறையாக மோலக்காய் தீவுக்கு வந்தபோது இரவைக் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[18]

தமியான் உடலின் மீபொருள்கள் பெல்சியம் செல்லுதல் தொகு

தந்தை தமியான் பிறந்து வளர்ந்த பெல்சிய நாட்டு அரசு அவருடைய உடலின் மீபொருள்களைத் தம் சொந்த நாட்டுக்குக் கொண்டுவர விருப்பம் தெரிவித்தது. எனவே, 1936, சனவரி மாதம் தந்தை தமியான் உடலின் மீபொருள்கள் கப்பல் வழியாக அவருடைய பிறந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. மெர்க்காட்டோர் (Mercator) என்னும் அப்பாய்மரக் கப்பல் இன்று பெல்சிய நாட்டின் லூவென் என்னும் பல்கலைக்கழக நகரில் வைக்கப்பட்டுள்ளது. அந்நகரை அடுத்த திரெமெலோ என்னும் ஒர் ஊரில்தான் தமியான் பிறந்தார்.

ஹவாயிக்கும் தமியான் உடலின் மீபொருள் தொகு

தந்தை தமியானுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் 1995, சூன் 4ஆம் நாள் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய வலது கையின் மீபொருள் அவர் பணிசெய்த ஹவாயி நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொடக்கத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த அதே கல்லறையில் அவரது வலது கை மீபொருள் அடக்கப்பட்டது.[19]

 
ஹவாயி மாநில ஆட்சியவை முன் வைக்கப்பட்டுள்ள புனித தமியான் சிலை

தந்தை தமியானுக்கு வழங்கப்பட்ட ஹவாயி அரசு விருது தொகு

ஹவாயி இராச்சியத்தின் மன்னர் கலாக்காவுவா (Kalākaua) (1836-1891) தந்தை தமியானுக்குத் தம் அரசின் உயரிய விருதாகிய "காக்காவுவா அரசு அணியின் வீரத் தளபதி" என்னும் விருதை வழங்கிக் கவுரவித்தார். "துன்பத்திலும் நோயிலும் வாடிய மக்களின் துயரத்தைத் துடைத்து அவர்களுக்கு நல்வாழ்வு வழங்கியதற்காக" அந்த விருது அளிக்கப்பட்டது.

தந்தை தமியான் இருந்த தொழுநோயாளர் குடியிருப்புக்குப் போய், நேரடியாக அவருக்கு அந்த விருதை வழங்குவதற்காகச் சென்ற இளவரசி லிதியா லிலியூக்காலானி (Lydia Liliʻuokalani) தொழுநோயாளரின் பரிதாப நிலையைக் கண்டு உளமுருகிக் கண்கலங்கினார். அவரால் விருதுப்பத்திரத்தை முழுமையாக வாசித்து முடிக்க இயலவில்லை.[20] இளவரசி லிதியா தந்தை தமியான் தொழுநோயாளர் நடுவே ஆற்றிவந்த பணிபற்றி உலக மக்களுக்கு எடுத்துக் கூறினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று, ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் பல அமைப்புகள் தமியானின் பணி தொடர்ந்து நடப்பதற்கு, பணம் தவிர மருந்துகள், உணவுப்பொருள்கள் போன்றவற்றை அனுப்பி உதவி செய்தன. அவற்றுள் அமெரிக்க புரட்டஸ்தாந்து சபைகளும் இங்கிலாந்து திருச்சபையும் அடங்கும்.

அரசரால் வழங்கப்பட்ட விருதுப் பதக்கத்தைத் தந்தை தமியான் அணிந்ததற்கான சான்று இல்லை. ஆனால் அந்தப் பதக்கம் தமியானின் இறந்ததும் அவருடைய உடலருகே வைக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு தமியானுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹவாயி நாடாளுமன்றம் தமியான் இறந்த அக்டோபர் 11ஆம் நாள் விடுமுறையாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது.[21]

