தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு

தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை
(தந்தை பெரியார் அரசு மருத்துவமனை, ஈரோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தந்தை பெரியார் ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனையாகும். இது நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கும், புகைவண்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையாக அமைந்துள்ள இந்த மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பெயர்க்காரணம்

தொகு

ஆரம்ப காலங்களில் ஈரோடு நகருக்கான அரசு மருத்துவமனை பன்னீர்செல்வம் பூங்கா அருகிலுள்ள கனி மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது. நகர வளர்ச்சிக்கேற்ப மருத்துவமனையை மேம்படுத்த வேண்டியும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் இம்மருத்துவமனை தற்போதுள்ள இடத்திற்கு மாற்ற 1950 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அரசானது மக்களின் பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் கட்ட வேண்டும் என்று கூறியது. அன்றைக்கு ஈரோடு நகரின் முக்கிய பிரமுகர்கள் தந்தை பெரியாரிடம் சென்று , "நாம் அனைவரும் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டி இந்த மருத்துவமனையை கொண்டு வரலாம்" என்று கூறியபோது, தந்தை பெரியார், "நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள்? அந்த ஒரு இலட்சம் ரூபாயை நானே கட்டுகிறேன்" என்று சொல்லி, அந்த பணத்தை அரசுக்கு செலுத்தியதன் விளைவாக[சான்று தேவை], இம்மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு ஈரோட்டுக்கு பயன்பாட்டிற்கு வந்து , "தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை" என்ற பெயருடன் தற்போது இயங்கி வருகிறது.

வசதிகள்

தொகு

இம்மருத்துவமனை, 608 படுக்கை வசதி கொண்டதாகும். மேலும் இங்கு அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலம், மகப்பேறு, கண் சிகிச்சை, மன நோயாளிகள் பிரிவு, காசநோய் பிரிவு, எம்ஆர்ஐ., ஸ்கேன், எக்ஸ்ரே வசதி , டயாலிசஸ் மற்றும் பாலியல் தொற்று நோய் சிகிச்சை பிரிவு என ஒவ்வொரு வியாதிக்கென்றும் தனித்தனி பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளுமாக பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88 மருத்தவ பணியிடங்களைக் கொண்ட இங்கு சுமார் 86 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை

தொகு

இந்த அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பொருட்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியினால் 2019ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு[1] அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து முதுநிலை மருத்துவ சிகிச்சைகளும் அதற்கான வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி 8 தளங்களுடன் உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பலநோக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் மேலும் 500 படுக்கை வசதிகளும் 124 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.[2]

ஏப்ரல் 2020 இல், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்துக்கான கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான கொரோனா சிறப்பு மருத்துவமனையாக இந்த மருத்துவமனை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பதாக ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.[3]

மேலும் பார்க்க

தொகு

அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. "பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்வு: ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.67.46 கோடி மதிப்பில் கட்டமைப்பு வசதி".
  2. (PDF) https://cms.tn.gov.in/sites/default/files/go/hfw_t_520_2019.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "அரசாணை".