தந்தை தமியானின் பணி பற்றிய விமரிசனம் தொகு

தந்தை தமியான் இறந்ததுமே, அவர் ஹவாயியில் ஆற்றிய பணி பற்றியும் அவருடைய வாழ்க்கை பற்றியும் விமரிசனங்கள் எழுந்தன. ஹவாயியில் பணியாற்றிய சில புரட்டஸ்தாந்து சபைப் போதகர்கள், குறிப்பாக பிரெஸ்பிட்டேரியன் சபை சார்ந்தோர், தமியானைப் பற்றிக் குறை கூறினர். கத்தோலிக்க குரு ஒருவர் (தமியான்) சிறப்பான பணியாற்றியதும் அவரது பணியின் சிறப்பு பலராலும் போற்றப்பட்டதும் பிறரிடத்தில் பொறமையைக் கிளப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமியான் பற்றிக் குறைகூறிய முக்கியமான ஒருவர் பிரெஸ்பிட்டேரியன் சபையைச் சார்ந்த சார்லசு மக்கேவன் ஹைட் (Charles McEwen Hyde) என்பவராகும். இப்போதகர் கேஜ் (H. B. Gage) என்னும் மற்றொரு போதகருக்கு 1889, ஆகத்து 2ஆம் நாள் எழுதிய ஒரு கடிதத்தில் "தமியான் முரட்டுத்தனம் கொண்டவர்; அழுக்குப் பிடித்தவர்" என்று கூறியதோடு, தமியானுக்குத் தொழுநோய் ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் அவருடைய "கவனக் குறைவே" என்று குறைகூறினார்.[22]

தமியான் பற்றிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தொகு

தமியானைப் பற்றி எழுப்பப்பட்ட குற்றச்சாட்டைப் பலர் மறுத்து, அவருடைய பணியைப் போற்றினர். ஆனால், ஹைட் என்பவர் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று ஆணித்தரமாக எடுத்துக் கூறி, வாதத்துக்கு மறுவாதம் கொடுத்துப் பதில் அளித்தவர் புகழ்பெற்ற இலக்கியவாதி ஆர். எல். இசுட்டீவன்சன் (R.L. Stevenson) ஆவார். இசுக்காட்லாந்தைச் சார்ந்த பிரெஸ்பிட்டேரியன் சபைப் பெற்றோருக்குக்குப் பிறந்த இசுட்டீவன்சன் தம் குடும்பத்தோடு 1889இல் ஹவாயிக்குப் பயணமாகச் சென்றார். அங்கு இருந்தபோது அவர் தந்தை தமியான் பணிபுரிந்த தொழுநோயாளர் குடியிருப்பைச் சென்று சந்தித்து, அங்கு எட்டு நாள்கள் தங்கியிருந்து, தமியானின் பணியை நேரடியாகக் கண்டறிந்திருந்தார்.

எனவே, தமியானைப் பற்றிக் குறைகூறிய ஹைட் என்பவருக்குத் தெளிவான விதத்தில் ஒரு "திறந்த கடிதத்தில்" இசுட்டீவன்சன் பதில் தந்தார்.[22]

1890, பெப்ருவரி 25 தேதியிட்ட அக்கடிதம் தந்தை தமியானின் பணியை உயர்த்திப் பேசுவதோடு நில்லாமல், "ஒருநாள் தந்தை தமியானுக்குப் புனிதர் பட்டம் வழங்குவார்கள். அப்போது ஹைட் என்பவர் அப்புனிதர்மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார் என்றும் மக்கள் பேசுவார்கள்" என்றும் கூறுகிறது.[7][22]

ஹைட் என்பவர் சரியான தகவல் தெரியாததால்தான் தமியானிடம் குறைகண்டார் என்று தெரிகிறது. இதை ஹவாயி பத்திரிகையான "The Honolulu Advertiser" (1905, சூன் 20) வெளியிட்ட செய்தியிலிருந்து [7] அறிய முடிகிறது.

மகாத்மா காந்தி தந்தை தமியானின் பணியைப் புகழ்தல் தொகு

தந்தை தமியான் தொழுநோயாளருக்கு ஆற்றிய பணியைப் பெரிதும் பாராட்டிய பெருமக்களுள் காந்தியடிகளும் ஒருவர். இந்தியாவில் சமூக சீர்திருத்தம் கொணரவும் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடவும் தமக்கு வழிகாட்டிய இருந்தவர் தந்தை தமியான் என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.[23][24]

தந்தை தமியானுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல் தொகு

 
ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் கலாவுபப்பா பகுதியில் அமைந்த புனித பிலோமினா கோவில் அருகே உள்ள தந்தை தமியானின் தொடக்க காலக் கல்லறை(21°10′37″N 156°56′53.3″W / 21.17694°N 156.948139°W / 21.17694; -156.948139)
 
பெல்சியத்தின் லுவேன் நகரத்தில் திரு இருதயங்களின் துறவற சபைக் கோவிலின் அடித்தளக் கல்லறைத் தோட்டத்தில் உள்ள தந்தை தமியானின் கல்லறை50°52′33.4″N 004°41′54.1″E / 50.875944°N 4.698361°E / 50.875944; 4.698361)

1977ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் தமியானுக்கு "வணக்கத்துக்குரியவர்" என்னும் சிறப்பை வழங்கினார். 1995, சூன் 4ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தமியானுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.

1999 நவம்பரிலிருந்து தமியானின் பெயர் கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு நாள்காட்டியில் "விருப்ப நினைவு" வகையில் கொண்டாடப்பட்டது.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தமியானுக்கு 2009, அக்டோபர் 11ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனித தமியானின் திருவிழா அகில உலகத் திருச்சபையால் மே மாதம் 10 நாளும், ஹவாயியில் அவர் இறந்த நாளாகிய ஏப்பிரல் 15ஆம் நாளும் கொண்டாடப்படுகிறது.

தமியானிடம் வேண்டுதல் நிகழ்த்தியதால் நடந்த புதுமைகள் தொகு

தமியான் உயிர்துறந்த பிறகு அவரை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதால் புதுமைகள் நடந்தன என்று மக்கள் நம்பினார்கள். இவ்வாறு நிகழ்ந்த இரு புதுமைகள் திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன.

முதல் புதுமை: பிரான்சு நாட்டில் 1895ஆம் ஆண்டில், குடல் நோயால் பாதிக்கப்பட்ட துறவற சகோதரி சிம்ப்ளீசியா ஹுவே (Sister Simplicia Hue) என்பவர் சாகும் தறுவாயிலிருந்தார். அப்போது அவர் தந்தை தமியானை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தி நவநாள் பக்திமுயற்சி செய்தார். அவருக்கு உடனடியாக அற்புதமாக சுகம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை ஆய்ந்த திருத்தந்தை யோவான் பவுல் அது உண்மையிலேயே இயற்கைக் காரணங்களால் விளக்கமுடியாத நிகழ்வு என்று கூறி ஒப்புதல் தந்தார்.

இரண்டாம் புதுமை: ஹவாயியைச் சார்ந்த ஓட்ரி தொகூச்சி (Audrey Toguchi) என்னும் பெண்மணி புற்றுநோயால் அவதிப்பட்டார். அவர் மோலக்காயில் தந்தை தமியானின் கல்லறைக்குச் சென்று அவரை நோக்கி வேண்டுதல் செய்ததன் பயனாக முழு நலன் அடைந்தார்.[25] இந்த நிகழ்வைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஹவாயியின் Medical Journal என்னும் மாத இதழ் 2000 அக்டோபரில் வெளியிட்டது.[19] அதன்படி, 1997இல் ஓட்ரி தொகூச்சிக்கு உடலின் கொழுப்பு அணுக்களில் ஏற்படுகின்ற புற்றுநோய் (liposarcoma) கண்டது. ஓராண்டுக்குப் பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய இடது தொடையின் பின்புறத்திலிருந்து கைமுட்டி அளவில் ஒரு கட்டி அகற்றப்பட்டது. ஆனால் புற்றுநோய் அவருடைய நுரையீரலுக்குப் பரவியது. அவருடைய மருத்துவராக இருந்த வால்ட்டர் சாங் (Walter Chang) என்பவர் தொகூச்சியிடம், "இந்த வகையான புற்றுநோயிலிருந்து யாருக்குமே குணம் கிடைத்தது கிடையாது. இந்நோயால் உங்களுக்குச் சாவு ஏற்படுவது திண்ணம்" என்று கூறியிருந்தார்.

புதுமைகள் ஏற்கப்பட்டு தமியானுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்படல் தொகு

2008 ஏப்பிரல் மாதத்தில் தந்தை தமியானை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதால் நடந்ததாகக் கருதப்பட்ட இரு புதுமைகளும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமாகிய வத்திக்கானால் நம்பத்தக்கவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்புதுமைகளை ஆய்ந்து சான்று வழங்கிய "புனிதர் பட்ட நடவடிக்கைக்கான பேராயம்" என்னும் வத்திக்கான் அலுவலகம் வணக்கத்துக்குரிய தமியானுக்கு புனிதர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரைத்தது. இது குறித்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஓர் ஆணை ஏட்டினை 2008, சூலை 3ஆம் நாள் வெளியிட்டார்.[26]

2009, பெப்ருவரி மாதம் 21ஆம் நாள் வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில் தந்தை தமியானுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்னும் செய்தி வெளியானது.[5] அதைத் தொடர்ந்து, 2009, அக்டோபர் 11ஆம் நாளன்று தந்தை தமியானுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி உரோமையில் நடந்தது. அந்நிகழ்ச்சியில் தந்தை தமியானின் பிறந்த நாடாகிய பெல்சியத்திலிருந்து அரசர் இரண்டாம் ஆல்பெர்ட்டும் அரசி பவுலாவும் பங்கேற்றனர். அவர்களோடு பெல்சிய நாட்டு முதலமைச்சரும் வேறு பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.[6][27]

வாஷிங்டனில், அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமா, "தந்தை தமியான் குரலற்ற மக்களுக்குக் குரல் கொடுத்தார். நோயாளரின் மாண்பினை நிலைநாட்டினார்" என்று கூறி, அவர் ஆற்றிய தன்னலமற்ற பணியைப் பாராட்டிப் புகழ்ந்தார்.[28]

கத்தோலிக்கரும் பிற கிறித்தவர்களும் தமியானுக்கு வணக்கம் செலுத்துதல் தொகு

புனித தமியான் கத்தோலிக்க சபைத் துறவியாக இருந்தபோதிலும், அவருக்கு வணக்கம் செலுத்துகின்ற சபைகளுள் அமெரிக்க ஐக்கிய நாட்டு எப்பிஸ்கோப்பல் திருச்சபையும் உள்ளடங்கும். அச்சபையின் வழிபாட்டு நாள்காட்டியின்படி, புனித தமியானுக்குத் திருவிழா ஏப்பிரல் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

அதே நாளில்தான் அச்சபை, ஹவாயியின் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த மேரியான் கோப் என்பவருக்கும் விழாக்கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலைகளிலும் ஊடகங்களிலும் புனித தமியான் தொகு

தொழுநோயாளரின் நல்வாழ்வுக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்த புனித தமியானை நினைவுகூர்கின்ற கலைப்பொருள்களும் ஊடகப் படைப்புகளும் பல உள்ளன. அவருடைய வாழ்வையும் பணியையும் சித்தரிக்கின்ற திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்படுகின்றன:

 
ஹாலிவுட்டில் உள்ள புனித தோமா எப்பிஸ்கோப்பல் கோவிலின் பீடத்தின் பிற்பகுதியில் காணும் புனித தமியான் உருவச் சித்திரம்
 • ஹவாயி மாநிலத்தின் நாடாளுமன்றத்தின் முன் புனித தமியானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரிச் சிலை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடாளுமன்றத்தின் சிலைத் தொகுப்புக் கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது.[29]
 • திரைப்பட வசன ஆசிரியரும் இயக்குனருமான ஜான் ஃபாரோ (John Farrow) என்பவர் தந்தை தமியானின் வாழ்க்கை வரலாற்றை 1937இல் நூலாக வெளியிட்டார். அதன் தலைப்பு "தொழுநோயாளர் தமியான்" (Damien the Leper).
 • தமியானின் வாழ்க்கையை ஒரு சிறு திரைப்படமாக இயக்குநர் டேவிட் மில்லர் என்பவர் 1938இல் வெளியிட்டார். அதன் பெயர் "உயர்ந்த உள்ளம்" (The Great Heart) என்பதாகும்.
 • முதல் முழுநீளத் திரைப்படம் "மோலக்காய்" (Molokai) என்னும் தலைப்பில் 1959இல் வெளியானது. எசுப்பானிய மொழியில் அதை இயக்கியவர் லூயிசு லூசியா என்பவர்.[30]
 • "தமியான்" என்ற பெயரில் ஒரு நடிகர்-நாடகம் (one-man play ) உருவாக்கப்பட்டது. அதில் நினைவுக் காட்சிகள் (flashbacks) தொகுப்பாக ஒருவர் தன்மை இட முறையில் தமியானின் கதையைச் சொல்கிறார்.
 • "தந்தை தமியான்: தொழுநோய்த் துறவி" (Father Damien: Leper Priest.) என்னும் தலைப்பில் 1980இல் ஒரு தொலைக்காட்சிப் படம் வெளியானது. அதில் கென் ஹௌவர்ட் [31] என்னும் நடிகர் தமியான் வேடத்தில் நடிக்கிறார்.[32]
 • "மோலக்காய்: தந்தை தமியானின் கதை" (Molokai: The Story of Father Damien) என்ற தலைப்பில் பெல்சிய பட ஆக்குநர் தார்சி வான்ஹய்சி என்பவரும் இயக்குநர் பவுல் காக்ஸ் என்பவரும் 1999இல் ஒரு திரைப்படத்தை வெளியிட்டனர்.[33]

தந்தை தமியானின் நினைவுச் செல்வம் தொகு

 
ஹவாயி மாநில நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள புனிதர் தமியானின் உருவச் சிலை
 • தந்தை தமியானின் பிறந்த நாடாகிய பெல்சியம் அவருக்கு 2005இல், "மாபெரும் பெல்சியர்" (De Grootste Belg) என்னும் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது. ஃப்ளேமிஷ் மொழி ஒலிபரப்பு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மிகப் பெரும்பான்மையோர் பெல்சிய வரலாற்றிலேயே மாபெரும் மனிதராகத் திகழ்ந்தவர் தந்தை தமியானே என்று வாக்கு அளித்தனர் (Vlaamse Radio- en Televisieomroep - VRT).[34] பெல்சியத்தின் பிரஞ்சு மொழிப் பகுதியில் நடத்திய கருத்துக் கணிப்புப்படி, "மாபெரும் பெல்சியர்" வரிசையில் தந்தை தமியானுக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டது.
 • சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு தமியான் பணிபுரிந்ததைப் போல இன்று எய்ட்ஸ் நோயாளருக்கும் பணிபுரிய வேண்டும் என்று கிறித்தவ சபைகள் உணர்த்துகின்றன.[35]
 • தந்தை தமியானுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட தருணத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பின்வருமாறு கூறினார்:"இன்றைய உலகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் நோய்களால் வாடுகின்றார்கள். குறிப்பாக எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டோர் எண்ணிறந்தோர் உள்ளனர். நோயாளருக்குப் பணிபுரிய வேண்டும் என்னும் அழைத்தலுக்குத் தாராள மனத்தோடு செவிமடுத்த தந்தை தமியானை நாம் முன்மாதிரியாகக் கொண்டு நோயாளருக்கு நலமளிக்கவும் அவர்களைப் பராமரிக்கவும் முன்வர வேண்டும்.[36]
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் மருத்துவ இல்லங்களும் மையங்களும் தந்தை தமியானின் பெயரைக் கொண்டுள்ளன.[37]
 • ஹாலிவுட்டில் ஒரு எப்பிஸ்கோப்பல் சபைச் சிற்றாலயம் தந்தை தமியானின் பெயர் கொண்டு, எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயாளருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது[38][39]
 • அயர்லாந்தில், "முத்திப்பேறு பெற்ற தமியான் கழகம்" (Blessed Damien Society) என்னும் நிறுவனமும், வேறு பிறரன்புப்பணி நிறுவனங்களும் தொழுநோய்த் தடுப்பு மற்றும் தொழுநோயாளர் பராமரிப்புக்காக நிறுவப்பட்டுள்ளன [40]
 • ஹவாயியின் வரலாற்றில் முக்கியமானதொரு மனிதராக தந்தை தமியான் கருதப்படுகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக, அவருடைய உருவச்சிலை ஹவாயி நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளதைக் கூறலாம்.[41]
 • பல கல்விநிறுவனங்கள் தந்தை தமியானின் பெயரைத் தாங்கியுள்ளன: தென் கலிபோர்னியாவில் "தமியான் உயர்நிலைப் பள்ளி", ஹவாயியில் "தமியான் நினைவுப் பள்ளி".
 • பல கோவில்கள் புனித தமியானின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன.
 • கானடா நாட்டு கெபெக்கில் ஒரு நகரம் தமியானின் பெயரைக் கொண்டுள்ளது (Saint-Damien, Quebec).
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளில், ஓக்லகோமா மாநிலத்தின் எட்மண்ட் நகரில் புனித தமியானுக்கு ஒரு கோவில் 2010 அர்ப்பணம் செய்யப்பட்டது.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

 1.   De Broeck, William (1913). "Congregation of the Sacred Hearts of Jesus and Mary and of the Perpetual Adoration of the Blessed Sacrament of the Altar". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-21. 
 2. 2.0 2.1 2.2 2.3 Tayman, John (2007). The Colony: The Harrowing True Story of the Exiles of Molokai. New York: Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7432-3301-9. http://books.google.com/books?id=rKUaLE6s1lgC&dq. 
 3. "Blessed Damien de Veuster, ss.cc". Congregation of the Sacred Hearts of Jesus and Mary. Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.
 4. See: List of American saints and beatified people#List of American saints.
 5. 5.0 5.1 "'Apostle of the Lepers,' Spanish mystic among 10 to be canonized". Catholic News Agency. www.catholicnewsagency.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 6. 6.0 6.1 "Pope Proclaims Five New Saints". Radio Vaticana. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 7. 7.0 7.1 7.2   Boeynaems, Libert H. (1913). "Father_Damien_(Joseph_de_Veuster)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-21. 
 8. புனித தமியான் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு)
 9. "Blessed Damian De Veuster". Biography. Congregation of the Sacred Hearts of Jesus and Mary. 2007-05-10. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
 10. Eynikel, Hilde (1997). Damiaan: De Definitieve Biografie. Leuven: Davidsfond. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-6152-586-8. 
 11.   Dutton, Joseph (1913). "Molokai". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-21. 
 12. "Saint Damien – Servant of God, Servant of Humanity". Cathedral of Our Lady of Peace. Cathedral of Our Lady of Peace. Archived from the original on 2005-03-11. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 13. "THE LEPERS OF MOLOKAI". The New York Times (New York: The New York Times Company): p. 13. May 26, 1889. http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9C00E7D61E38E533A25755C2A9639C94689FD7CF. பார்த்த நாள்: 2010-07-21. 
 14. Daws, Gavan (1984). Holy Man: Father Damien of Moloki. University of Hawaii Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0920-1. http://books.google.com/books?id=ycb1yBq7SYQC. 
 15. Edmond, Rod (2006). Leprosy and empire: a medical and cultural history. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-86584-5. http://books.google.com/books?id=15U9YIr1masC. 
 16. "St. Damien of Molokai: Servant of God – Servant of Humanity". St. Augustine by-the-sea Roman Catholic Church. St. Augustine-by-the-Sea. Archived from the original on 2010-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 17. Carr, Sherie (October 10, 2009). "Hawaii’s Father Damien: From priesthood to sainthood". Hawaii Magazine இம் மூலத்தில் இருந்து 2014-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313001726/http://www.hawaiimagazine.com/blogs/hawaii_today/2009/10/10/Damien_Hawaii_Saint_Molokai_Kalaupapa_canonization/4. பார்த்த நாள்: 2012-08-02. 
 18. "Damien The Leper". EWTN. Archived from the original on 2012-07-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.
 19. 19.0 19.1 "The Life of Father Damien". The Star-Bulletin (Honolulu, Hawaii). October 7, 2009. 
 20. "St. Damien Day Hawaii October 11". Hawaii Free Press. http://hawaiifreepress.com/Main/ArticlesMain/tabid/56/articleType/ArticleView/articleId/1205/St-Damien-Day-Hawaii-October-11.aspx. பார்த்த நாள்: 2012-08-02. 
 21. "House Resolution 210". Hawaii State Legislature. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.
 22. 22.0 22.1 22.2 Stevenson, Robert Lewis (1922). Father Damien – An Open Letter to the Reverend Dr. Hyde of Honolulu. W. Heinemann in association with Chatto and Windus, Cassell and Longmans, Green. பக். 479–501. http://books.google.com/books?id=iWY4AAAAIAAJ. 
 23. தமியான் பற்றி காந்தியடிகள்[தொடர்பிழந்த இணைப்பு]
 24. Jan De Volder, "The Spirit of Father Damien" (San Francisco, Ignatius Press, 2010) p.167.
 25. Downes, Patrick (March 28, 2003). "Tribunal to examine Blessed Damien miracle claim". Hawaii Catholic Herald (Honolulu, Hawaii: Diocese of Honolulu,) இம் மூலத்தில் இருந்து 2011-07-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724184442/http://www.hawaiicatholicherald.org/BlessedDamien/tabid/311/newsid916/418/Default.aspx. பார்த்த நாள்: 2010-07-21. 
 26. "Vatican Votes To Elevate Father Damien To Sainthood". KITV Honolulu. www.kitv.com. Archived from the original on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 27. "Le Père Damien proclamé saint", Le Soir, 2009-10-11, archived from the original on 2009-10-14, பார்க்கப்பட்ட நாள் 2012-10-17
 28. Sweas, Megan. "Obama Says St. Damien Gave Voice to Voiceless, Dignity to the Sick." பரணிடப்பட்டது 2012-04-07 at the வந்தவழி இயந்திரம் Catholic News Service. October 14, 2009.
 29. "Father Damien". Capitol Campus/Art. The Architect of the Capitol. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 30. "Molokai, la isla maldita (1959)". Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 31. கென் ஹௌவர்ட்
 32. "Father Damien: The Leper Priest (1980) (TV)". Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 33. "Molokai: The Story of Father Damien (1999)". Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
 34. "Pater Damiaan "de Grootste Belg aller tijden"" (in Dutch). NOS. 2 December 2005. Archived from the original on 2014-04-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 35. These include: "Father Damien, Aid to Lepers, Now a Saint"[தொடர்பிழந்த இணைப்பு]. அசோசியேட்டட் பிரெசு. October 11, 2009; De Volder, Jan and John L. Allen, Jr. (FRW). The Spirit of Father Damien: The Leper Priest. Ignatius Press, 2010. p. x; Haile, Beth. "Articulating a Comprehensive Moral Response to HIV/AIDS in the Spirit of St. Damian of Molokai". CatholicMoralTheology.com. May 10, 2011; "Brief Biography of St. Damien of Molokai" பரணிடப்பட்டது 2012-02-11 at the வந்தவழி இயந்திரம். St. Damien Catholic Church, Oklahoma City, OK; "The Canonization of Father Damien". FlandersHouse.org.
 36. Donadio, Rachel. "Benedict Canonizes 5 New Saints". த நியூயார்க் டைம்ஸ். October 11, 2009.
 37. Damien Ministries – Washington, D.C. பரணிடப்பட்டது 2011-11-08 at the வந்தவழி இயந்திரம்; Damien Center – Central Indiana; Albany Damien Center – Albany, New York; Schenectady Damien Center – Schenectady New York பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம்.தமியானின் பெயரைத் தாங்கும் மருத்துவ மையங்கள்
 38. Damien Chapel பரணிடப்பட்டது 2012-10-14 at the வந்தவழி இயந்திரம் – புனித தோமா எப்பிஸ்கோப்பல் கோவில்
 39. "St. Thomas the Apostle – History". Archived from the original on 2012-10-14. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
 40. "Damien House, Ireland "". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-10-17.
 41. Biography by Architects of the Capitol

ஆதாரங்கள் தொகு

மேல் ஆய்வுக்கு தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Father Damien
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை_தமியான்&oldid=3793940" இலிருந்து மீள்விக்கப்பட்டது